LR Jagadheesan : மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,1991 முதல் 1996 வரையில் நீங்கள் சமூகநீதிகாத்த வீராங்கனை பட்டம் கொடுத்து
உச்சிமோந்து பாராட்டிய ஜெயலலிதா விடுதலைப்புலிகள் குறித்தும் பிரபாகரன் குறித்தும் ஈழபோராட்டம் குறித்தும் தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் பேசியதைவிடவா முத்தையா முரளிதரன் ஈழபோராட்டம், விடுதலைப்புலிகள், பிரபாகரன் குறித்தெல்லாம் மோசமாகவும் கேவலமாகவும் பேசிவிட்டார்? ராஜீவ் கொலைவழக்கின் விசாரணை, அதில் கைதானவர்களை ஜெயலலிதா அரசு கையாண்டவிதம், ஈழத்தமிழ் அகதிகளுக்கு தமிழ்நாட்டில் முந்தைய திமுக அரசு கொடுத்திருந்த இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை பறித்ததோடு அவர்களின் முகாம்களை திறந்தவெளி சிறைச்சாலைகளாக மாற்றி சித்திரவதை செய்த கொடுங்கோலி ஜெயலலிதாவை நீங்கள் அந்த காலகட்டத்தில் ஆதரிக்கலாம் என்றால் மலையக இந்திய வம்சாவளித்தமிழர்களை கள்ளத்தோணிகள் என்று இன்றுவரை வார்த்தைக்கு வார்த்தை வன்மம் கக்கி ஒதுக்கிவைத்து இழிவுசெய்த ஜாதிமேட்டிமைத்தனத்திமிர் மிக்க யாழ்மைய வெள்ளாள ஆயுதபோராட்டத்தை அதே மூர்க்கத்தோடு வெறுக்கும் முரளிதரனை கேள்வி கேட்கவோ விமர்சிக்கவோ உங்களுக்கு என்ன் தார்மீக உரிமை இருக்கிறது? திராவிடர் இயக்கம் பெரியாரியம் இரண்டின் அடிப்படையும் அறிவுநாணயம். ஈழத்தமிழர் விவகாரத்தில் திராவிடர் இயக்கமும் பெரியாரியர்களும் அதை தொடர்ந்து காவுகொடுத்துக்கொண்டே இருக்கிறீர்கள். தயவுசெய்து இனியும் இதை செய்யாதீர்கள்.
1991 ராஜீவ் படுகொலைக்குப்பிறகும் தமிழ்நாட்டு அரசியலில் நீடித்த புலி ஆதரவு செயற்பாடுகள் கூட ஒருவகையில் அந்த அமைப்பையும் அதன் தலைமையையும் மேலும் மேலும் கொலைகளை செய்யவைத்தது. அந்த காலத்திலேயே தமிழ்நாடு ஒரேகுரலில் புலிகளையும் அதன் தலைமையையும் அவர்களின் தவறுகளையும் கொடுமைகளையும் பச்சைப்படுகொலைகளையும் கண்டித்து எச்சரித்து நிராகரித்திருந்தால் ஒருவேளை பிரபாகரன் திருந்தியிருக்கக்கூடும். தமிழ்நாட்டை விட கூடுதல் அதிகாரங்களும் செல்வச்செழிப்பும் மிக்க தமிழ் ஈழமே கூட உருவாகியிருக்கக்கூடும். யார் கண்டது? அப்படி ஒரு சாத்தியம் இருந்தது. மாறாக எத்தனை கொலைகளை எப்படி செய்தாலும் அதை ஆதரிக்கவும் நியாயப்படுத்தவும் தமிழ்நாட்டில் ஆட்கள் இருக்கிறார்கள் என்கிற ஆணவ நினைப்பே புலிகளையும் அதன் தலைமையையும் மேலும் மேலும் மூர்க்கமிக்க கொலை இயந்திரமாக்கி முற்றாக அழியச்செய்தது. ஈழத்தமிழருக்கும் பேரழிவை பெற்றுத்தந்தது.
“இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் -
கெடுப்பார் இலானும் கெடும்.” என்கிற திருக்குறளின் சமகால அரசியல் உதாரணம் பிரபாகரனும் அவரது அமைப்பும். அவரை இடித்துரைத்து திருத்தியிருக்கவேண்டிய வரலாற்றுக்கடமையும் பொறுப்பும் திராவிடர் இயக்கத்துக்கும் பெரியாரியர்களுக்கும் இருந்தது. இருதரப்பும் அதை செய்யவில்லை என்பதே வரலாற்றின் பெருஞ்சோகம். அதை இவர்கள் செய்தாலும் பிரபாகரன் கேட்டிருப்பாரா என்பது கேள்விக்குறிதான். ஆனால் இவர்கள் செய்யாமல் தமிழ் இன உணர்வின் பேரால் காத்த மௌனமே அவருக்கு அங்கீகாரமாகி ஆணவத்தை அதிகப்படுத்த வழி வகுத்தது என்பதே வரலாறு சொல்லும் பாடம்.
போனதெல்லாம் போகட்டும். இனியும் ஈழத்தமிழர் அரசியலில் தமிழ்நாடு தன் தவறான போக்கை மேலும் தொடரவேண்டாம் என்பதே வேண்டுகோள். ஏனெனில் இந்த போக்கு ஈழத்தமிழருக்கும் நன்மை செய்யவில்லை. தமிழக அரசியலையும் சீரழித்துவிட்டது. 25 ஆண்டுகால நிதர்சனம் இது. நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக