செவ்வாய், 7 ஜூலை, 2020

சாத்தான்குளம் இரட்டைக் கொலை: சிபிஐ விசாரணை!

சாத்தான்குளம் இரட்டைக் கொலை: சிபிஐ விசாரணை!மின்னம்பலம் : சாத்தான்குளம் படுகொலை தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை நடத்தவுள்ளது.
சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட செல்போன் கடை உரிமையாளர்கள் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் துறையினர் தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்கவுள்ளதாக முதல்வர் அறிவித்தார். இதுதொடர்பான தகவலும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டதுஎனினும், சிபிஐ விசாரிப்பதற்குள் தடயங்கள் அழிக்கப்படலாம் என்பதால் உடனடியாக சிபிசிஐடி விசாரிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, இன்பெக்ஸ்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இவர்களை விரைவில் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாகவும் சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசு இன்று (ஜூலை 7) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் மரணம் குறித்து மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) மூலம் விசாரிக்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். இந்த நிலையில் ஜெயராஜ், பென்னிக்ஸின் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க முதல்வர் விடுத்த கோரிக்கையை ஏற்று, சிபிஐ விசாரணைக்கான அறிவிக்கையை (notification) மத்திய அரசு வெளியிட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் குறித்த விசாரணை இன்னும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எழில்

கருத்துகள் இல்லை: