BBC :சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிக்கு சொந்தமான மண்டபத்தில் நடைபெற்று வரும் மக்கள் மன்றத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அரசியலில் களமிறங்குவது குறித்து ரஜினி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் ரஜினியின் மக்கள் மன்றத்தை சேர்ந்த சுமார் 50 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. முன்னதாக, கொரோனா பெருந்தொற்று பரவலை கருத்திற்கொண்டு இந்த கூட்டத்தில் ரஜினிகாந்த் காணொளி வாயிலாக பங்கேற்பார் என்று கூறப்பட்ட நிலையில், அவர் நேரடியாகவே பங்கேற்றுள்ளது அவரது ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை போயஸ் கார்டன் பகுதியிலுள்ள ரஜினிகாந்த் இல்லம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வரும் ராகவேந்திரா மண்டபம் உள்ளிட்ட இடங்களில் ரஜினியை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் குவிந்திருந்தனர். ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் என்பது தமிழகத்தில் தொடர்ந்து ஒரு பேசுப் பொருளாகவே இருந்து வருகிறது.
இதுவரை அரசியல் கட்சி எப்போது தொடங்கப்படும் என்றும், முழு நேர அரசியல் பிரவேசம் குறித்தும் ரஜினி எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் 2017 டிசம்பர் 31 ஆம் தேதி ரஜினிகாந்த் தான் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார்.
"எனது அரசியல் பிரவேசம் உறுதி. இது காலத்தின் தேவை" என்று அந்த அறிவிப்பின்போது அவர் பேசி இருந்தார்.
அதற்குப் பிறகும் கட்சி தொடங்குவது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில் கடந்த மார்ச் மாதம், சென்னையிலுள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விளக்கம் ஒன்றை அளித்திருந்தார்.
"என் அரசியல் குறித்து நிலவும் வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவும், எனது வருங்கால அரசியல் எப்படி இருக்கும் என்று விளக்கவுமே இந்த சந்திப்பு," என்று அப்போது அவர் தெரிவித்தார்.
தமிழக மக்களிடம் ஓர் அரசியல் எழுச்சி ஏற்பட வேண்டும் அப்போதுதான் அரசியலுக்கு வருவேன் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.
அதை தொடர்ந்து கொரோனா பொதுமுடக்கம் தொடங்கியது. இருப்பினும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அவ்வப்போது கருத்துகள் வெளியாகி வந்த நிலையில்தான், கொரோனா காலத்தில் தமது உடல்நிலை வெளியே வந்து மக்களை சந்திக்கும் வகையில் இல்லை என மருத்துவர்கள் கூறியதாக ரஜினியே தெரிவிப்பது போல சமூக ஊடகங்களில் கடந்த அக்டோபர் மாதம் செய்திகள் பரவின.
இதுகுறித்து விளக்கம் அளித்து ட்விட்டரில் பதிவிட்ட நடிகர் ரஜினிகாந்த், "என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத் தளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப் பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்." என ரஜினிகாந்த் அப்போது தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான் தற்போது தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஈடுபட்டுள்ளார். இந்த கூட்டத்தின் இறுதியில் தனது அரசியல் பிரவேசம் குறித்த முடிவை ரஜினிகாந்த் அறிவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக