minnampalam :ஒவ்வோர் அரையாண்டும் முடிந்து 15 தினங்களுக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை, அப்படிச் செலுத்தத் தவறினால் 16வது நாளில் இருந்து 2 சதவீதம் அபராதம் வசூலிக்கப்படும் என்று, சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இரண்டாவது அரையாண்டு சொத்து வரியை கட்டாதவர்களுக்கு அபராதத்துடன் வசூல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நடிகர் ரஜினிகாந்தும் அபராதத்துடன் சொத்து வரி செலுத்தினார்.
இந்த நிலையில் சொத்து வரி தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “முதல் அரையாண்டு சொத்து வரியை ஏப்ரல் 1 முதல் 15 தேதிக்குள்ளோ, இரண்டாவது அரையாண்டு வரியை அக்டோபர் 1 முதல் 15 தேதிக்குள்ளோ கட்டவில்லை என்றால், அவர்களுக்கு ஊக்கத்தொகை இல்லை என்பதும், அதுமாதிரி செலுத்தத் தவறியவர்கள் அபராதம் செலுத்த வேண்டும் என்பதும், சிறிதும் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.
கொரோனா காரணமாக, பொருளாதார, வருமானச் சீரழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் சென்னை மக்களை, மாநகராட்சி இப்படி மேலும் துயரப்படுத்துவது, எவ்விதத்திலும் சரியல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.ஏழை எளிய, நடுத்தர மக்கள் செலுத்தும் சொத்து வரியில், அபராதம் விதிக்கும் கெடுபிடியும், ஊக்கத்தொகை 15 நாட்களுக்கு மட்டுமே அளிப்போம் என்பதும், மக்கள் நலத் திட்டம் அல்ல; மக்களை நச்சரிக்கும் திட்டமே ஆகும் என்றவர், “கொரோனாவைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு அரையாண்டுக்கும் ஊக்கத்தொகை அளிக்க வழங்கப்பட்டிருக்கும் 15 நாட்கள் கால அவகாசத்தை, குறைந்தபட்சம் 45 நாட்களாக உயர்த்தி, அரையாண்டு வரி 5,000 ரூபாய்க்குள் செலுத்துவோருக்கு இந்த ஊக்கத்தொகையை 10 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
அதேபோல், தற்போதுள்ள 2 சதவீத அபராதத் தொகையை அரை சதவீதமாகக் குறைத்திட வேண்டும் அல்லது அறவே ரத்து செய்திட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரி செலுத்த வேண்டுமென சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அளித்ததை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கொரோனா காலத்தில் வருமானம் இல்லாததால் வரியைக் குறைக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. நீதிமன்றம் எச்சரித்ததைத் தொடர்ந்து வழக்கை வாபஸ் பெற்றதோடு சொத்துவரியாக 6,46,619 ரூபாயும், அதற்கு அபராதமாக 9,386 ரூபாயையும் செலுத்தினார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்துக்கே இந்த நிலை என்றால் நடுத்தர, ஏழை வர்க்கத்தினர் என்ன செய்வார்கள் என்ற எண்ணத்தில்தான் சொத்து வரியை செலுத்த அவகாசம் வேண்டுமெனவும், அபராதத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார் ஸ்டாலின். ஆக, இது ரஜினிகாந்தையும் சேர்த்து சொத்து வரி செலுத்தும் அனைவருக்கும் ஆதரவளிக்கும் அறிக்கையாக அமைந்துள்ளது.
எழில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக