பிரதீப். வீ. பிலீப் |
கூலி கொலை பாரதி |
லஞ்ச புரோக்கர்ஸ் |
குறிப்பாக சாத்தான்குளம் பகுதியில் “பிரெண்ட்ஸ் ஆப் போலீசு” என்ற போர்வையில் ஆர்.எஸ்.எஸ்.-ன் துணை அமைப்பான சேவா பாரதியைச் சேர்ந்தவர்கள் இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் குற்றம்சாட்டியுமே அக்கும்பல் கைது செய்யப்படவில்லை.
ஜெயராஜ் பென்னிக்ஸ் படுகொலை மட்டுமல்ல, இதற்கு முன்னதாகவும் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் கும்பல் போலீசோடு இணைந்து தாக்குதலில் ஈடுபட்ட சம்பவங்கள் குறித்து பலரும் வெளிப்படையாகப் பேசத் துவங்கியுள்ளனர். இதை உறுதிபடுத்தும் விதமாக சாத்தான்குளம் போலீசு நிலையத்தில் மகேந்திரன் என்பவரை தாக்கியது தொடர்பாக “பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ்” ஒருவர் தன் நண்பருடன் பேசிய ஆடியோ உரையாடல் பதிவும் சமீபத்தில் செய்தி ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது.
போலீஸ் – பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் கூட்டணி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளில் செய்து வந்த அட்டூழியங்களில் ஒரு சிலவற்றை மட்டும் பார்க்கலாம்.
சம்பவம் 1: கடந்த மே 24-ம் தேதி பேய்க்குளம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரை விசாரணைக்காக அழைத்து வந்து போலீசும், பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் கும்பலும் கடுமையாகத் தாக்கியதில் ஜுன் 13-ம் தேதி அன்று மகேந்திரன் இறந்திருக்கிறார்.
சம்பவம் 2: சாத்தான்குளம் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில் தமிழக முதல்வருக்கு அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில் கூறப்படும் சம்பவங்கள், சாத்தான்குளம் போலீசின் மதவெறியை அம்பலப்படுத்துகிறது. அந்த புகாரின் படி, சாத்தான்குளம் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி ஜெபக்கூட்டம் நடத்திக் கொண்டிருந்த மதபோதகர் லாசர் பர்னபாஸ் உள்ளிட்ட பத்து கிறிஸ்தவர்களை போலீசு நிலையத்திற்கு அழைத்துச் சென்று அடித்து சித்ரவதை செய்திருக்கிறார்கள். குறிப்பாக மத போதகரைத் தாக்கிய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் “எங்கே கூப்டுடா உன் கர்த்தரை” என்று சொல்லியே அடித்திருக்கிறார். இந்தத் தகவல் அறிந்த ஊர் பஞ்சாயத்து தலைவர் போலீசு நிலையத்திற்கு விசாரிப்பதற்குச் சென்றபோது அவரையும் அடித்து விரட்டியிருக்கிறது போலீசு.
போலீசால் பாதிக்கப்பட்ட லாசர் பர்னபாஸ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரம் சிகிச்சை பெற்ற பின்னர் இது குறித்து டிஐஜியிடம் புகார் அளித்திருக்கிறார். ஆனால் தாக்குதல் தொடுத்த கிரிமினல் போலீசு மீதும் பிரெண்ட்ஸ் ஆப் போலீசு மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் சக காவலர்கள் குறுகிய காலத்தில் 40-க்கும் மேற்பட்டோரை தாக்கியிருப்பதாகவும், அதிலும் திட்டமிட்டு குறிப்பிட்ட சிறுபான்மை மக்களை கடுமையாக தாக்கி வந்திருப்பதாகவும், இவர்களுக்கு உறுதுணையாக பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்ற பெயரில் சில மதவாத சக்திகளும் இணைந்து கொண்டு இந்த செயலில் ஈடுபட்டிருப்பதாகவும் அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
போலீசு துணை ஆய்வாளர் ரகுகணேஷின் மதவெறியையும் இதன் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.
சம்பவம் 3: கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் கன்னியாகுமரி மாவட்டம் மருதன்கோடு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான ராஜன் பணி முடிந்து வீடு திரும்புகையில் மார்த்தாண்டம் போலீசு நிலைய ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் உடன் ஏற்பட்ட தகராறில் கொல்லப்படார். இரு கைகள் உடைந்தும், உடலில் பல காயங்களுடன் இருந்ததாகவும் அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை மூடி மறைக்க போலீசு பெரிதும் முயன்றது. அப்பகுதியில் அனைத்துக் கட்சி சார்பாக போராட்டம் நடத்திய பின்னரும் கூட “சந்தேக மரணம்” என வழக்குப் பதிவு செய்து வழக்கை மூடியது போலீசு.
சம்பவம் 4: அதே ஆண்டு பிப்ரவரியில் தூத்துக்குடியில் இரு சக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர்கள மற்றும் கூலி தொழிலாளியை பிரெண்ட்ஸ் ஆப் போலீசு கும்பல் கடுமையாகத் தாக்கியதில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். கையில் ‘வாக்கி டாக்கி’யை வைத்துக்கொண்டு வாகன சோதனை என்ற பெயரில் ஒரு பெண்ணிடம் அத்துமீறிய ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ பொறுக்கி ஒருவன் குறித்து அப்போதே மாவட்ட போலீசுத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அப்படி யாரையும் நாங்கள் நியமிக்கவில்லை என்று கூறி அலட்சியப்படுத்தி இருக்கிறது போலீசு.
பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் எனும் இந்த சட்டவிரோத கும்பலுக்கு மேலிருந்து கீழ் மட்டம் வரையில் போலீசு மற்றும் அரசு அதிகார வர்க்கத்தின் ஆதரவு இருப்பதால், ஊடகங்களில் செய்தி வெளியாவதையோ, பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டிப்பதையோ பற்றிக் கொஞ்சமும் தயக்கமின்றி தொடர்ந்து குற்றச் சம்பவங்களை அரங்கேற்றி வருகிறது இந்தக் கும்பல்.
யார் இந்த ப்ரண்ட்ஸ் ஆப் போலிஸ்?
1993 -ம் ஆண்டு ராமநாதபுரத்தில் எஸ்.பி-யாகப் பணியாற்றிய பிரதீப். வீ. பிலீப் என்ற போலீசு அதிகாரி “பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசை” தொடங்கினார். கடந்த 1994-ம் ஆண்டில் ஜெயலலிதா அரசால் தமிழகம் முழுவதும் இந்த அமைப்பு விரிவுபடுத்தப்பட்டது. தற்போது 34 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களைக் கொண்டு தமிழகத்தின் அனைத்து போலீசு நிலையங்களிலும் செயல்பட்டு வருகிறது இந்த அமைப்பு.
தொடங்கப்படும்போது, “போலீசுக்கு உறுதுணையாக இருத்தல், குற்றங்களை கட்டுப்படுத்துதல், போலீசையும் பொதுமக்களையும் இடையிலான ஒரு பாலமாக இருத்தல்” என பல்வேறு பணிகளில் இந்த அமைப்பு ஈடுபடும் என்று கூறப்பட்டது.
ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை, வாகன சோதனையில் பணம் வசூலித்தல், இரவு நேர ரோந்து பணியில் சாலையோரத் தள்ளுவண்டி கடைகள் தொடங்கி சட்டவிரோத பார்கள் வரையில் போலீசுக்கு மாமூல் வசூலித்துக்கொடுத்தல் போன்ற பணிகளில் மட்டுமே ஈடுபட்டு வருகிறது இந்தக் கும்பல். “முறையாக” வசூலிக்க போலீசைப்போல, கையில் லத்திக் கம்பை வைத்துக் கொண்டு மிருகத்தனமாக தாக்கவும் செய்கிறது இந்தக் கிரிமினல் கும்பல். சுருக்கமாகச் சொன்னால் இவர்கள் போலீசுக்கு அடியாள் வேலை பார்க்கவும், ஆட்காட்டி வேலை பார்க்கவும் நியமிக்கப்பட்ட கூலிப்படைகளே. ஊதியத்திற்குப் பதிலாக போலீசு பறித்துத் தின்பதில் சிந்தியது சிதறியதை உண்டு திரியும் கூட்டமாகவே இந்த பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்காட்டி அமைப்புக்கு தமிழகத்தில் முன்னுதாரணமிக்க ஒரு வரலாறு இருக்கிறது.
தமிழகத்தில் நக்சல்பாரி எழுச்சி இருந்த 1979- 80-களில் வட ஆற்காடு, தர்மபுரி மாவட்டங்களில் கூலி விவசாயிகள் அரசியல் எழுச்சி பெற்று, அமைப்பாகத் திரண்டு பண்ணை ஆதிக்கத்தையும், கந்து வட்டிக் கொடுமையையும் மிகத் தீவிரமாக எதிர்த்து போராடினர். அப்போது அவர்களுக்குத் தலைமையேற்றுப் போராடிய கம்யூனிஸ்ட் தோழர்களை ஒழித்துக் கட்ட போலீசு முடுக்கி விடப்பட்டது. அச்சமயத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்களைத் திரட்டி ‘கிராமப் பாதுகாப்புக் குழு’ என்ற பெயரில் ஆட்காட்டி அமைப்பை உருவாக்கியது போலீசு. அத்தகைய ஆட்காட்டிகளின் உதவியோடு பல முன்னணி தோழர்கள் போலி மோதலில் படுகொலை செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் தற்போது பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசு அமைப்பு ஆட்காட்டி வேலையோடு அடியாள் வேலையையும் சேர்த்தே செய்து வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களில் இதன் செயல்பாடு குறிப்பிடும்படியாக அதிகரித்து வருகிறது.. ஆர்.எஸ்.எஸ் செல்வாக்குள்ள தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் இவர்கள் அடியாள் வேலையோடு இந்துத்துவா வேலைகளையும் சேர்த்து செய்கின்றனர். அப்படி செய்வதற்கு நிறைய வாய்ப்பும் இருக்கிறது.
தமிழகத்தில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு வடிவத்தை பல்வேறு மாநிலங்களும் பின்பற்றத் துவங்கியுள்ளன. குறிப்பாக இந்த அமைப்பு வடிவத்தை போலீசுத் துறையில் ஊடுருவதற்கான ஒரு வழிமுறையாக ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவக் கும்பல் பயன்படுத்தி வருகிறது.
பாஜக ஆளும் உ.பியில் “போலீஸ் மித்ரா” எனும் பெயரில் தொடங்கப்பட்ட “ப்ரண்ட்ஸ் ஆப் போலிஸ்” அமைப்பில் யோகி ஆதித்யநாத்தின் அமைப்பான “ஹிந்து யுவ வாகினி” எனும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அமைப்பு ஊடுருவி அங்கிருக்கும் மத சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. (ஆதாரம் ஸ்க்ரோல்)
இதே வழிமுறையில் இங்கு தமிழகத்திலும் சேவாபாரதி எனும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரிவு பிரெண்ட்ஸ் ஆப் போலீசு அமைப்பிற்குள் களமிறக்கப்பட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
இந்த சேவா பாரதி அமைப்பிற்கு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட வரலாறு இருக்கிறது. கடந்த 2003-ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் வெடிகுண்டு தயாரித்ததற்காகவும், கிறுஸ்தவர்களுக்கு எதிராகக் கலவரம் செய்ததற்காகவும் திக்விஜய் சிங் அரசு சேவா பாரதியை தடை செய்ய பரிசீலித்து வந்தது குறிப்பிடத்தக்கது. வட மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான பல்வேறு கலவரங்களை நடத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்தகைய ஒரு பயங்கரவாத அமைப்பைத்தான் இன்று பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் (ஆதாரம் இசட் நியூஸ்) என்று அங்கீகரித்திருக்கிறது தமிழக போலீசு.
“பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ்” அமைப்பு கடந்த ஜூலை 1-ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “சாத்தான்குளம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கும் எங்கள் அமைப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் எங்கள் உறுப்பினரே இல்லை. ஊடகங்களில் வந்த ஐ.டி கார்டு போல் நாங்கள் கொடுப்பதில்லை என்றும் யாரோ ஊடுருவல் செய்து போலியான ஐடி கார்டு தயாரித்து விட்டார்கள்” என்றும் சொல்கிறது.
ஊடகங்களில் வெளிவந்த ஐ.டி கார்டுகளில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசு மற்றும் சேவா பாரதியின் பெயர் பொறித்த ஐடி கார்டுகள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் கையெழுத்தும் இருந்திருக்கிறது. பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் சொல்வது படி பார்த்தாலும் கூட, சேவா பாரதி பெயரில் அவர்கள் அடையாள அட்டைகள் கொடுக்கவில்லை என்று எடுத்துக் கொண்டால், சட்டவிரோதமாக பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பெயரில் அடையாள அட்டை வழங்கிய சேவா பாரதி மேல் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமே ? போலீசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?
அதைவிட முக்கியமாக நெல்லை மாவட்டத்தில் வெளிப்படையாக சேவா பாரதி – ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் பெயரில் கொரோனா விழிப்புணர்வு சுவரொட்டி ஒட்டியிருப்பது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்தச் சுவரொட்டிகளையும் போலி என மறுக்கப் போகிறதா பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசு அமைப்பு.
ஜெயராஜ் – பெனிக்ஸ் கொட்டடிப் படுகொலைக் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி உலகமே போராடும்போது தமிழகத்தின் ஆர்.எஸ்.எஸ் சங்கிகளும், பாஜகவின் தலைவரும் போலீசுக்கு வக்காலத்து வாங்கிவருகின்றனர். பாஜக மாநிலத் தலைவர் முருகன், “சாத்தான்குளம் விவகாரம் ஒரு சிறிய பிரச்சினை. இது சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை. தேவையில்லாத பிரச்சினை. ஒரு சிறிய பிரச்சினையை வைத்து பெரிய அரசியல் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று கூறியிருக்கிறார்.
“போலீசுக்கு எதிரான எந்தவிதமான போராட்டமும் வெகுஜன விரோதப் போராட்டமாகவே கருதப்படும்” என்கிறார் எச். ராஜா. மேலும் தென் மாவட்டங்களில் இருக்கும் சாதிவெறி சங்களை தூண்டி விட்டு கொலைக் குற்றவாளிகளான போலீசுக்கு ஆதரவாக சுவரொட்டி பிரச்சாரம் செய்கிறது ஆர்.எஸ்.எஸ். – இந்துத்துவக் கும்பல்.
இந்தக் கொட்டடிக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.ஐ பாலகிருஷ்ணன் விசாரணையின்போது “காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வருபவர்களை வழக்கமாகத் தாக்குவது போலவே இருவரையும் தாக்கினோம். இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை” என வாக்குமூலம் அளித்ததாக விகடன் இணையதளம் குறிப்பிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தாக்குவதே சட்டவிரோதமானது எனும்நிலையில், இவர்களின் வழக்கமான தாக்குதலே மரணத்தை வரவழைக்கத்தக்கதாக இருக்கிறது என்பது இந்த வாக்குமூலத்திலிருந்து அப்பட்டமாகத் தெரிகிறது.
சட்டீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் போரிடுவதாகக் கூறிக் கொண்டு அப்பாவி பழங்குடியின மலைவாழ் மக்களை அடித்து விரட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்த கிரிமினல் கும்பலை திரட்டி சல்வா ஜூடும் என்ற அமைப்பை ஏற்படுத்தியது சட்டீஸ்கர் அரசு. இந்த சட்டவிரோதக் கும்பல் பழங்குடியின மக்களைக் கொலை செய்வது, கிராமங்களையே எரிப்பது, பாலியல் வன்புணர்வில் ஈடுபடுவது எனத் தொடர்ந்து அனைத்து சட்டவிரோத வழியிலும் பழங்குடியின மக்களைத் துன்புறுத்திக் கொன்றது. பல்வேறு போராட்டங்களின் ஊடாக இது அம்பலப்படுத்தப்பட்ட பின்னர் அந்த அமைப்பை சட்டவிரோதமானது என்று கூறி தடை செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில் போலீசின் அனைத்து அட்டூழியங்களிலும் நீக்கமறப் பங்கு வகிக்கும் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் எனும் சட்டவிரோதக் கும்பலை உடனடியாக கலைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. மேலும் இதில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதக் கும்பல் பல்வேறு பெயர்களில் ஊடுறுவியிருப்பதும் இந்த அமைப்பினால் மக்களுக்க்கு ஏற்படவிருக்கும் அபாயத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
போலீசு என்ற அமைப்பு இல்லாமலேயே சமூகம் இயங்கமுடியும் என்பதையும் ஆளும்வர்க்கத்தின் அடியாள் படைதான் போலீசு என்பதையும் மெரினா போராட்டமும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டமும் நமக்கு உணர்த்தியிருக்கின்றன. சாத்தான்குளம் ஜெயராஜ் – பெனிக்ஸ் இருவரின் கொடூரமான படுகொலை, இந்த போலீசு அமைப்பைக் கலைக்க வேண்டியதன் அவசியத்தை நம்மிடையே எடுத்துரைக்கிறது. போலீசு அமைப்பே தேவையில்லாத ஆணியாக இருக்கும்போது “பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ்” எனும் சட்டவிரோத கிரிமினல் கும்பலையும், அதன் பின்னால் இருந்து செயல்படும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளையும் தமிழகத்தில் இருந்து துடைத்தெறியாமல் நமக்கு விடிவேதும் கிடையாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக