வெள்ளி, 10 ஜூலை, 2020

அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா!

அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா!மின்னம்பலம் : தமிழகத்தில் மக்கள் பிரதிநிதிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவைச் சேர்ந்த உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ.பழனி, உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ குமரகுரு, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் கே அர்ஜூனன் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூக்கும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், இதனைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் செவிலியர்களுடன் ஆலோசனையில் ஈடுபடுவது, மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவது என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது அவர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவரது மனைவிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ  விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணியைத் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
-கவிபிரியா

கருத்துகள் இல்லை: