மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த 6 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போலீசாரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் போராடி வருகின்றனர்.
‘6 மாதங்களுக்கு தேவையான பொருட்களுடன் வந்துள்ளோம், எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை டெல்லியிலேயே முகாமிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று விவசாயிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். ஜந்தர் மந்தர் மற்றும் ராம் லீலா ஆகிய பகுதிகளில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், டெல்லி புறநகர்ப் பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் முகாமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளின் டெல்லி சாலோ போராட்டம், சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் காணொலி வாயிலாக குருநானக் ஜெயந்தி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “விவசாயிகளின் எதிர்ப்புக்கள் குறித்து இந்தியாவிலிருந்து வெளிவரும் செய்திகளை அங்கீகரிக்காமல் என் பேச்சைத் தொடங்கினால் அது பொறுப்பானதாக இருக்காது. அங்குள்ள நிலைமை கவலை அளிப்பதாக உள்ளது. உரிமைகளைப் பாதுகாக்க நடைபெறும் அமைதியான போராட்டத்திற்குக் கனடா எப்போதும் ஆதரவளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் வியாசாயிகளுடன் ஆலோசனை நடைபெறவுள்ளது. 36 விவசாயச் சங்கங்கள் அரசின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை ஏற்றுள்ளன. வேளாண் செயலாளர் சஞ்சய் அகர்வால், கிரந்திகரி கிசான் யூனியன், ஜம்முஹாரி கிசான் சபா, பாரதிய கிசான் சபா, குல் ஹிந்த் கிசான் சபா, கிருதி கிசான் யூனியன் மற்றும் பஞ்சாப் கிசான் யூனியன் உள்ளிட்ட சங்கங்கள் ஆலோசனையில் ஈடுபடவுள்ளன.
இது தொடர்பாக பாஜக தலைவர் ஜேபி நட்டா இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பஞ்சாப் விவசாயச் சங்க கமிட்டியின் இணை செயலாளர் சுக்விந்தர் சபரான் கூறுகையில், மொத்தம் 500 விவசாயச் சங்கங்கள் உள்ளன. ஆனால் 36 சங்கங்களுக்கு மட்டுமே அழைப்பு வந்துள்ளது. எனவே அனைத்து சங்கங்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரையில் நாங்கள் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளப் போவதில்லை” என்று தெரிவித்துள்ளார். இதனால் பேச்சுவார்த்தை நடத்துவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-பிரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக