புதன், 8 ஜூலை, 2020

பன்னீர் தகுதி நீக்க வழக்கு: இன்று மீண்டும் விசாரணை!

பன்னீர் தகுதி நீக்க வழக்கு: இன்று மீண்டும் விசாரணை!மின்னம்பலம் : பன்னீர்செல்வம் உள்பட 11 பேருக்கு எதிரான தகுதி நீக்க வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி மூன்று மாதங்கள் ஆன போதிலும், இதுவரையிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கடந்த மாதம் திமுக உச்ச நீதிமன்றத்தை நாடியது. மணிப்பூர் தீர்ப்பை மேற்கோள் காட்டி, “11 பேரை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றமே முடிவெடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியது.

இந்த வழக்கு கடந்த ஜூன் 26ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகியைப் பார்த்து நீதிபதிகள், ‘உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி மூன்று மாதங்கள் ஆன போதிலும் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்று கேள்வி எழுப்பினர். அடுத்தகட்ட வாதத்துக்காக வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் 11 பேருக்கு எதிரான தகுதி நீக்க வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு இன்று (ஜூலை 8) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது, திமுக தரப்பு, சபாநாயகர் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இதுகுறித்து சபாநாயகர் தனபாலுக்குக் கடிதம் அனுப்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 11 பேருக்கும் கொறடா எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.
அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தாலும் 11 பேரும் அதிமுகவுக்கு எதிராகச் செயல்படவில்லை என்று அந்தக் கடிதத்தில் விளக்கியுள்ள முதல்வர், “11 பேரும் அரசுக்கு எதிராக வாக்களித்த நடவடிக்கை மன்னிக்கப்பட்டது. அவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை” என்று கூறினார். இதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி ஸ்டாலினும் சபாநாயகருக்குக் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எழில்

கருத்துகள் இல்லை: