வியாழன், 9 ஜூலை, 2020

பொட்டம்மானால் கொல்லப்பட்ட கிழக்கு தளபதிகள், போராளிகள் .. ஒரு முன்னாள் போராளியின் வரிகளில்

மூத்த புலி உறுப்பினர்களான ஜிம்கலிதாத்தா ராபட் துரை விசு கடாபிமாஸ்ரர் சுதா நிஷா அக்கினோ ஈஸ்வரநாதன் திருமால் ஆகியோர் உற்பட 67 கிழக்கு தளபதிகள் பொறுப்பாளர்கள் பின்னர் புலிகளிடம் சரணடைந்தனர் ஆனால் பொட்டம்மானின் தன்னிச்சையான முடிவினால் அவர்கள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்
.Reginold Rgi : வரலாற்றை படித்த ஒரு மாணவனாக புலிகள் அமைப்பில் ஒரு உக்கிர தாக்குதல் படையணியில் 8 வருடங்கள் ஈழ விடுதலை கனவுடன் போராடிய போராளி என்ற ரீதியில் கிழக்கு போராளிகளின் பிளவு பற்றியும் அந்த நேரத்தில் புலிகள் அமைப்புகள் நடந்த சகோதர படுகொலை பற்றியும் ஆவணப்படுத்த நான் கடமை பட்டுள்ளேன் அந்த வகையில் ஒரு சிலருக்கு உண்மைகள் கசக்கத்தான் செய்யும் இருந்தாலும் காலத்தின் தேவை கருதி உண்மையை சொல்வதே எனது கடமையாக உணர்கிறேன் மட்டக்களப்பு அம்பாரை மண்ணில் போரிட்டு அந்த மக்களின் காலடியில் மடிவதையே இறுதி லட்டியமாக கொண்ட போராளிகளில் நானும் ஒருவன்...
யார் துரோகி...?
16 வயதில் பாடசாலை படிப்பை பாதியில் தூக்கியேறிந்து விட்டு தமிழ் மக்களுக்காக போராட போன போராளிகளில் நானும் ஒருவன் 1995 ஆண்டு புலிகள் அமைப்பில் இணைந்த நான் 2004 ஆண்டு வரை ஈழ விடுதலை கனவுடன் போராடிய போராளிகளில் நானும் ஒருவன் அந்த வகையில் 1997 ஆண்டு யாழ் வன்னி நிலங்களை கைப்பேற்றி புலிகளை அழித்தொழிக்கும் எண்ணத்தோடு ஸ்ரீலங்கா அரசு பாரிய படையணிகளுடன் பன்னாட்டு நவீன ஆயுதங்களுடன் வன்னி நிலத்தை ஆக்கிரமிக்க படை நகர்வொன்றை மேற்கொண்டார்கள்

அந்த படை நடவடிக்கைக்கு ஜெயசிக்குறு என்று பெயரிடப்பட்டு புலிகளை அழித்தொழிக்கும் திட்டம் அவர்களிடம் இருந்தது ஆரம்பத்தில் வடக்கு போராளிகள் ஜெயசிக்குறு இராணுவத்தை வழிமறித்து ஆங்காங்கே சிறிய தாக்குதலை நடத்தினாலும் ஸ்ரீலங்கா இராணுவத்தின் நகர்வை கட்டுப்படுத்த முடியவில்லை
 நாளுக்கு நாள் புலிகளுக்கு இழப்பு போராளிகள் வீரச்சாவு என்று தோல்வியின் விளிம்பில் நின்றுகொண்டு புலிகள் பின்வாங்கி கொண்டிருந்தார்கள்
ஸ்ரீலங்கா இராணுவமோ ஆக்ரோஷமாக தாக்குதலை தொடுத்து முன்னேறி கொண்டிருந்தார்கள் அந்த நேரத்தில் புலிகளின் தலைவரிடமிருந்து கிழக்கு தளபதி கேணல் கருணாக்கு ஒரு செய்தி பறக்கிறது

 உடனடியாக 3000 போராளிகளுடன் வன்னிக்களம் நோக்கி புறப்பட்டு வருமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது அதற்கிணங்க 3000 மட்டு/அம்பாரை ஆண் பெண் போராளிகளுடன் பாரிய படையணிகளாக கருணாவின் தலைமையில் வன்னி களம் நோக்கி புறப்பட்டோம் இரவு பகலாக காடுகள் மலைகளை கடந்து நீண்ட நெடிய அந்த பயம்... ஒரு சில போராளிகளுக்கு அதுவே கடைசி பயணமாக இருந்ததென்று சொன்னால் கூட மிகையாகாது ஒரு வழியாக வன்னிக்கு வந்த எங்களை இரு கரம் கூப்பி வன்னி மக்கள் வரவேற்றார்கள் ஜெயசிக்குறு படையணிகளுக்கு எதிரான புலிகளின் எதிர் தாக்குதலுக்கு கேணல் கருணா அம்மான் அவர்களை கட்டளை தளபதியா நியமித்தார் தலைவர்

மட்டு/அம்பாரை போராளிகளை கொண்ட ஜெயந்தன் படையணி ஸ்ரீலங்கா இராணுவத்தை எதிர்கொள்ள களத்தில் வீறுகொண்டு எழுந்தார்கள் அதுவரை முன்னேறி கொண்டிருந்த ஸ்ரீலங்கா இராணுவம் மட்டு/அம்பாரை போராளிகளின் எதிர் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திக்குமுக்க ஆடியது ஸ்ரீலங்கா இராணுவத்தால் கைப்பேற்றிய இடங்களை கருணாவின் தலைமையில் புலிகள் மீண்டும் கைப்பேற்றி கொண்டிருந்தார்கள் ஆனால் நாளுக்குநாள் புலிகளுக்கு இழப்பும் அதிகரித்துக்கொண்டே இருந்தன

ஒருநாளைக்கு பத்து பதினைந்து என்ற விகிதத்தில் போராளிகள் வீரச்சாவு அடைத்துக்கொண்டே இருந்தார்கள் இதையெல்லாம் மறைத்து புலிகளுக்கு சார்பான ஊடகங்கள் மக்களை முட்டாளாக்கி கொண்டே இருந்தது எங்கட பெடியல் அடிக்காங்கா ஒருநாளைக்கு நூறு / இருநூறு எதிரிகளை களத்தில் கொன்று குவிக்கிறாங்க என்று மக்களை ஏமாற்றி கொண்டே இருந்தார்கள் உண்மையில் களத்தில் நின்ற எங்களுக்கு தெரியும் அந்த காலகட்டத்தில் புலிகளின் இழப்பு என்ன ? எத்தனை போராளிகள் வீரச்சாவு என்று ஒரு வழியாக பாரிய இழப்புகளுடன் ஸ்ரீலங்கா இராணுவம் பின்வாங்கி சென்றது புலிகளின் வெற்றிக்கு ஏறுமுகம் காண வைத்து சிங்கள இராணுத்தின் முதுகெலும்பை நொறுக்கிய பெருமை தளபதி கேணல் கருணா தலைமையிலான விடுதலை புலிகளின் போராளிகளையே சேரும்


இந்த இடத்தில் ஒரு விடயத்தை நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன் வன்னி களமுனையில் கிழக்கு போராளிகளுக்கும் வடக்கு போராளிகளுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பான ஒரு சில சம்பவங்களை குறிப்பிடுவது நல்லது என்று நினைக்கிறேன் நாங்கள் வன்னி களமுனையில் போராடிக்கொண்டிருக்கும் போது போர் முனரங்கு நிலைகளுக்கு கிழக்கு போராளிகள் அனுப்பப்பட்டு அநியாயமாக பலியிடப்பட்டது வடக்கு தளபதிகளால் கிழக்கு போராளிகள் புறக்கணிக்கபட்டது மட்டக்களப்பான் அம்பாரையான் என்ற தாழ்வு மனப்பான்மையுடன் எங்களை பார்த்தது இன்னும் ஒன்று ஸ்ரீலங்கா இராணுவத்தின் கைப்பேற்றப்பட்ட உடமைகள் கைப்பேற்றப்பட்ட உணவு பொருட்களை களத்தில் நின்ற கிழக்கு போராளிகள் பகிர்ந்து கொண்டார்கள் இதை அறிந்த தமிழீழ நிதித்துறை பொறுப்பாளர் கிழக்கு படையணிகளின் தளபதி ஒருவரிடம் மட்டக்களப்பான் கள்ளன் என்றும் கருணா இருக்கின்றன தையிரியம் தான் உங்களுக்கு .

உங்கள் ஆட்டத்தை ஒருநாள் அடக்க வேண்டும் என்று கடுமையான தொனியில் இருந்தது தமிழேந்தியின் கருத்து இது எப்படியோ கருணா அம்மானின் காதுகளுக்கு சென்றது தமிழேந்தியுடன் முரண்பட்ட கருணா நீங்கள் எப்படி எங்கள் போராளிகளை கள்வர் என்று சொல்வீர்கள் என்று கண்டித்தார் சொல்ல போனால் விடுதலை புலிகள் அமைப்புக்குள் பிரதேசவாதமே ஓங்கியிருந்தது என்றே சொல்லலாம் வெளியில் இருந்து பார்ப்பவர்கள் கண்களுக்கு தெரியாது இதுகும் கடந்து போகட்டும் என்று....
பாரிய படையணிகளுடன் வன்னி களமுனைக்கு வந்த நாங்கள் திரும்பி செல்லும்போது ஒரு சிறு படையணியாக எங்கள் தாய்நிலம் கிழக்கு நோக்கி புறப்பட்டோம் எங்களுடன் வந்த போராளிகளின் இழப்பு ஒருபுறம் எங்களை வாட்டி வதைக்க நாங்களோ ஈழ விடுதலை கனவுடன் தாய்நிலம் நோக்கி புறப்பட்டு சென்றோம்

எங்கள் சொந்த ஊருக்கு வந்த நாங்கள் வன்னி கட்டளைக்கு இணங்க வீட்டுக்கு ஒரு பிள்ளை நாட்டைக்காக்க தரவேண்டும் என்று ஆட்சேர்ப்பில் ஈடுபட்டோம் மட்டு /அம்பாரை மாவட்டங்களில் கிழக்கு பெற்றோர்கள் தாங்களாகவே முன் வந்து தங்கள் மாவட்டத்தை மீட்டு தருமாறும் இனி ஒருபோதும் எங்கள் பிள்ளைகள் வன்னி களமுனையில் மடிவதையயும் கிழக்கிலிருந்து வன்னிக்கு படை நகர்த்துவதையோ தாங்கள் அனுமதிக்க போவதில்லை என்றும் கோவில் முன்றலில் வைத்து சத்தியம் வாங்கியே தாங்கள் பிள்ளைகளை தந்தார்கள் புதிதாக இணைந்த போராளிகளுடன் சேர்த்து 6000 போராளிகள் அந்த நேரத்தில் கருணா அம்மான் தலைமையில் கிழக்கில் இருந்தார்கள்

மட்டு/அம்பாரை மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும் கிழக்கு பிளவும்
புலிகளின் வரலாற்றை புரட்டிபோடும் வல்லமை அந்த கிழக்கு பிளவிற்குள் ஒழிந்திருந்ததை இருந்ததை புலிகளால் அனுமானிக்க முடியவில்லை.
கிழக்கு மாகாணத்திலிருந்து உருவாகிய நெருக்கடிகளுக்கு முகம்கொடுப்பதில் புலிகள் தவறுக்குமேல் தவறிழைத்தனர். கிழக்கு பிளவை தாண்டிச்செல்லுதல் என்பதே கடைசிவரை புலிகளால் முடியாது போன ஒரே காரியம் என வரலாறு தன்பக்கங்களில் குறித்துக்கொண்டது. அதன் காரணமாக 2004ம் ஆண்டை தொடர்ந்து வந்த ஆண்டுகள் புலிகளின் வீழ்ச்சிகாலங்களாக அமைந்தன.
வடக்கு, கிழக்கு மாகாணங்களிடையே நீண்ட காலமாக தொடர்ந்துவந்த பிரதேசரீதியான ஏற்றத்தாழ்வுகளே இந்த கிழக்கு பிளவின் அடிப்படையாக இருந்தது

எனினும் சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் புலிகள் உருவாக்கிய நிழல் நிர்வாக கட்டமைப்பில் நியமிக்கப்பட்ட 32 துறைசார் பொறுப்பாளர்களும் வடக்கு மாகாணத்தையே சேர்ந்தவர்கள். கிழக்கு மாகாண மக்களும் போராளிகளும் வடக்கு தலைமையால் வஞ்சிக்கப்பட்டுவிட்டார்கள்
என்கின்ற குற்றச்சாட்டே இந்த கிழக்குபிளவிற்கு உடனடி காரணமாயிற்று புலிகளது இராணுவ வெற்றிகளுக்கு முதுகெலும்பாக இருந்த ஜெயந்தன் படைபிரிவும், அதன் தளபதி கருணாம்மானும் சுமார் ஆறாயிரம் போராளிகளுடன் பிரிந்து நின்று கிழக்கு பிளவை அறிவித்தனர்

அடுத்த முக்கிய நிகழ்வு 2002ம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் வந்தபோது உருவாக்கப்படவிருந்த இடைக்கால நிர்வாகத்துக்காக தெரிவான செயலாளர்களில் ஒருவரை கூட கிழக்கு மாகாணத்திலிருந்து நியமிக்கும் அளவிற்கு அவர்களின் நெஞ்சில் ஈரம் இருக்கவில்லை. அதை கருணாவிடம் அவரின் தளபதிகளும் போராளிகளும் முறையிட்டனர், நாம் போராடும் பொழுதுகளில் எம்மை பாராட்டினார்கள், மட்டக்களப்பு வீரம்விளைநிலம் என்று சான்று தந்தார்கள். எமது கல்லறைகளில் தென்தமிழீழத்து மாவீரன் என்று கல்வெட்டு எழுதினார்கள்,

ஆனால் நாம் எமது உரிமைகளை கேட்ட மாத்திரத்தில் ஒரே நாளில் துரோகிகளாக்கப்பட்டோம். அப்படிஎன்றால் பிரிந்து செல்வோம் என்றார்கள். விளைவு கருணா பிரிவு படையெடுத்து வந்து படுகொலைகளை கட்டவிழ்த்து விட்டார்கள் ...
கிழக்கில் மலர்ந்த குருஷேத்திரம்..
சுமார் 6000 மட்டு/அம்பாரை போராளிகள் கருணாவின் பின்னால் அணிவகுத்து நின்று இனி தாங்கள் கிழக்கில் தனித்து சிங்கள அரசுக்கு எதிராக போராடப்போவதாக அறிவித்தார்கள்
கிழக்கு பிளவையடுத்து 2004 ஆண்டு கனரக ஆயுதங்களுடன் கிழக்கை ஆக்கிரமித்த புலிகள் தமது சொந்த போராளிகள் என்று கூட பார்க்காமல் புலிகளின் கொள்கைக்கு எதிரானவர்கள் என்று ஒரே நாளில் 210 கிழக்கு போராளிகளை கொன்றொழித்தார்கள்
இதே மண்ணில் அந்த வெருகலாற்று படுக்கையில் யுத்த பேரிகை முழங்கியது. சரணடைந்த கிழக்கு போராளிகள் மீது படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்டது
சகோதர யுத்தத்தை தவிர்த்த கேணல் கருணா அனைத்து ஆண்/பெண் போராளிகளிடம் நீங்கள் விரும்பினால் புலிகளோடு சேர்ந்து போராடுங்கள் இல்லையென்றால் உங்கள் வீடுகளுக்கு சென்று இனியாவது உங்கள் குடும்பங்களுக்காக வாழுங்கள் என்று சொல்லிவிட்டு முக்கிய தளபதிகளுடன் தென்னிலங்கை நோக்கி சென்றார்
கேணல் கருணாவுடன் சென்ற மூத்த புலி உறுப்பினர்களான ஜிம்கலிதாத்தா ராபட் துரை விசு கடாபிமாஸ்ரர் சுதா நிஷா அக்கினோ ஈஸ்வரநாதன் திருமால் ஆகியோர் உற்பட 67 கிழக்கு தளபதிகள் பொறுப்பாளர்கள் பின்னர் புலிகளிடம் சரணடைந்தனர் ஆனால் பொட்டம்மானின் தன்னிச்சையான முடிவினால் அவர்கள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர் இவர்கள் அனைவரும் சரணடைய முன்னர் கிழக்கில் உள்ள வன்னி புலிகளின் தளபதி கேணல் ரமேசுடன் தொடர்புகொண்டவேளை ரமேஸ் " எனது மூத்த பிள்ளையின் மீது ஆணையாக உங்களை சுடமாட்டேன் நீங்கள் வந்து சரணடையுங்கள் " எனக் கூறினார் ஆனால் புலிகளிடம் சரணடைந்த அனைத்து கிழக்கு தளபதிகளும் சுட்டு கொல்லப்பட்டதற்கு கேணல் ரமேஸ்க்கும் முக்கிய பங்குண்டு சரணடைந்த கிழக்கு புலிகளின் தளபதிகள் வன்னி சென்றால் கேணல் கருணாவின் பிரிவின் போது தளபதி ரமேஷின் பங்கு எப்படி இருந்தது என்று கூறியிருப்பார் மேலும் சரணடைந்த தளபதிகள் அனைவரும் கிழக்கு மாவட்ட தளபதியாக இருப்பதற்கு தகுதியானவர்கள் இதனால் பதவிப் போட்டிகள் ஏற்படும் இவை அனைத்தையும் கருத்தில் வைத்து அனைத்து சரணடைந்த தளபதிகளும் கிழக்கில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டனர் அந்த காலகட்டத்தில் இலங்கையில் சர்வதேசத்தின் மேற்பார்வையில் சமாதானம் பேணப்பட்டு கொண்டிருக்கும் போது புலிகளால் கிழக்கு புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதல்கள் அனைத்தும் சமாதானத்தை கேள்விக் குறியாக்கும் விதமாகவே இருந்தது
கருணா அம்மான் பிரிந்த உடன் தனது குடும்பத்தை அழைத்துக்கொண்டு இங்கிலாந்து நாட்டுக்கு சென்று விட்டார் இங்கிலாந்தில் அமைதியாக வாழ்ந்துகொண்டிருந் கருணாவை பல தடவை புலிகள் கொலை செய்ய முயற்சித்தும் முடியாமல் போக இங்கிலாந்து போலீசாரிடம் கருணாவை காட்டிக் கொடுத்தார்கள் ஈழ விடுதலை கனவுடன் போராடிய கருணா அம்மான் இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டார்
அந்த காலகட்டத்தில் தான் புலிகள் மாவிலாறு ஆணை கதவுகளை முடி அப்பாவி சிங்கள மக்களை குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் தவிக்க விட்டார்கள் அது மட்டும் அல்ல தங்கள் பலம் பலவீனம் என்ன என்பதை அறியாத புலிகள் தங்களை அழிக்க சர்வதேசம் வரித்து கட்டிக்கொண்டு நிற்கிறது என்று தெரியாமல் ஸ்ரீலங்கா இராணுவத்தை வலிந்து சண்டைக்கு இழுத்து தோல்வியோடு கிழக்கை கைவிட்டு வன்னிக்கு தப்பி சென்றார்கள் 4ம் கட்ட ஈழ போர் வன்னியில் தொடங்கியது புலிகள் தங்களது பலம் என்ன பலவீனம் என்னவென்று தெரியாமல் யுத்த களத்தில் நீண்டு தடுமாறினர்ள் கிழக்கு போராளிகள் இல்லாத யுத்த களம் புலிகளின் தோல்வி களமாக இருந்தது ஸ்ரீலங்கா இராணுவம் புலிகளின் 75% நிலங்களை கைப்பேற்றி முன்னெறிக்கோண்டு இருந்தார்கள் புலிகளோ தோல்வியின் விளிம்பில் பின்வாங்கி கொண்டே இருந்தார்கள் அந்த நேரத்தில் தான் கருணா இங்கிலாந்து சிறையிலிருந்து நாடுகடத்த பட்டார் கருணா இலங்கைக்கு வருவதற்கு முதலே புலிகள் 75% நிலங்களை இழந்து விட்டார்கள் அப்படி இருக்கும்போது இதில் காட்டிக் கொடுக்க என்ன இருக்கிறது புலிகளை அழிக்க சர்வதேசம் இலங்கை அரசுடன் இணைந்து செயல்பட அவன் காட்டிக் கொடுத்தான் இவன் காட்டிக் கொடுத்தான் என்பது மட்டும் என்ன நியாயம் ?
அவனும் என் சகோதரன் அவனும் என் தாய் மொழி தமிழை தன் தாய் மொழியாக கொண்டவன் என்று நினைத்திருந்தால் தமிழர்களின் தாயக கனவு ஒருவேளை பலித்திருக்கும் எதிரி என்று சொல்லப்படும் சிங்கள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தெரிந்தவர்களுக்கு நேற்றுவரை ஒன்றாக உணவருந்திய சொந்த போராளிகளுடன் பேச தெரியாமல் போனது ஏனோ ?
உங்கள் மனசாட்சிய தொட்டு சொல்லுங்கள் தமிழரின் போராட்டம் தொற்றுபோக யார் காரணம் ?
உங்கள் மீது தவறுகளை வைத்துக்கொண்டு அடுத்தவர் மீது பழி போடுவது நியாயமா ? தொடரும்..... by.Reginold

கருத்துகள் இல்லை: