செவ்வாய், 13 அக்டோபர், 2020

பட்டியலின முதியவரை காலில் விழச் செய்த ஆதிக்க சாதியினர்... கயத்தாறில் கொடூரம்!

kalaignarseithigal : தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ஓலைக்குளம் வடக்கு தெருவை சார்ந்தவர் பால்ராஜ் (55). இவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். இவர் 100 செம்மறி ஆடுகளை வைத்து தொழில் செய்து வருகிறார். இவரின் ஆடு பக்கத்தில் ஆடு வைத்திருக்கும் சிவசங்கு (60) என்பவரின் ஆட்டு பட்டிக்கு சென்றிருக்கிறது.

உடனே சிவசங்கு அவரது உறவினர்களை அழைத்து பால்ராஜை காலில் விழுந்து கும்மிட செய்துள்ளார். மேலும் இதனை வீடியோ எடுத்து அவர்களின் உறவினர்களின் உதவியோடு சமூக வலைதளங்களிலும் பரப்பியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பால்ராஜ் நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட எஸ்.பியிடம் புகார் மனு அளித்துள்ளார். பட்டியலினத்தைச் சேர்ந்தவரின் ஆடு ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவரின் ஆட்டு பட்டிக்கு சென்றதால் உரிமையாளரை காலில் விழுந்து கும்பிட செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, காலில் விழ செய்தது தொடர்பாக பால்ராஜ் கயத்தார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில் சிவசங்கு, சங்கிலிபாண்டி, உடையம்மாள், பெரியமாரி, வீரையா, மகேந்திரன், மகாராஜன் உள்ளிட்ட 7 பேர் மீது கயத்தார் காவல் துறையினர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

minnambalam : தமிழகத்தில் இன்னும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களை பாகுபாடுடன் நடத்துவது என்பது தொடர்கதையாகி வருகிறது. அண்மையில், கடலூர் தெற்கு திட்டைப் பகுதியில், ஊராட்சித் தலைவரைத் தரையில் அமரவைக்கப்பட்ட விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்நிலையில் தூத்துக்குடியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரை, ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த குடும்பத்தினர் காலில் விழ வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கயத்தாறு அருகே உள்ள ஓலைக்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி மாரியம்மாள். ஒரு ஆண், மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். ஆடு மேய்த்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார் பால்ராஜ். இவரிடம் சுமார் 100 செம்மறி ஆடுகள் உள்ளன.

பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த சிவசங்கு என்பவருக்கும் முன்பகை இருந்துள்ளது. சுமார் 80 ஆடுகள் வைத்துள்ள சிவசங்குவும், ஆடு மேய்க்கும் தொழில் செய்கிறார்.

இதில், பால்ராஜ் சிவசங்குவின் ஆட்டை திருடி விற்றுவிட்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதனால் கடந்த 3 மாதங்களாக இரு தரப்புக்கும் பேச்சுவார்த்தை இல்லை. இந்நிலையில் கடந்த அக்டோபர் 8ஆம் தேதி பால்ராஜ் வளர்க்கும் ஆடுகள், சிவசங்குவின் தோட்ட பகுதிக்குள் நுழைந்ததாக தெரிகிறது.அதோடு அன்று மாலை சுமார் நான்கு மணி அளவில் பால்ராஜ், சிவசங்கு மற்றும் ஓலைக்குளம் கிராமத்தை சேர்ந்த குருசாமி கோனார் மகன் எட்டப்பன் ஆகிய மூவரும் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது முன்பகை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட பால்ராஜின் கம்பு எதிர்பாராதவிதமாக சிவசங்குவின் தலையில் பட்டு காயம் ஏற்பட்டிருக்கிறது.

இதனால் ஆத்திரமடைந்த சிவசங்கு மற்றும் அவரது உறவினர்கள், பால்ராஜை அழைத்து மிரட்டி அவரது காலில் 3 முறை விழுந்து மன்னிப்பு கேட்க வைத்து விரட்டியுள்ளனர்.

இதை வீடியோவாகவும் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். அதில், மூன்று முறை காலில் விழுந்து எழும் பால்ராஜை அங்கிருப்பவர்கள் மீண்டும் விழ சொல்கிறார்கள். பிறகு மிரட்டி அங்கிருந்து பால்ராஜை அனுப்புவது பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பால்ராஜ் மாவட்ட எஸ்பி-யிடம் புகார் மனு அளித்துள்ளார். இதையடுத்து, கயத்தாறு காவல் நிலையத்தில் சிவசங்கு, மகன் சங்கிலிபாண்டி, மகள் உடையம்மாள், உறவினர்கள் பெரியமாரி, வீரையா, மகேந்திரன், மகாராஜன் உள்ளிட்ட 7 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-பிரியா

கருத்துகள் இல்லை: