வெள்ளி, 4 டிசம்பர், 2020

41 தொகுதிகள்தான் வேண்டும்.. திமுகவிடம் அடம்பிடிக்கும் காங். ..மீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளம்..

Mathivanan Maran  - tamil.oneindia.com  :சென்னை: திமுக கூட்டணியில் தங்களுக்கு கடந்த முறை போல 41 தொகுதிகளை ஒதுக்கியாக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2016 சட்டசபை தேர்தலில் காங்கிரஸுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டதாலேயே திமுக ஆட்சிக்கு வர முடியாமல் போனது என்பது விமர்சனம். ஆனால் லோக்சபா தேர்தலில் காங்கிரஸுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில் 8-ல் அந்த கட்சி வென்றது.
அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் திமுக ஆகக் கூடுமானவரை அதிக இடங்களில் போட்டியிட விரும்புகிறது. இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை குறைத்து கொடுப்பது என முடிவெடுத்துள்ளது. ஒருகட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் கூட இதனை ஏற்றுக் கொண்டதாகவே கூறப்பட்டது. 
 
இதனை உறுதிப்படுத்தும்விதமாக தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவும், திமுகவுடன் தொகுதிகள் தொடர்பாக பேரம் பேசப் போவதில்லை என கூறியிருந்தார். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் 20 முதல் 25 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பிருக்கிறது என தகவல்கள் வெளியாகின. 
இன்னும் ஒருபடி மேலே போய் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட இருக்கும் உத்தேச தொகுதிகள் பட்டியலும் கூட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி திடீரென தமது முடிவை மாற்றிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலைப் போலவே 41 தொகுதிகளை ஒதுக்கியாக வேண்டும் என முரண்டுபிடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க நேரிட்டால் திமுக அதிக இடங்களில் போட்டியிடுவது என்கிற வியூகம் தகர்ந்து போய்விடும். இதனால் காங்கிரஸ் கட்சியின் இந்த திடீர் நெருக்கடியை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக திமுக தீவிரமாக ஆலோசித்து வருகிறதாம்.


கருத்துகள் இல்லை: