minnambalalam :கொங்கு மண்டல திமுக நிர்வாகிகள் கூட்டத்தை வருகிற அக்டோபர் 21ஆம் தேதி அறிவாலயத்தில் கூட்டியிருக்கிறார் திமுக தலைவர் மு க ஸ்டாலின்.
இன்று (அக்டோபர் 14) திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்.... "திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் செயலாளர்கள்/பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் 21ஆம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. கூட்டத்தில் தொடர்புடைய பொறுப்பாளர்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.` இப்படி ஒரு கூட்டம் நடத்தப்படுகிறது என்பது பகுதி திமுக மாவட்ட செயலாளர்கள் யாருக்கும் அறிவிப்பு வரும் வரை தெரியவில்லை. அதனால், 21ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்த மாவட்ட செயலாளர்கள் இப்போது அந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார்கள்.
பொதுவாகவே கொங்கு பகுதியில் அதிமுக வலுவாக இருக்கிறது என்பது கடந்த பல தேர்தல்களில் நிரூபிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கொங்கு மண்டலம் உள்ளிட்ட அனைத் து மண்டலங்களிலும் வெற்றிபெற்றது. அதேநேரம், சட்டமன்றத் தேர்தலில் கொங்கு பகுதியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் திமுக இருக்கிறது. காரணம்...எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு கொங்கு பகுதியில் அதிமுக தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் சில மாதங்களுக்கு முன், திமுக தலைமைக்கு கொடுத்த அறிக்கையில் கொங்கு மண்டலத்தில் திமுகவின் வாக்கு வங்கி 3 சதவீதம் சரிந்து இருப்பதாக குறிப்பிட்டு காட்டியிருந்தார். இதுபற்றி மின்னம்பலம் இணைய இதழில் ஏற்கனவே கொங்கு சர்வே: திமுக அதிர்ச்சி என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இதற்கிடையில் திமுகவின் தலைமை கழக முதன்மைச் செயலாளர் கே என் நேரு கடந்த ஆகஸ்டு மாதம் 19 ஆம் தேதி திருப்பூர் மாவட்ட திமுக வின் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது திருப்பூர் மாவட்ட திமுக வின் பல்வேறு பிரச்சினைகளை நிர்வாகிகள் எடுத்துக் கூறினார்கள். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது அவர்களிடம் உறுதி அளித்துச் சென்றார் நேரு. ஆனால் அவர் சொன்னபடி எந்த மாற்றமும் திருப்பூர் திமுகவில் நிகழவில்லை.
திருப்பூர் திமுக ஆய்வை அடுத்து ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய கொங்கு மாவட்டங்களில் கட்சி நிலவரம் குறித்து ஆய்வு செய்ய திட்டமிட்டிருந்தார் நேரு. ஆனால் ஆகஸ்டு 20 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் ரகுமான் கான் மறைவை ஒட்டி திமுகவின் நிகழ்ச்சிகள் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டன. அதனால் இந்த ஆய்வுக் கூட்டங்கள் நடக்கவில்லை.
கடந்த சில நாட்களாகவே திருப்பூர் மாவட்ட திமுக தொண்டர்கள், சேலம் மாவட்ட திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் பலர் கே .என். நேருவின் அலைபேசிக்கு தொடர்பு கொண்டு... தாங்கள் இன்னார் என்பதை அறிமுகப் படுத்திக் கொண்டு, “கொங்கு பகுதியில் திமுக நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் நடத்துவதாக சொன்னீர்கள். கோவை, திருப்பூரோடு முடித்து விட்டீர்கள். மீதம் உள்ள மாவட்டங்களுக்கு எப்போது ஆய்வு செய்யப் போகிறீர்கள்? தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே தான் உள்ளது. கொங்கு மண்டல திமுகவைப் பற்றி ஆய்வு செய்து ஒரு சில முக்கியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இல்லையென்றால் நிலைமை வேறுவிதமாக போய்விடும்” என்று வலியுறுத்தியிருக்கிறார்கள்.
ஏற்கனவே கொங்கு மண்டல மாவட்டங்களில் தனித்தனியாக ஆய்வுக்கூட்டம் மேற்கொள்ள திட்டமிட்டு அது ரத்து செய்யப்பட்ட நிலையில்... தொண்டர்களும் திமுக நிர்வாகிகளும் நேருவுக்கு கொடுத்த அழுத்தம் ஸ்டாலினுக்கு சென்று அதன் மூலமாகவே இந்த கொங்கு கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இப்போது நேரம் இல்லாத காரணத்தால் தனித்தனியாக கூட்டங்கள் நடத்துவதை விட ஒரே கூட்டமாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செங்கோட்டையன் , வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்கள் குழு கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் உத்திகள் பற்றி ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில்... திமுகவின் கலந்துரையாடல் கூட்டத்தின் மூலம் கட்சி அளவில் மாவட்டப்பிரிப்பு, நிர்வாகிகள் மாற்றம் உள்ளிட்ட மாற்றங்களை உடனடியாக செய்யாவிட்டால் கூட்டம் நடத்திப் பயனில்லை என்கிறார்கள் கொங்கு உடன் பிறப்புகள்.
ஆரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக