வியாழன், 9 ஜூலை, 2020

இந்தியா சீனாவிடம் பறிகொடுத்த நிலம்.. சீனா ஆக்கிரமிப்பை மோடி கண்டுகொள்ளாதது ஏன்?


congressnakkheeran.in - தாமோதரன் பிரகாஷ் : இந்திய மண்ணிற்குள் ஒருவரும் ஊடுருவவில்லை. இந்தியாவின் பாதுகாப்பு தூண்களில் ஒரு தூணையும் யாரும் கைப்பற்றவில்லை என்று உறுதியளிக்கிறார் பிரதமர் மோடி. ஊடுருவவில்லை என்றால் எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்தது ஏன்? சண்டை நடந்தது ஏன்? 20 இந்திய வீரர்கள் உயிர்த்தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது? சீனாவுக்கு நமது பிரதமர் நற்சான்றிதழ் கொடுக்கிறாரா எனக் கேள்வி எழுப்பியிருந்தார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

என்னதான் நடக்கிறது இந்திய-சீன எல்லையில்?

சீனாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகளாக இருக்கக்கூடிய வடக்குப்பகுதி ராணுவத்தின் உயர் பொறுப்புகளில் இருந்தவர்கள் உண்மை நிலையை வெளிப்படுத்தியுள்ளனர். கர்னல் இ.ஜெ.சான்டிஸ் கூறுகையில், (பிரதமர் சொல்லியிருப்பது) "இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பொய் இது.
அவருடைய கணக்கின் அடிப்படையில் சீனர்கள் தங்களது எல்லையைத் தாண்டி வரவில்லை. அப்படியென்றால் சீன ராணுவம் 1962ஆம் ஆண்டு நடந்த போரில் ஏற்பட்ட இழப்பை திரும்ப கைப்பற்றியிருக்கிறார்கள் என பிரதமர் சொல்கிறாரா எனக் கேட்டுள்ளார். லடாக் பகுதியில் லெப்டினட் ஜெனரலாக வேலை பார்த்த பிரகாஷ்மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில், அடக் கடவுளே... இந்திய பகுதியை ஆக்கிரமிக்க வில்லை என சீன ராணுவம் கூறுகிறது. அதையே தான் மோடியும் சொல்கிறார். இது விசாரணைக்கு உட்படுத்தக்கூடிய தேசத் துரோகம் என்கிறார்.



இவர்கள் மட்டுமல்ல அந்தப் பகுதியில் வேலை செய்த எட்டு ஜெனரல்கள் இந்தியாவின் பகுதிகளை சீனா சமீபத்தில் நடந்த போரில் ஆக்கிரமித்திருக்கிறது என்று சொல்கிறார்கள். ஜெனரல் நரசிம்மன், வி.பி.மாலிக், பனாக், சதீஷ்நம்பியார், குல்கர்னி, மேஜர் டி.பி.சிங், தமிழரான சிவசங்கர், தங்கராஜ், அம்புராஜ், ரமேஷ்ராய் போன்றவர்கள் மோடி சொல்வது பொய்யென சொல்லி அதிர வைத்திருக்கிறார்கள்.

லண்டனில் இருந்து வரும் டெலிகிராப் பத்திரிகை, அதனுடைய டெல்லி நிருபர் ஜோவேலஸ், பெய்ஜிங் நிருபர் சோபியாயான், இஸ்லாமாபாத் நிருபர் பென் பார்மர் ஆகியோர் எழுதிய கட்டுரையை வெளியிட்டுள்ளது. ஜூன் 12ஆம் தேதி எழுதப்பட்ட கட்டுரையில், கிழக்கு லடாக் பகுதியில் உள்ள இந்தியப் பகுதிகளில் 60 சதுர கிலோ மீட்டரை சீனா ஆக்கிரமித்திருக்கிறது. அந்தப் பகுதிகளில் 12 ஆயிரம் போர் வீரர்களை நிறுத்தி யிருக்கிறது எனத் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது.

இமயமலைத் தொடரில் அமைந்துள்ள லடாக் பகுதியில் 1962ஆம் ஆண்டு நடந்த போரில் பல பகுதிகளை இந்தியா சீனாவிடம் பறிகொடுத்தது. அவற்றை 1967ஆம் ஆண்டு நடந்த போரில் மறுபடியும் கைப்பற்றியது. 2013ஆம் ஆண்டு முதல் இந்தியா அந்தப் பகுதியில் சாலைகள் அமைக்க தொடங்கியது. அதே நேரத்தில் சீனாவும் அந்தப் பகுதியில் சாலைகள் அமைக்க தொடங்கியுள்ளது. பனகவ் என்கிற சர்வதேச சுற்றுலா தலமான ஏரியைச் சுற்றி அமைந்துள்ள இந்தியா 262 கி.மீ. சாலை அமைத்துள்ளது. ஆனால் சீனா அந்தப் பகுதியில் 600 கி.மீ. சாலை அமைத்து, படைகளை விரைந்து நிறுத்தும் வலிமை பெற்றுள்ளது.

நரேந்திர மோடி பதவிக்கு வந்தவுடன் சீனாவுடனான வர்த்தகம் அதிகரித்தது. திபெத் விவகாரம், ஹாங்காங் போராட்டம் எதிலும் சீனாவை இந்தியா எதிர்க்கவில்லை. ஆனால் பாகிஸ்தானைச் சார்ந்த தீவிரவாதியான மசூத் அசாரை கைது செய்யச் சொல்லிய இந்தியாவின் நடவடிக்கைகளை சீனா எதிர்த்தது. அத்துடன், சீனா லடாக் பகுதியில் இந்திய நிலங்களில் கால் வைத்து முன்னேறிக்கொண்டே இருந்தது. 60 ச.கி.மீ. இந்தியப் பகுதிகளைச் சீனா பிடித்துவிட்டது என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டப் பிறகுதான் இந்தியா அதை எதிர்க்கத் துணிந்தது. அப்போது கூட பாகிஸ்தான் மீது நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்ற அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளவில்லை.

twit

ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடாது என்ற ஒப்பந்தத்தின்படி இரு நாட்டு ராணுவத்தினரும் கடந்த 15ஆம் தேதி கைகளாலும் இரும்பு ராடுகளாலும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். அதில் இருபது இந்திய வீரர்கள் இறந்து போனார்கள். பலர் சீன ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார்கள். அவர்களில் ஒருவர் லெப்டினல் கர்னல் அந்தஸ்து கொண்ட அதிகாரி. ஒருவர் மேஜர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி. அவர்களை விடுவித்த சீனா, பனகங் ஏரி எங்களுடைய ஏரி என்கிறது. இந்திய பிரதமர் இந்திய பகுதிகளை யாரும் ஆக்கிரமிக்கவில்லை என்கிறார். இதில் எது உண்மை? எனக் கேள்வி கேட்கிறார்கள் ராணுவத்துறை யைச் சார்ந்த வல்லுனர்கள்.
இதைப்பற்றி நம்மிடம் பேசிய டெல்லியைச் சார்ந்த பத்திரிகையாளரும் டிஃபன்ஸ் துறையில் பல கட்டுரைகளை எழுதியவருமான மேத்யூஸ் சாமுவேல், "இந்தியா ஒரு பலத்த இழப்பைச் சந்தித்திருக்கிறது. இந்திய வீரர்கள் உயிர்த் தியாகம் செய்திருக்கிறார்கள். சீனா இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்தது ஏதோ இந்த மாதம் நடந்த சம்பவமல்ல. சீனாவின் ஆக்கிரமிப்பு பற்றி மோடி அரசு கண்டுகொள்ளாமல் இருந்தது கவலைக்குரிய விசயம்'' என்கிறார்.

கருத்துகள் இல்லை: