புதன், 2 டிசம்பர், 2020

நீதிபதி சி.எஸ். கர்ணன் சென்னையில் கைது

கர்ணன்

BBC : உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், அவர்களின் குடும்பத்தினர் தொடர்பாக அவதூறு காணொளியை வெளியிட்ட விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி சி.எஸ். கர்ணனை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவினர் கைது செய்துள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், அவர்களின் குடும்பத்தினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும் பாலியல் ரீதியாக அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் பேசியதாக கர்ணன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது செயல்பாடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கர்ணன் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், இப்படி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது கர்ணனுக்கு முதல் முறை அல்ல.                          3 ஆண்டுகளுக்கு முன்பே உயர் நீதிமன்ற நீதிபதி பதவி வகித்தபோதே அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்கு ஆளானார். அந்த வகையில் சர்ச்சைகளுடன் தமது சட்டத்துறை வாழ்க்கையை நடத்தி வந்திருக்கிறார் கர்ணன்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கர்நாதம் கிராமத்தில் 1955ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி பிறந்தவர் கர்ணன். மங்களம்பேட்டை அரசு பள்ளியில் படித்த இவர், சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் பி.எஸ்சி பட்டப்படிப்பையும், சென்னை சட்டக்கல்லூரியில் பி.எல் சட்டப்படிப்பையும் 1983ஆம் ஆண்டில் முடித்தார்.

தொடக்கத்தில் கருணாநிதி என்ற பெயருடன் அழைக்கப்பட்ட இவர், நியூமராலஜி காரணங்களுக்காக கர்ணன் என்று பெயர் மாற்றிக் கொண்டார். சட்டப்படிப்பு முடித்த பிறகு வழக்கறிஞராக பதிவு செய்து கொண்ட அவர், சென்னை குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சிவில் வழக்குகளில் அரசு வழக்கறிஞராகவும், மத்திய அரசு நிலைக்குழு வழக்கறிஞராகவும் இருந்திருக்கிறார். இவ்வாறு 26 ஆண்டுகளாக அவர் வழக்கறிஞர் தொழில் செய்து வந்தார்.

2009ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி அசோக் கங்குலி, கர்ணனை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க நீதிபதிகள் நியமன தேர்வுக்குழுவுக்கு பரிந்துரை செய்தார். அவரது நியமனத்துக்கு உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான நீதிபதிகள் நியமன தேர்வுக் குழு பரிந்துரை செய்தது.

முதல் சர்ச்சை

2011ஆம் ஆண்டில், தன்னை பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற முறையில் பிற நீதிபதிகள் சிறுமைப்படுத்துவதாகக் கூறி தேசிய தாழ்த்தப்பட்டோர் வகுப்பினருக்கான ஆணையத்திடம் எழுத்துப்பூர்வமாக புகார் அனுப்பினார் கர்ணன். 2009ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் நீதிபதி ஆக பதவியேற்றது முதல் இந்த அவமானம் தொடர்வதாக அவர் அதில் கூறியிருந்தார். அவரது புகாரை அந்த ஆணையத்தின் தலைவர் பி.எல். பூனியா, உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி ஹெச்.எஸ். கபாடியாவுக்கு அனுப்பி வைத்தார்.

ஒரு நீதிபதியாக இருப்பவர், தனது புகார் தொடர்பாக நீதிபதிகள் விவகாரங்களுக்கு பொறுப்பில் இருக்கும் தலைமை நீதிபதிக்கு அனுப்பாமல் நேரடியாக தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு அனுப்பியதாக கர்ணனுக்கு எதிராக முதல் சர்ச்சை அப்போதுதான் வெடித்தது.

கர்ணன்

அடுத்தடுத்த சர்ச்சைகள்

2013ஆம் ஆண்டில் நீதிபதி கர்ணன் ஒரு வழக்கில் தீர்ப்பளித்தார். அதில், ஒரு பெண்ணுக்கு திருமண ஆசை கூறி அவருடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் 21 வயதாகும் ஆணின் செயல் குறித்த ஆதாரத்துடன் சிவில் நீதிமன்றத்தில் முறையிட்டால், அந்த பெண் மனைவிக்குரிய அந்தஸ்தை பெறலாம் என்று கூறியிருந்தார். இந்த தீர்ப்பும் அதற்கு பிறகு கர்ணன் அளித்த விளக்கமும் சர்ச்சையானது. தனது தீர்ப்பால் எந்த மதத்தையும் சிறுமைப்படுத்தவோ களங்கப்படுத்தவோ நினைக்கவில்லை என்று கர்ணன் கூறினார்.

2014ஆம் ஆண்டில் சில மாவட்ட நீதிபதிகளின் நியமனம் தொடர்பான மனுவை விசாரித்து வந்த நீதிபதிகள் அமர்வில் திடீரென நுழைந்த நீதிபதி கர்ணன், மற்ற நீதிபதிகளின் செயல்பாடுகளை பொதுப்படையாக விமர்சித்து குற்றம்சாட்டினார். அசாதாரணமாக நடந்த அந்த சம்பவம் பலத்த சர்ச்சையானது. அவரது செயல்பாட்டால் நீதித்துறையின் நன்மதிப்பு களங்கப்படலாம் எனக்கூறி அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.கே. அகர்வால் கடிதம் எழுதி, கர்ணனை வேறு மாநிலத்துக்கு இடமாற்றும் செய்யுமாறு கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை பொய் என்று நிரூபிக்க சென்னையிலேயே பணியாற்ற விரும்புவதாக உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு கர்ணன் கடிதம் எழுதினார். மேலும், தகவல் அறியும் உரிமை சட்டப்படி மாவட்ட நீதிபதிகள் நியமன நடைமுறைகள் தொடர்பாக பதில் கேட்டு அவர் விண்ணப்பம் அளித்தார். இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் 20 நீதிபதிகள் குழுவாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பி கர்ணனை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரினார்கள்.

2014ஆம் தேதி ஆகஸ்ட் மாதம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக கெளல் நியமிக்கப்பட்டார். அதன் பிறகும் நீதிபதிகள் மீதான தமது குற்றச்சாட்டுகளையும் பொதுப்படையான விமர்சனங்களையும் நீதிபதி கர்ணன் கைவிடாமல் தொடர்ந்தார்.

கர்ணன்

2015ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த ஒரு நீதிபதி தன்னிடம் பயிற்சிக்கு வந்த வழக்கறிஞரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டார். ஆனால், அதற்கான ஆதாரத்தை அவர் வெளியிடவில்லை. அதே ஆண்டில் தனக்கு முக்கியத்துவம் இல்லாத வழக்குகள் ஒதுக்கப்படுவதால் விடுப்பில் செல்வதாகக் கூறி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கெளலுக்கு கர்ணன் கடிதம் அனுப்பி விட்டு விடுப்பில் சென்றார்.

2016ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக்குழு பரிந்துரைப்படி, கர்ணனை சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு குடியரசு தலைவர் இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். ஆனால், அங்கு சென்ற பிறகும் அவர் தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் தொடர்பான விமர்சனங்களை அவ்வப்போது வெளியிட்டு வந்தார்.

2017ஆம் ஆண்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதிய கர்ணன், அதில் 20 நீதிபதிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் ஊழலில் ஈடுபடுவதாக பட்டியலிட்டார். சர்ச்சைக்குரிய அந்த தகவல்கள் தொடர்பாக கடிதம் அனுப்பிய தகவலை அவர் ஊடகங்களிடம் வெளியிட்டார்.

கர்ணனின் நடவடிக்கை தொடர்பாக அதிருப்தி அடைந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், கர்ணனுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்து அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராகவும் மேலும் ஏழு நீதிபதிகளுக்கு எதிராகவும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை சட்டப்படி ஐந்து ஆண்டுகளுக்கு தண்டனை விதிக்கும் உத்தரவை கர்ணன் பிறப்பித்தார். அவரது நடவடிக்கையை பின்னாளில் உச்ச நீதிமன்றம் செல்லாது என்று அறிவித்தது. மேலும் நீதிபதி கர்ணனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக தொடர்ந்த உச்ச நீதிமன்றம் அதில் அவர் நேரில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது.

அந்த உத்தரவை மதிக்கத் தவறியதால், 2017ஆம் ஆண்டு மே மாதம் அவருக்கு ஆறு மாதங்களுக்கு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவுக்குப் பிறகு தலைமறைவான கர்ணன் எங்கிருக்கிறார் என்பதே தெரியாத நிலையில், அவரது பதவிக்காலம் நிறைவுக்கு வந்த ஒரு வாரம் கழித்து 2017ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி கொல்கத்தா காவல்துறையினர் கோயம்புத்தூரில் உள்ள வீட்டில் வைத்து அவரை கைது செய்தனர். ஆறு மாத சிறை தண்டனை முடிந்து அவர் அதே ஆண்டு டிசம்பர் மாதம் விடுதலையானார்.

இதன் மூலம் பதவியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதும், அவர் ஆறு மாத சிறை தண்டனையை அனுபவித்ததும் இந்திய சட்டத்துறை வரலாற்றிலேயே முதலாவது நிகழ்வாக அமைந்தது.

சமீபத்திய சர்ச்சை

இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு கர்ணன் காணொளியொன்றில் தோன்றி உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகள்,அவர்களின் குடும்பத்தினர் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர். ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தில் கர்ணன் மீதான நடவடிக்கை தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக காவல்துறை தலைமை இயக்குநர், சென்னை நகர காவல்துறை ஆணையாளர் ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டது.

இதற்கிடையே, தமிழக காவல்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், முன்னாள் நீதிபதி கர்ணனிடம் இந்த விவகாரம் தொடர்பாக இரு முறை விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது வழக்கறிஞர் சங்கம் சார்பில், காவல்துறை விசாரணையில் கர்ணன் தனது செயலை ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி கர்ணனை ஏன் கைது செயக்கூடாது என்று அரசிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்தப்பின்னணியில் அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ஆவடியில் உள்ள வீட்டில் கைது செய்திருக்கிறார்கள்

கருத்துகள் இல்லை: