ஞாயிறு, 12 ஜூலை, 2020

பன்ருட்டியில் போலி ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ) வங்கி கிளை

tamil.indianexpress.com : கடலூர் மாவட்டம், பன்ருட்டியில் போலியாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ) வங்கி கிளையை நடத்தி வந்த பலே ஆசாமிகளை போலிஸார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், பன்ருட்டியில் போலியாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ) வங்கி கிளையை நடத்தி வந்த 3 பேர்களை போலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், முன்னாள் எஸ்பிஐ வங்கி ஊழியரின் மகன் கமல் பாபு (19) தனது தொடர்புகள் மூலம் கிளை அமைப்பதற்காக கணினிகள், லாக்கர்கள், சலான்கள் மற்றும் போலி ஆவணங்கள் போன்றவற்றை கொண்டு வந்ததாக தெரிவித்தனர். அதோடு, பன்ருட்டி பஜார் கிளை என்ற பெயரில் ஒரு வலைத்தளமும் உருவாக்கப்பட்டுள்ளது.
பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு, ஏப்ரல் மாதத்தில் யாரும் இது பற்றி சந்தேகப்பட மாட்டார்கள் என்ற எண்ணத்தில், கமல் பாபு, ஏ.குமார் (42), மற்றும் எம்.மாணிக்கம் (52) ஆகியோருடன் இணைந்து போலியாக இத வங்கி கிளையை தொடங்கியுள்ளனர்.

பன்ருட்டியில் வடக்கு பஜாரில் புதிதாக எஸ்.பி.ஐ வங்கி கிளை தொடங்கப்பட்டிருப்பது குறித்து எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர் ஒருவர், ஏற்கெனவே இருக்கிற எஸ்.பி.ஐ வங்கி கிளையின் மேலாளரிடம் விசாரித்தபோது இந்த வங்கி பற்றி தெரிய வந்தது.
வங்கி வாடிக்கையாளர்களில் ஒருவர், அந்த போலி வங்கி கிளையிலிருந்து வாங்கிய ரசீதைக் காட்டிய பின்னர், மேலாளரும் பிற அதிகாரிகளும் போலி கிளையை பார்வையிட்டனர். அங்கே ஒரு உண்மையான எஸ்.பி.ஐ வங்கி கிளைக்கு தேவையான அனைத்து பொருட்களுடன் அசல் எஸ்.பி.ஐ வங்கி கிளையை போல இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, அவர்கள் உடனடியாக பன்ருட்டி போலீசில் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து, இந்த கமல் பாபு, ஏ.குமா, எம்.மாணிக்கம் ஆகிய 3 பேரும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு, 473, 469, 484, 109 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் இடம் பேசிய பன்ருட்டி காவல் ஆய்வாளர் அம்பேத்கர், பாபு சிறிய வயதிலிருந்தே அனைத்து வங்கி நடவடிக்கைகளையும் கற்றுக்கொண்டுள்ளார். எனவே, அவர் ஒரு போலி கிளையைத் திறக்க முயற்சி செய்தார்.
இது குறித்து காவல் ஆய்வாளர் அம்பேத்கர் கூறுகையில், “பாபுவின் பெற்றோர் முன்னாள் எஸ்பிஐ வங்கி ஊழியர்கள். சிறு வயதிலிருந்தே, அவர் வங்கியைப் பார்த்து வந்துள்ளார். அதனால், ஒரு வங்கி கிளை எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கற்றுக்கொண்டார். அவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது தாயார் ஓய்வு பெற்றார். அவரது தந்தை இறந்த பிறகு, அவர் வாரிசு அடிப்படையில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார். அவரது விண்ணப்பம் குறித்த நடவடிக்கை தாமதமானதால் விரக்தியடைந்தார். எனவே அவரே ஒரு வங்கியைத் திறக்க முடிவு செய்துள்ளார்.” என்று கூறினார்.
மேலும், அவர் கூறியதாவது: “இந்த போலி வங்கி கிளையில் பணத்தை இழந்ததாக வாடிக்கையாளர்களிடமிருந்து எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. நாங்கள் விசாரித்தபோது, ​​கமல் பாபு தான் ஒருபோதும் மக்களை ஏமாற்ற விரும்பவில்லை. ஆனால், தனக்காக ஒரு வங்கியைத் திறக்க விரும்புவதாகக் கூறினார். இருப்பினும், அவரது தாயின் கணக்கிற்கும் அவரது அத்தை கணக்கிற்கும் இடையே நிறைய பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. அது குறித்து விசாரணை நடந்து வருகிறது.” என்று கூறினார்.
பன்ருட்டியில் போலியாக எ.பி.ஐ. வங்கி கிளையைத் தொடங்கி நடத்தி வந்தவர்களை போலீசார் கைது செய்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை: