thinathanthi : லடாக்கையும், அருணாசலபிரதேசத்தையும், இந்தியா சட்டவிரோதமாக உருவாக்கி உள்ளதாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியுள்ளார்.
பீஜிங், இந்திய ராணுவத்துக்கும், சீன படைக்கும் இடையே கடந்த 5 மாதங்களாக கிழக்கு லடாக்கில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இரு தரப்பும் படைகளை குவித்துள்ளன. இப்பிரச்சினைக்கு தீர்வு காண கிழக்கு லடாக்கில், அசல் கட்டுப்பாட்டுகோடு பகுதியில், இந்திய எல்லைக்குட்பட்ட சுசுல் என்ற இடத்தில் நேற்று முன்தினம் மதியம் இரு தரப்பு ராணுவத்துக்கு இடையேயான 7-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தை 12 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது. கிழக்கு லடாக்கில் பல்வேறு மோதல் பகுதிகளில் இருந்தும் இரு தரப்பு படைகளை விலக்கிக்கொள்வதற்கான வழிவகைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இதற்கிடையே லடாக், அருணாசலபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், எல்லையில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த 44 பாலங்களை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று முன்தினம் திறந்துவைத்தார். ஆனால் இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதையொட்டி சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் நேற்று கூறியதாவது:- லடாக்கையும், அருணாசலபிரதேசத்தையும், இந்தியா சட்டவிரோதமாக உருவாக்கி உள்ளது. இதை நாங்கள் அங்கீகரிக்கவில்லை. எல்லையில் பதற்றத்துக்கு இந்தியாதான் மூல காரணம். இந்தியா தொடர்ந்து சர்ச்சைக்குரிய பகுதிகளில் உள்கட்டமைப்பு கட்டுமானங்களை செய்வதும், ராணுவத்தை குவிப்பதையும் செய்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக