காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் |
காஞ்சிபுரத்தில் தொடங்கப்பெற்ற பிராமணரல்லாதோர் அர்ச்சகர் பயற்சிப்பள்ளிக்கு, பயிற்சியளிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் என்பதும், 1973ம் ஆண்டு அமைக்கப்பெற்ற கோயில் நிலத்தை முறைப்படுத்தல் ஆலோசனைக்குழுவின் துணைத்தலைவர் மற்றும் பிராமணல்லாதோர் அர்ச்சகராகும் திட்ட ஆலோசனைக்குழுவின் உறுப்பினர் என பங்காற்றியவர் என்பதும் செங்கற்பட்டு வட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடலூர் கிராமம் மற்றும் முதலியார்க்குப்பம் ஆகிய கிராமங்களில் சுனாமி மறுவாழ்வு குடியிருப்புகள் அமைத்துக்கொடுத்தவர் என்பதும் போற்றுதலோடு குறிப்பிடத்தக்கது.
சிவா மயிலாடுதுறை : எனது பெரியப்பா - காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனகா்த்தா் 232 வது பட்டம் குருமகா சன்னதி தானம் சிவ பதம் அடைந்தார்.
சுவாமி அவர்கள் கிட்டதட்ட 21 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் குருமகா சன்னதி தானமாக பதவி ஏற்றுக் கொண்டார்.
ஆயிரக்கணக்கான ஆங்கிலம் மற்றும் தமிழ் புத்தகங்களை கற்று அறிந்தவர்.
காந்திய தத்துவத்தில் முதுகலை பயின்றவர். தமிழின் மீது தீராத காதல் உடையவர். தமிழில் முனைவர் பட்டம் பெறும் அளவிற்கு அறிவு ஆற்றல் படைத்தவர்.
கல்வி அமைச்சர் பேராசியர் அன்பழகனுக்கு சம்மந்தி - இருவரும் சந்திக்கும் பொழுது எல்லாம் சங்க இலக்கியம் பற்றியும் திருக்குறள் பற்றியும் உரையாடல் பலமாக இருக்கும்.
எங்களது குடும்பம் ஆரம்பித்து, ஆயிரக்கணக்கான திருமணங்களுக்கு சென்று உறவுகளை, நட்புகளை என்றும் போற்றுபவர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உறவுகளின் இல்லங்களுக்கு சென்று வந்தவர்.
நான் அமெரிக்கா வருவதற்கு முன்பு பெரியப்பாவோடு பல்வேறு பயணங்களை மேற்கொண்டு இருக்கிறேன். பல கிராமங்கள் ஆரம்பித்து, பெரும் நகரத்தில் உள்ள பல்வேறு சிவ ஆலயங்களுக்கு சென்று வந்து இருக்கிறேன்.
எனது மற்றோரு பேராசியர் மு .உலகநாதன் [பல ஆண்டுகள் முன்பு மறைந்துவிட்டார்] - அவர் கிட்டதட்ட 20க்கும் மேலான தமிழ் புத்தகங்களை படைத்தவர். அந்த பெரியப்பா தமிழ் புத்தகம் எழுதி, அது அச்சுக்கு வரும் முன்பு, இந்த பெரியப்பாவிடம் காண்பித்து, படித்து சரி பார்த்து, பல திருத்தங்களுக்கு பிறகு அது அச்சுக்கு வரும் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்.
எனது சகோதர்ர்கள் மற்றும் சகோதரிகளின் நட்புகள், இவருக்கும் நண்பர்கள் - யார் திருமண பத்திரிக்கை கொடுத்து விட்டாலும் - தமிழ் நாட்டில் எந்த ஊரில் இருந்தாலும் அங்கு சென்று மணமக்களை வாழ்த்தி - அவர்களுக்கு சிறிய அன்பளிப்பை அளித்தவர்.
இங்கு ஒரு முக்கியமான பதிவை நான் சொல்ல விருப்ப படுகிறேன். எனது பெரியப்பாவோடு பல முறை பேசும் பொழுது - பெரியப்பா நீங்கள் சன்னிதானம் ஆகவில்லை என்றால் என்னவாகி ஆகி இருப்பீர்கள் என்று கேட்ட பொழுது -
1960 களில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் பெற்றவுடன், மேற்படிப்பு முடித்தவுடன் அரசு வேலையில் சென்று விட்டேன். அப்படியே பேராசிரியர் ஆகி, திமுகவில் சேர்ந்து இருந்து படிப்படியாக முன்னேறி, பேராசிரியர் அன்பழகனை போல - மந்திரியாக முன்னேறி - தமிழ் மக்களுக்கு சமுதாய சேவை செய்து இருப்பேன் என்றார் - கலைஞரின் தமிழ் மீதும், பேராசிரியர் தமிழ் மீதும் நிறைந்த காதல் கொண்டவர்.
ஆம் எங்கள் குடும்பம் நீண்ட பாரம்பரிய மிக்க தமிழ் குடும்பம் - அதுவும் திமுக பாரம்பரிய மிக்க குடும்பம் எங்களது குடும்பம் என்பதற்கு பெரியப்பா மற்றோரு சாட்சி.
தமிழகம் முழுக்க பல்வேறு கடைகளுக்கு சென்று மிக அற்புதமான புத்தங்களை வாங்கி, படித்து மிகப் பெரும் நூலகத்தை காஞ்சிபுரத்தில் வைத்து இருக்கிறார். வரலாறு, தமிழ், தத்துவம், சைவம், வைணவம், பொருளாதரம், தமிழ் மற்றும் ஆங்கில இலக்கிய புத்தங்கள் ஏராளமாக வைத்து இருக்கிறார்.
நான் அமெரிக்கா வரும் நாள் அன்று விமான நிலையம் வரை வந்து, எனக்கு திருக்குறள் புத்தகத்தை பரிசு அளித்து, என்னை ஆசிர்வாதம் செய்து வழி அனுப்பினார். என்னிடம் நீ புலால் உன்று பழகி விட்டாய், போய் தொலை, ஆனால் நீ என்றும் மது அருந்த கூடாது என்று சத்தியம் வாங்கினார் - என் வாழ்நாளில் மதுவை என்றும் தொட்டது இல்லை.
எனது பெரியப்பா அரசு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். குருமகா சன்னிதானமாக கிட்டதட்ட 21 ஆண்டுகள் பதவியில் இருப்பவர் - இன்று வரை காஞ்சிபுரம் மடத்திற்கு இருக்கும் வங்கி கணக்கில் ஒரு ரூபாய் கூட அவர் செலவிற்கு எடுத்தது இல்லை! இவர் அதிகாரத்தின் கீழ் எண்ணற்ற நிலங்களும், கட்டிடங்களும், வங்கி கணக்குகள் இருந்தாலும், தனக்கென்று எதுவும் காஞ்சிபுர தொண்டை மண்டல நிதியை தொட்டது இல்லை!
சனவரி 2020 தமிழகத்தில் அவரை சந்தித்து உரையாடிய பொழுது - முன்பு போல நிறைய படிக்க முடியவில்லை - வயோதிகம் ஆகிவிட்டது - பூமிக்கு பாரமாக இருக்க முடியவில்லை - விரைவில் விடைப்பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார் - ஏன் பெரியப்பா அப்படி சொல்லுகிறீர்கள் என்றேன் - அதற்கு அவர் இருந்தால் பிறருக்கு உதவியாக இருக்க வேண்டும் - யாருக்கும் பாரமாக இருக்க கூடாது என்றார்.
சென்ற மாதம் 88 வயது முடிந்து, 89 வயது ஆரம்பம் - அவரது விருப்பப்படியே இயற்கையோடு கலந்து விட்டார்.
கடந்த ஒரு வாரமாக பெரியப்பாவை அடிக்கடி சென்று பார்த்து வந்த எனது மூத்த சகோதரர் குமார் அண்ணன், எனது இளைய சகோதரர் கார்த்தி மற்றும் சேவ்வேள், மதுரை செல்வி அக்கா - பெரியப்பாவின் இறுதி நாட்களில் அவரோடு இருந்து இருக்கிறார்கள். நான் இங்கு அமர்ந்துக் கொண்டு அவர்களோடு பேசி பேசி தகவல் அறிந்துக் கொள்வதை தவிர வேறு என்ன செய்ய முடியும்?
சென்றவாரம் பெரியப்பா மருத்துவமனையில் இருந்த பொழுது கிட்டதட்ட 30 நிமிடங்கள் பேசிக் கொண்டு இருந்தேன். என் வாழ்நாளில் மறக்கா முடியாத உரையாடல் அது.
மதுரை மாவட்டத்தில் பிறந்து, கல்வி கற்று, சென்னையில் அரசு வேலைப்பார்த்து, ஓய்வு பெற்று - தொண்டை மண்டல ஆதினமாக தனது வாழ்வை நிறைவு செய்து விட்டார் எனது பெரியப்பா.
ஓன்றா உலகத்து உயர்ந்த புகழ்ல்லால்
பொன்றாது நிற்பதொன்று இல் [புகழ் 233]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக