புதன், 2 டிசம்பர், 2020

பாமக வலுவான மாவட்டங்களில் படிப்பறிவு குறைவு? பள்ளி இடைநிற்றலும் அதிகம்? தமிழக அரசு புள்ளி விபரங்கள்

 

tharmenthiran L பாமக வலுவாக இருக்கும் பெரும்பாலான மாவட்டங்களில் படிப்பறிவு குறைவாகவும்.. பாதியில் பள்ளி இடைநின்றலும் அதிகமாக இருப்பதாக தமிழக அரசு புள்ளி விபரங்கள் ....
அதற்காண விழிப்புணர்வை 30"ஆண்டுகளாக பாமக முன்னெடுக்கவில்லையே ஏன்?               
அது போன்ற ஒரு முன்னெடுப்பினால் மட்டும்தானே எந்த சமூகமும் முன்னேற முடியும்?   
90"களில் இருந்த அரசு வேலைவாய்ப்பு 2020"ல் குறைந்து தனியார் வேலைவாய்ப்புக்களே தற்போது அதிகரித்து வருகிறது.
இந்த சூழலில் படிக்காத பாதியில் நிறுத்திய வாரிசுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தால் 20% இடஒதுக்கீடு பெற்றாலும் வன்னிய சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட சாரரே பயன்  பெறபோவதால் எப்படி ஒட்டுமொத்த சமூகமும் முன்னேற முடியும்?

மருத்துவர் அய்யா அறக்கட்டளை தொடங்கி பல்லாயிரம் கோடிகளுக்கு வளர்ந்தும் நாற்பது ஆண்டுகளாக கரும்பு வெட்டும் கல்லுடைக்கும் சித்தாள் கொத்தனார் வேலைக்கு செல்லும் அடித்தட்டு மக்கள் மேம்படவும்,
அவர்கள் சுயதொழில் செய்யவும்,   அவர்களது பிள்ளைகள் படிக்க தங்கள் பள்ளி கல்லூரிகளிலும் வாய்ப்பு தந்து இருக்கிலாமே?
மருத்துவர் அய்யாவின் அறக்கட்டளை மூலம் ஒட்டுமொத்த சமூகமும் முன்னேற அரசு உதவியின்றியே குறிப்பிட்ட சதவிகித மக்களை நாற்பதாண்டுகளில் கைதூக்கி விட்டிருக்கிலாமே?

பசுமை தாயகம் இயக்கம் தொடங்க மரக்கன்றுகளை நடும் அய்யா.. ஏன் இதுபோன்ற படிப்பறிவு இல்லாத பகுதிகளில் பள்ளிகள் தொடங்கவில்லை
சிறு சிறு சாதிகள் கூட கல்விக்காக ஆயிரக்கணக்காண அறக்கட்டளையை தொடங்கி அச்சமூக ஏழைகளுக்கு இலவச கல்வி தரும்பொழுது
அய்யா பெரும்பான்மை சமூகப் பிரதிநிதி ஆச்சே?
நாற்பதாண்டுகளில் நாலு லட்சம் சமூக ஏழைகளை முன்னேற்றி இருக்கலாமே?


தினமலர் : வ ன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் நேற்று தமிழகம் முழுதும் நடந்த போராட்டத்தில் 10 ஆயிரம் பேரும் சென்னை மற்றும் புறநகரில் 3000 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். போராட்டத்தின்போது ரயில் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய பா.ம.க.வினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருடன் வாக்குவாதம் நடத்தி ரகளையிலும் ஈடுபட்டனர். இதனால் பஸ், கார் உள்ளிட்ட வாகன போக்குவரத்து தடைப்பட்டு பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பா.ம.க.வின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் அன்புமணி தலைமையில் நடந்த இந்த போராட்டத்தின் வாயிலாக அவர் 'மாற்றம், முன்னேற்றம்' என்ற பாதையை விட்டு விலகி அழிவு பாதையை நோக்கி செல்கிறார் என்ற விமர்சனம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. சென்னையில் பல்லவன் இல்லம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சி இளைஞரணி தலைவர் அன்புமணி தலைமை வகித்தார். வட மாவட்டங்களில் இருந்து பா.ம.க.வினர் நேற்று காலை கார், வேன், பஸ் போன்ற வாகனங்களில் சென்னை வந்தனர்.

சென்னைக்கு வராதபடி அவர்களை அந்தந்த மாவட்ட போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகில் சாலை மறியலில் பா.ம.க.வினர் ஈடுபட்டனர். சென்னை மற்றும் புறநகரில் 78க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் நடந்தது.இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புறநகர் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது.

கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு செல்லும் ரயில்கள்; சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் திருவள்ளூர் செல்லும் ரயில்கள் மற்றும் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய சிறப்பு ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது.இதனால் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அரசு, தனியார் மருத்துவமனைக்கு செல்கிற நோயாளிகள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் பரிதவித்தனர். கொரோனா புயல் மழையால் ஏற்கனவே சென்னை மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பா.ம.க. போராட்டத்தால் நேற்று பொது மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் பெரிதும் பாதித்தது.

ரயில் மறியலில் ஈடுபட்ட பா.ம.க.வினர் மீது ரயில்வே போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழகம் முழுதும் மறியலில் ஈடுபட்ட 10 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை மற்றும் புறநகரில் மட்டும் 3000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வரும் சட்டசபை தேர்தலில் வன்னியர் சமுதாய ஓட்டுக்களை கவரும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்படுவதாக பா.ம.க. மீது விமர்சனம்எழுந்துள்ளது. தொடர்ந்து தோல்வி காண்பதால் வெற்றி பெறுவதற்காக இட ஒதுக்கீடு போராட்டத்தை பா.ம.க. கையில் எடுத்துள்ளது என சில கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

'தேர்தலுக்காகவோ அரசியலுக்காகவோ இந்த போராட்டம் நடத்தவில்லை' என அன்புமணி விளக்கம் அளித்தார். கடந்த சட்டசபை தேர்தலில் 'மாற்றம் முன்னேற்றம் அன்புமணி' என்ற கோஷம் அறிவிக்கப்பட்டு அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராகவும் முன்னிறுத்தப்பட்டார். வரும் சட்டசபை தேர்தலுக்கும் அன்புமணியே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் நேற்று அவர் தலைமை வகித்து நடத்திய போராட்டத்தாலும் அதில் வெடித்த வன்முறையாலும் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 'மாற்றம் முன்னேற்றம்' என்ற பாதையிலிருந்து விலகி அரசியலில் அழிவு பாதையை நோக்கி அன்புமணி செல்கிறார் என பொது மக்கள் விமர்சனம் செய்தனர்.


வன்முறைக்கு எதிரானவர்கள்: சொல்கிறார் அன்புமணி

''நாங்கள் வன்முறைக்கு எதிரானவர்கள்'' என பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி கூறினார்.

வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பின் தலைமைச் செயலகம் சென்று முதல்வரை சந்தித்து அன்புமணி மனு அளித்தார்.அதன்பின் அவர் அளித்த பேட்டி: முதல்வரையும் துணை முதல்வரையும் சந்தித்தோம். வன்னியர்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசு பணியாளர் தேர்வாணையத்தில் 1989ல் இருந்து இன்று வரை எந்தெந்த சமுதாயத்திற்கு எத்தனை இடங்களை இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பியுள்ளனர் என்ற விபரத்தை கேட்டுள்ளோம்.

கடந்த ஆண்டு அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்கு முன் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்பது உட்பட பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி முதல்வரிடம் மனு அளித்தோம். மூன்று மாதங்களுக்கு முன் பா.ம.க. பொதுக்குழுவில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு தெரியப்படுத்தினோம்.

சென்னையில் அறவழி ஆர்ப்பாட்டம் நடத்தினோம். வரும் வழியில் பா.ம.க. தொண்டர்கள் காவல் துறையினரால் நிறுத்தப்பட்டனர். ஆர்ப்பாட்டம் நடந்த நேரத்தில் முதல்வர் அழைத்து கோரிக்கை மனுவை கொடுக்கும்படி கூறினார். அதன்படி முதல்வரை சந்தித்தோம். எங்கள் கோரிக்கையை எடுத்துரைத்தோம். இது ஜாதி பிரச்னை அல்ல. யாருக்கும் எதிரான போராட்டம் அல்ல. எந்த அமைப்புக்கும் ஜாதிக்கும் அரசியல் கட்சிக்கும் எதிரான போராட்டம் அல்ல. இது சமூக நீதி பிரச்னை. இதை தமிழகத்தின் வளர்ச்சி பிரச்னையாக பார்க்க வேண்டும்.

தமிழகத்தில் நான்கில் ஒரு பங்கு வன்னியர் உள்ளனர். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். கூலி வேலை செய்கின்றனர். மிக பின்தங்கிய சமுதாயமாக உள்ளது. அவர்கள் வசிக்கும் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் இல்லை. கல்வியில் கடைசி ஏழு மாவட்டங்கள் வட மாவட்டங்களாக உள்ளன. தொழிலிலும் பின்தங்கியுள்ளன. இந்த சமுதாயம் முன்னேறினால் தான் தமிழகம் முன்னேறும் என எடுத்துரைத்தோம். முதல்வரும் நல்ல முடிவை அறிவிப்பேன் என உறுதி கொடுத்துள்ளார்.

வன்னியர் சமுதாயத்தை வன்முறை சமுதாயம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டாம். நாங்கள் வன்முறைக்கு எதிரானவர்கள்; எந்த தவறும் நடக்கக் கூடாது என்பவர்கள். யாரோ செய்ததை வைத்து எங்களை வன்முறையாளர்களாக கருத வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.


'இப்படியெல்லாம் கேட்க கூடாது!'

ரயில் மீது கல் வீசி பா.ம.க.வினர் வன்முறையில் ஈடுபட்டது குறித்து அன்புமணியிடம் கேட்டதற்கு யாரோ செய்ததாக தெரிவித்தார். வன்முறையில் ஈடுபட்டோர் பா.ம.க. கொடி மற்றும் டி - ஷர்ட் அணிந்திருந்தது குறித்து கேட்டதற்கு கோபமடைந்த அன்புமணி பதில் அளிக்காமல் பத்திரிகையாளர் சந்திப்பை முடித்து கொண்டார்.அவருடன் வந்த நபர் ஒருவர் 'இப்படி எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது' என செய்தியாளர்களை மிரட்டினார்.


இதுவா அமைதி?

அமைதி போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்த நிலையில் அக்கட்சியினர் அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டனர்.குறிப்பாக ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு வந்த விரைவு ரயிலை பெருங்களத்தூர் அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறித்தனர். அவர்கள் கலைந்து செல்லும் வகையில் ரயில் ஓட்டுனர் ஒலி எழுப்பியவாறே மெதுவாக சென்றார்.இதில் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் ரயில் மீது கல் வீசி தாக்கினர். மேலும் தாம்பரம் - செங்கல்பட்டு ரயில் சேவை பாதிப்படைய செய்யும் வகையில் தண்டவாளத்தில் கட்டைகள் போட்டு மறித்தனர். இதனால் மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டது.


ஆம்புலன்சுக்கு கூட வழி விட மறுப்பு!



பா.ம.க., போராட்டத்தில் பங்கேற்க, வேன், கார் மற்றும் பஸ்களில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், சென்னைக்கு அக்கட்சியினர் படையெடுத்தனர். இதையறிந்த காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட வந்தவர்களை, ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து, தடுத்து நிறுத்தினர். அப்போது, பா.ம.க.,வினர், காவல் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தடுப்புகளை துாக்கி எறிந்து, அராஜகத்தில் ஈடுபட்டனர். சாலையில் அமர்ந்து, போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்தனர்.

குறிப்பாக, சென்னை மாவட்ட எல்லையான, புது பெருங்களத்துார், ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள, இரணியம்மன் கோவில் துவங்கி, 2 கி.மீ., துாரத்திற்கு, வாகனங்கள் அணிவகுத்து நின்றன.போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், சென்னை, தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் தினகரன் தலைமையிலான போலீசார் பேச்சு நடத்தினர். அவர்கள் கலைந்து செல்லாததால், அனைவரும் கைது செய்யப்பட்டு, திருமண மண்டபங்கள் மற்றும் பள்ளிகளில் தங்க வைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, சேலையூர் அரசு பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்ட, போராட்டக்காரர்களில் ஒரு பிரிவினர், திடீரென, சேலையூர் காவல் நிலையம் முன், மறியல் செய்தனர்.இதேபோல், ஜி.எஸ்.டி., சாலையிலும், மறியல் நடந்தது. இதனால், தாம்பரம் - வேளச்சேரி, ஜி.எஸ்.டி., சாலைகளிலும், வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், வேலைக்கு செல்வோர் அவதியடைந்தனர்.

போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்த, பா.ம.க.,வினர், ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல கூட, வழி விட மறுத்தனர். அவர்களுடன் போராடி, ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு, போலீசார் வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.சேலையூர் காவல் நிலையம், சானடோரியம் மற்றும் தாம்பரம் பஸ் நிலையங்கள் முன், மறியல் நடந்ததால், காந்தி சாலை, சிட்லபாக்கம், தாம்பரம் - முடிச்சூர் சாலை போன்ற, உட்புற நெடுஞ்சாலைகளிலும், நான்கு முதல் ஐந்து கி.மீ., துாரத்திற்கு, வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

- நமது நிருபர்கள் குழு

கருத்துகள் இல்லை: