புதன், 8 ஜூலை, 2020

என் மகனையும் ( மகேந்திரன்) கொன்றனர்: சாத்தான்குளம் போலீஸுக்கு எதிராக வழக்கு!

என் மகனையும் கொன்றனர்: சாத்தான்குளம் போலீஸுக்கு எதிராக வழக்கு!மின்னம்பலம் : சாத்தான்குளம் காவல் துறையினருக்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் காவல் துறையின் தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை இதனை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. சிபிசிஐடி விசாரணை நடந்து வருவதோடு, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதுபோலவே சாத்தான்குளம் காவல் துறையினரின் தாக்குதலுக்கு ஆளாகி மகேந்திரன் என்பவர் உயிரிழந்த தகவலையும் விரிவாக பதிவு செய்திருந்தோம்.

இந்த நிலையில் மகேந்திரன் மரணம் குறித்தும் விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென அவரது தாயார் வடிவு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், “ஜெயக்குமார் என்பவரின் கொலை வழக்கில் எனது மூத்த மகன் துரையை விசாரிக்க வந்த காவல் துறையினர், அவர் வீட்டில் இல்லாத காரணத்தால் இரண்டாவது மகன் மகேந்திரனை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
காவல் நிலையத்தில் வைத்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் உள்ளிட்டோர் மகேந்திரனை கடுமையாகத் தாக்கியதாகவும், பின்னர் மே 24 ஆம் தேதி அன்று இரவு மகேந்திரன் சுயநினைவு இழந்த நிலையில் வெளியே அனுப்பப்பட்டதாகவும் குறிப்பிட்ட அவர், “மகேந்திரனை மருத்துவமனையில் அனுமதித்தோம். தலையில் பலத்த காயம் உள்ளதாகவும், மூளையில் ரத்தம் உறைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் ஜூன் 13 தேதி அன்று சிகிச்சை பலனின்றி மகேந்திரன் உயிரிழந்தார்” என்று குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக எஸ்.பி, மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்ததாகவும், ஆனால் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை என்று குறிப்பிட்டதோடு, “எனது மகனைத் தாக்கிய காவல் துறையினர் மீது ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகிறது. இதுபோலவே, எனது மகன் உயிரிழப்பு சம்பந்தமாக விசாரணை நடத்தவும், என் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த வழக்கை இன்று (ஜூலை 8) விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக உள் துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.
எழில்

கருத்துகள் இல்லை: