திமிங்கிலங்கள் நீரில் வாழும் பாலூட்டிகள். நிலத்தில் வாழ்ந்துவிட்டு சில பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் கடலுக்குள் வாழப் புகுந்த விலங்குகள். இன்னமும் குட்டி போட்டு பாலூட்டுகிற தொட்டில் பழக்கத்தை தொடருவதோடு மிகவும் நெருக்கமான குடும்ப உறவுகளைப் பேணுபவை. திமிங்கிலங்கள் கூட்டமாக வாழும். அம்மா, அப்பா, பிள்ளைகள், மாமன் , மச்சான் , சித்தப்பா , பெரியப்பா , நண்பர்கள் என்று அதன் கூட்ட்த்தில் ஆட்கள் இருப்பார்கள். சுறாக்களைப் போல திமிங்கிலங்கள் தனிமை ( Solidary ) விலங்குகள் கிடையாது. உண்மையைச் சொல்லப்போனால் கூட்டாக வாழும் போது தான் திமிங்கிலங்கள் ஆரோக்கியமாக வாழுகின்றன. டொல்பின்களைப் போலவே திமிங்கிலங்களும் சமூக விலங்குகள்.
திமிங்கிலங்களுக்கு மொழி உண்டு. நமது அறிவு அதை வித்தியாசமான ஒலிகளாக வகைப் படுத்துகிறது. இந்த ஒலி மொழியை திமிங்கிலங்கள் உணவைக் கண்டு பிடிக்கவும், இணைய அழைக்கவும், குடும்பத்தவர்களை ஒன்று சேர்க்கவும் பயன்படுத்தும். இதை திமிங்கிலங்களின் பாடல்கள் என்பார்கள். மனிதர்களுக்குள் வட்டார வழக்கு இருப்பதைப் போல திமிங்கலங்களுக்குள்ளும் வட்டார வழக்கு உண்டு. உலகின் வெவ்வேறு பிரதேசங்களில் வாழும் திமிங்கிலங்கள் வெவ்வேறு வட்டார வழக்குகளைப் பேசுகின்றன. அவற்றின் மொழியில் ஒரு பொதுக் கருத்து இருந்தாலுமே கூட அவற்றின் வட்டார வழக்கின் துல்லியத்தன்மையும் குறிப்பிடத்தக்கது. குறித்த 52Hz இல் பாடலைப் பாடிய திமிங்கிலம் ஒரு நீலத்திமிங்கிலம் என்று அறிந்த போது ஒட்டுமொத்த அறிவியல் உலகமும் ஒருகணம் அதிர்ந்தது. உலகில் வாழுகின்ற விலங்குகளில் ( வாழ்ந்து இறந்துபோன டைனோசரைவிடவும் என்ற கோட்பாடும் உண்டு ) ஆகப் பெரியது நீலத்திமிங்கிலம் ஆகும். ஆனால் இவற்றின் பாடல்கள் 15Hz-40Hz வரைக்குமே இருக்கும். 40 என்பது கூட அதிகப்படி தான். சராசரியான பாடலின் அதிர்வெண் 15Hz-25Hz தான்.
இது விஞ்ஞானிகளை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் தள்ளவே குறித்த திமிங்கிலத்திற்கு "Whale 52 " என்ற பெயரைச் சூட்டி அது குறித்து மேலும் தேட ஆரம்பிக்கிறார்கள். நெஞ்சு கனக்கிற உண்மைகள் வெளியே வர ஆரம்பிக்கின்றன. Hydrophone மூலம் தொடர்ந்தும் அந்த திமிங்கிலத்தின் பாடல்களைச் சேகரிக்கிறார்கள். 1989-2004 வரை இந்த சேகரிப்பு தொடர்ச்சியாக நடக்கிறது.
ஆய்வுகளின் முடிவில் அது தனிமையில் உழல்கிற ஒரு திமிங்கிலம் என்பதைக் கண்டறிகிறார்கள். நான் முன்பு சொன்னது போல , குடும்பமோ , இணையோ, நண்பர்களோ இல்லாத ஒரு தனிமைத் திமிங்கிலம்... அதை தொடர்ச்சியாக ஆய்வு செய்த பதினைந்து வருடங்களிலும் , அதன் பிறகு 2013 வரை விவரணப் படத்திற்காக இடையிடையே ஆராய்ந்த போதும் சரி அந்தத் திமிங்கிலம் இன்னுமொரு சக திமிங்கிலத்தை சந்தித்தேயிருக்கவில்லை. அதன் துயரம் மிகுந்த பாடல் கடல் முழுவதும் அதிர்ந்துகொண்டேயிருந்தது. திமிங்கிலங்களின் பாடல்களில் துயர் மிகுந்த பாடல்களும் உண்டு. உணவு, மகிழ்ச்சி, இணை கூடுவது தவிர துக்கத்திலும் தனிமையிலும் திமிங்கிலங்கள் பாடலைப் பாடுகின்றன. இந்தப் பாடல்கள் இணை, குடும்பம் , நண்பர்களுக்கு மட்டுமானது அல்ல, எவரேனும் ஒரு சக இனத்தவர் அதைக் கேட்டு பதில் அளிக்கும்படி இரஞ்சிப் பாடுவது. Whale 52 ன் அழைப்புப் பாடலை முதலில் அது இணை கூடுவதற்காக பாடுகிறது என்று விஞ்ஞானிகள் கருதினார்கள். ஆனால் அந்தப் பாடல் திமிங்கிலங்களின் இணைகூடற் காலம் கழிந்தும் ஒலித்துக்கொண்டிருந்தது. அப்போது தான் அது ஏதேனும் ஒரு திமிங்கிலமாவது தனது குரலுக்கு பதில் கொடுக்காதா என்ற துயரோடு பாடுவது கண்டறியப்பட்டது.
Whale 52 இன் குரலுக்கு மூன்று தசாப்தகாலமாக எந்தத் திமிங்கிலமும் பதில் கொடுக்கவில்லை. 15Hz-25Hz அதிர்வெண் கணக்கில் தமக்குள் உரையாடிக்கொண்டும், அழைத்துக்கொண்டும் , அழைப்புக்கு அதில் சொல்லிக்கொண்டிருக்கும் நீலத்திமிங்கிலங்கள் 52Hz அளவில் வந்த இந்த துயரம் மிகுந்த அழைப்பை கேட்டிருந்தாலுமே கூட அதை இன்னுமொரு திமிங்கிலத்தின் அழைப்பாக நினைத்து பதில் கொடுக்கவில்லை. காரணம் அவைகளைப் பொறுத்தமட்டில் இது அவர்களில் ஒருவனின் ஒலி கிடையாது. வழக்கத்துக்கு மாறாக 52Hz இல் இந்த திமிங்கிலம் ஒலியெழுப்ப என்ன காரணம் என்று விஞ்ஞானிகள் மட்டில் தீர்க்கமான ஒரு முடிவு இல்லை. ஆனால் இது ஒரு Hybrid திமிங்கிலமாக இருக்க முடியும் என்கிற அனுமானம் வலுவானது. நீலத்திமிங்கிலம் ஒன்றிற்கும் Fin திமிங்கிலம் ஒன்றிற்கு பிறந்த குட்டியாக இது இருக்க முடியும். சிறிது வளர்ந்ததும் நீலத்திமிங்கிலம் போலவோ , fin திமிங்கிலம் போலவோ ஒலியெழுப்ப முடியாத இந்த திமிங்கிலம் துரத்தியடிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் Whale 52 ஒரு வழித்துணைக்காகவேனும் சக திமிங்கிலத்தைக் காண துயர் மிகுந்த அழைப்புகளை ஆழ்கடலில் பாடியபடி அலையத்தொடங்கியிருக்கிறது.
Whale 52 இன் பயணப்பாதையை விஞ்ன்கானிகள் தொடர்ந்தார்கள். அது உலகில் வழக்கில் இருக்கிற திமிங்கில பயணப்பாதை எதனோடும் ஒத்துப் போகவில்லை. அது துயர்மிகுந்த அழைப்புகளை ஏற்படுத்தியபடி உலகின் சமித்திரங்களெங்கும் இலக்கில்லாமல் அலைகிறது. திமிங்கிலங்களுக்கு பயணப் பாதை உண்டு, நல்ல உணவு, சுத்தமான நீரோட்டம் , கருத்தரிக்க சிறந்த நீர் , குட்டிகளை பராமரிக்க உகந்த கடல் இப்படியாக அனைத்தும் ஒவ்பொரு வருடத்திலும் உலகின் எந்த கடல்பகுதியில் கிடைக்கும் என்று திமிங்கிலங்களுக்கு தெரியும். தெரியும் என்றால் அது மூளையில் பிறப்பிலிருந்தே இருபது அல்ல. தாய், தந்தை, குழுவில் மூத்த திமிங்கிலங்கள் என்று உரையாடல்கள் மூலமும், ஒவ்வொரு வருடமும் பிரயாணப்படுகிற அனுபவத்தின் மூலமும் அறிந்துகொள்ளப்படுபவை. இதற்காகவே திமிங்கிலங்கள் வருடம்தோறும் உலகைச் சுற்றி வருகின்றன. இதற்கான பாதை தான் திமிங்கிலங்களின் பாதை. ஆனால் whale 52 ற்கு அது எதுவும் கிடையாது. தெரியாது. அதற்கு யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை. அதன் தேவையெல்லாம் இன்னொரு திமிங்கிலத்தைப் பார்த்துவிடவேண்டும். துரதிஷ்டவசமாக whale 52 ஏனைய திமிங்கிலங்களில் பயணப்பாதையில் வரவே இல்லை. அது தனது இனத்துக்கான தேடலோடு குரல் எழுப்பியபடி இன்னமும் விலகி விலகி நீந்தியது. தற்செயலாக அது ஒருநாள் திமிங்கில குழு ஒன்றின் பயணப்பாதையை கடந்த போது அது பனிக்காலமாக இருந்தது. ஆனால் கோடையில் தான் அந்தப் பாதையில் திமிங்கிலங்கள் வரும். இன்னொரு நேரம் பனிக்கால பயணப்பாதையை கோடையில் கடந்தது. அதன் அழைப்பு எதற்கும் பதில் இல்லை.
இந்த உலகை 97% போர்த்தியிருக்கும் இந்த பரந்த அடர்ந்த சமுத்திரங்களில் அது தனியாகவே அலைந்துகொண்டிருந்தது. Whale 52 இன் கதை பொதுமக்களுக்கு தெரியவந்தபோது அனேகர் அதற்காக பரிதாபப்பட்டனர். குழுவாக வாழவென்று பரிணாமமடைந்து விலங்கு, மனிதர்களைப் போலவே குடும்ப உணர்வுகளைக் கொண்ட ஒரு விலங்கு இருபது, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இன்னொரு திமிங்கிலத்தை சந்தித்துவிட வேண்டும் என்ற துயரோடு அந்தப் பரந்து விரிந்த சமுத்திரத்தின் தனிமையில் சுற்றிக்கொண்டிருபது மக்களை நெகிழ வைத்தது. Whale 52க்கு ஆதரவளித்தும், அதன் நலன் விசாரித்தும், அதன் தனிமையிலும் துபத்திலும் பங்கெடுத்து அழுகிற ஆயிரக்கணக்கான கடிதங்கள் , ஈமெயில்கள் ஆராட்சியாளர்களை அடைந்தன.
உண்மையில் திமிங்கிலத்தின் மேல் வந்த இரக்க உணர்வு என்பற்கு மேலாய் மனிதர்கள் தம்மைக் குறித்து கவலைப்பட்டார்கள். தங்களைப் போலவே சமூக கட்டமைப்புள்ள ஒரு விலங்கு, பரந்து விரிந்த ஆளரவமற்ற கடல் , அழைக்கும் குரலுக்கு பதில் இல்லை, முப்பது ஆண்டுகளாகத் தனிமை , இப்படியாக தனிமை குறித்த மனிதர்களது பயத்தையும் பரந்த இந்த சமூகத்தில் அவர்களுக்கு இருக்கிற insecure feel ஐயும் Whale 52 விடயத்தில் மனிதர்கள் வெளிக்காட்டினார்கள். சமூகமட்டத்தில் தங்களது இருப்போடு whale 52 ஐ அவர்களால் இலகுவில் பொருத்திப்பார்க்க முடிந்தது. உண்மையில் அவர்களை அறியாமலே அவர்கள் மனம் அதைச் செய்தது. வந்த கடிதங்களிலும், ஈமெயில்களிலும் பெரும்பாலானவை பெண்களிடமிருந்து வந்தது.
2004 வரையான தொடர்ச்சியான அதன் குரல் பதிவுகள் வரையிலும் அது இன்னுமொரு திமிங்கிலத்தைச் சந்திக்கவில்லை. அதன் பாடலுக்கு பதில் வரவுமில்லை. இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால் இந்த திமிங்கிலத்தை யாரும் பார்த்தது கிடையாது. தசாப்தகாலமாக பாடலாக மட்டுமே அது பதிவாகியிருக்கிறது. 2013 இல் whale 52 தொடர்பிலான விவரணப் படம் ஒன்றை எடுக்கும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு லியனாடோ டீ காப்ரியோ நிதியுதவி அளித்திருந்தார். தனிமையாக அறியப்பட்ட விலங்கு அறியப்பட்டவரைக்கும் தனிமையிலே உழன்று மனிதத் தேடல்களில் இருந்து மறைந்து போனது.
அநாவசியம் என்றாலும் , இந்த whale 52 தொடர்பில் நான் படிக்கும் போது எனக்கு தோன்றிய ஒன்றைச் சொல்கிறேன். கிட்டத்தட்ட நாமும் whale 52 தான். உண்மையான உறவு, உண்மைக் காதல், உண்மை நட்பு என்று genuine authentic உறவுகளுக்கான உணர்வு போராட்டம் எம் வாழ்க்கையில் ஒரு அங்கம். அதை அடைந்து கொள்வதற்கான தேடல் ஒவ்வொரு நாளும் நடக்கிறது...
முயற்சி செய்கிறோம். அடைகிறோம் அல்லது அடைய முடிவதில்லை. சில நேரம் அடைந்தாலும் இடையில் பிரிகிறோம்.
Are we singing the correct song at correct pitch ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக