உடல் எடுக்கும் ஆத்மாவானது, எத்தனையோ ஆயிரக் கணக்கான ஜென்மங்களுக்குப் பிறகு சூத்திர உடலில் பிறப்பு எடுக்கிறது.
சூத்திர உடலில் எத்தனையோ ஆயிரம் ஜென்மங்கள் கர்ம வினை மற்றும் தர்மத்தை அனுசரித்த வித த்தைப் பொறுத்து, மறுபடியும் மறுபடியும் சூத்திரனாக ஜனிக்க வேண்டும். இப்படி எத்தனையோ ஆயிர ஜென்மங்களுக்குப் பிறகு வைசிய, சத்ரிய பிறகு பிராம்மண ஜென்மம் எடுக்க வேண்டும். அதன் பிறகே பிறவா நிலை அடைவதற்கான முதல் தகுதியே ஏற்படுகிறது.
சனாதனவாதி எனில், முதலில் ஆத்மா உண்டு என நம்ப வேண்டும். பிறகு மறு பிறவிகளை நம்ப வேண்டும். கர்மா தியரியை நம்ப வேண்டும். புனிதம் தீட்டு இவற்றயும் நம்ப வேண்டும்.நல் வினை தீய வினை இவற்றை நம்ப வேண்டும்.பல யுகங்களை நம்ப வேண்டும்.யுகங்கள் தோறும் கடைப் பிடிக்க வேண்டிய தர்மங்களை நம்ப வேண்டும்.பல்வேறு லோகங்களை நம்ப வேண்டும். இப்போது நாம் எடுத்துள்ள பிறவியே எத்தனை ஆயிரம் ஜென்மங்களுக்குப் பிறகோ தெரியாது என்பதை நம்ப வேண்டும். கர்மங்களில் எத்தனையோ வகை உண்டு என்பதை நம்ப வேண்டும். சனாதன தர்மம் பிறப்பினால் நிச்சயிக்கப் படுவது என நம்ப வேண்டும்.தர்மம் என்பது ஆளைப் பொறுத்து மாறுபடுவது என நம்ப வேண்டும். புண்ணியம் பாவம் இவற்றையும் நம்ப வேண்டும்.தோஷம் பரிகாரம் இரண்டையும் நம்ப வேண்டும்.
ஒரே குற்றத்திற்கு ஆட்களுக்கு ஏற்றவாறு தண்டனை மாறுபடும் என்பதையும் அதுவே தர்மம் என ஒப்புக் கொள்ள வேண்டும். தர்மம் பல வகைப்படும் அதில் சனாதன தர்மம் என்பது வர்ணாசிர தர்மத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது என நம்ப வேண்டும். வர்ணாசிரமத்தை அதாவது நால் வர்ணத்தை கடவுளே பிரித்தார் என நம்ப வேண்டும்.
தர்மம் சார்ந்தே ஆன்மீகம் இயங்குகிறது. உடல் இல்லாத ஆத்மாவிற்கு ஜாதி வர்ணம் இல்லையென்றாலும் அது உடல் எடுக்கும் போது வர்ணமும் ஒட்டிக் கொள்கிறது. சனாதன நூல்களைப் பொறுத்த வரை உடலில் ஆன்மா உள்ள வரை அதற்கான தர்மம் வர்ண பாகுபாட்டை கடந்தே ஆக வேண்டும் என்கின்றன சனாதன நூல்கள். மரித்தபின்பு ஆத்மாவிற்கு எந்த பாகுபாடும் வித்தியாசமும் இல்லையாம். இறந்த பின்பு என்ன நடக்கும் என்பதை இதுவரை ஒருவரும் திரும்பி வந்து கூறவில்லை.
சொர்க்கம் நரகம் முதல் பல்வேறு லோகங்கள் இருப்பதாக ஒப்புக் கொள்ள வேண்டும்.
மற்ற மதங்களில் இந்தப் பூவுலகைத் தவிர சொர்க்கம் நரகம் என இரண்டு உண்டென்கின்றன. ஆனால் சனாதனம் கீழே பாதாள லோகம், அதி பாதாள லோகம் என பல லோகங்களையும் மேலே பித்ருலோகம்,
சொர்க்க லோகம், சத்ய லோகம் என பல லோகங்களைக் கூறுகிறது.
ஆன்மாவிற்கு நல்லதோ கெட்டதோ ஒன்றும் இல்லை, ஆனால் அது எடுத்துள்ள தேகத்தின் வழியே அதாவது தேகத்தின் புலன்களின் வழியே இன்பம் துன்பத்தை நுகர்கிறது என்கிறது சனாதனம். அப்போ உடல் அனுபவிக்கும் அனைத்தும் ஆத்மாவையும் சேர்கிறது என்றுதானே பொருள்?!
ஆத்மாவை நம்புவதால் அடுக்கடுக்காக பலவற்றை நாம் நம்பியே ஆக வேண்டும். இந்த ஆத்மா நம்பிக்கை முற்றிலுமாக தனி ஒருவரின் தன்னம்பிக்கையைச் சிதைக்கிறது. அவனை தேவையில்லாத பல நம்பிக்கைகளுக்கு இட்டுச் செல்கிறது.ஒருவரது self confidence மற்றும் self esteem இரண்டிற்கும் அது வேட்டு வைக்கிறது.முடிவே இல்லாத பல நம்பிக்கைகளுக்கு இது நம்மை இட்டுச் செல்கிறது, உதாரணம்: கடவுள், பேய்!
இப்படி எந்த வகையில் பார்த்தாலும் ஆத்மாவைப் பற்றியுள்ள ‘ஆன்மீகம்’ ஒரு மோசமான சொல்லே!
பிறவியே இல்லாத நிலைக்கு ஆத்மா பல ஆயிரக் கணக்கான ஜென்மங்களுக்குப் பிறகு அடையப் போகும் நிலையை வீடு பேறு, பிரம்மம் அல்லது முக்தி நிலை என்கிறார்கள். வர்ணாஸ்ரம அடுக்கு போன்று உடலில் இருந்து ஆத்மா பிரிந்த பிறகு, பிதுர்கள் தொடங்கி,
பல்வேறு அடுக்குகளைத் தாண்டி தேவர்கள், கிங்கரர்கள, தேவ கணங்கள்,
ஜீவன் முக்தர்கள்,ரிஷிகள் என பல நிலைக்களை ஆத்மா கடந்தாக வேண்டும், பிறவிப் பயனை அடைவதற்கு!
ஆத்மா என்பதை உடலில் உள்ள புலன்களால் உணர முடியாது, ஆக்கவோ அழிக்கவோ முடியாது.நியூட்டனின் மூன்றாவது விதியைப் போல அது உருமாறலாமே தவிர அழியாது. அப்படியான ஒரு கட்டமைப்பே சனாதனத்தின் ஆத்மா தியரி!
எந்தப் பிறவியுலும் ஆத்மா மேல் சந்தேகம் வந்துவிடக் கூடாது, ஆனால் அது அடுத்த நிலையினை அடைவதற்கு உடலானதை சாகும் வரை முயற்சி செய்ய வேண்டும். இதற்கான வழி முறைகளாக நான்கு ஆசிரமங்களை சனாதனம் இரு பிறப்பாளர்களுக்கு மட்டுமே கடைபிடிப்பதற்கு கூறுகிறது. அதுவே பிரம்மச்சர்யம், கிரகஸ்தம்,வனப்பிரஸ்தம்,சந்நியாசம் ஆகும். இதை இரு பிறப்பாளர்கள் அல்லாத சூத்திர ர்கள், அவர்ணர்கள்,ஸ்திரீகள் பின் பற்றுவதற்கு சனாதன தர்ம சாஸ்திர நூல்கள் தடை விதிக்கின்றன.
பெண்களால் தனி ஒருத்தியாக ஆன்மீகத்தில் உயர்வான நிலைக்கு செல்வதற்கு வாய்ப்பே இல்லை என்கிறது வைதிக சனாதனம். அவளின் ஆன்மீக வளர்ச்சி முழுமையும் அவளது பதியைச் சார்ந்தே உள்ளது, தனி ஒருத்தியாக ஆன்மா பற்றி சிந்திக்க அவளால் கூடாது என்கின்றன சனாதன நூல்கள்.
பாமர மக்களின் துயரை துடைக்காத ஆன்மீகத்தால் எந்த ஒரு பயனும் இல்லை.
மக்களிடையே உள்ள பிரிவினைகளை போக்குவதற்கு உதவாத ஆன்மீகத்தால் பைசா பிரயோசனம் இல்லை.
பிறப்பால் பிரிவினை பேசும் பிரம்ம ஞானம் விளிம்பு நிலை மக்களுக்கு உதவாதது.
இப்படியான ஆன்மீகத்தை மேன்மையானது என்றும், ஆன்மாவைப் பற்றிய அறிவைத் தேடுகிறவர்களை ஆன்மீக வாதிகள் என்றும் தவறாகவே இது வரை நம்பி வருகிறோம்.
இறப்பைப் பற்றியும் இறந்த பின்பு உள்ளதாக கருதப்படும் ஆத்மா பயனத்திற்காகவும், இப்போதுள்ள வாழ்வை அதை நோக்கியே அமைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறும் சனாதனப் பொய்யினை ஓரளவு புரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். ஆன்மீகம் பற்றிய சனாதன நூல்கள் கூறும் கருத்துக்களை எளிய முறையில் விவரிக்கும் முயற்சி இது. இது பற்றிய உங்கள் சிந்தனைகளை வரவேற்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக