திங்கள், 13 ஜூலை, 2020

வேளாளர்' என்பவர்கள் உண்மையில் யார்? தமிழக அரசியலில் தேவேந்திரகுல வேளாளர்: சாதி அடையாளத்தால் சர்ச்சை

tamilnadu politics caste agricultureவிக்னேஷ். அ - பிபிசி தமிழ் : இந்த மாதத் தொடக்கத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல். முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று புதிய சாதி – அரசியல் விவாதத்தை தமிழகத்தில் உருவாக்கியுள்ளது.
முருகனின் அறிக்கை பெரிய அளவிலான அரசியல் அதிர்வலைகளை எதுவும் தமிழகத்தில் ஏற்படுத்தவில்லைதான் என்றாலும், பல்வேறு அரசியல் கட்சியினரும் குறிப்பாக சில சாதியினர் உடன் சேர்ந்து அடையாளப்படுத்தப்படும் அரசியல்கட்சிகளும் இதற்கு எதிர்வினை ஆற்றுவது கவனத்தைப் பெற்றுள்ளது.
ஆவணங்கள் மூலமாகவும் வேளாண் தொழில் செய்தவர்களாக அறியப்பட்ட சில சமூகங்களின் பெயர்களில் ‘வேளாளர்’ எனும் பதம் அலுவல்பூர்வமாக, சுதந்திர இந்தியாவில் சேர்க்கப்படவில்லை.
சிலர் அதைப் பொருட்படுத்தவில்லை; சிலர் அது தங்கள் சாதியின் பெயருடன் இணைக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள்.

பாரதிய ஜனதா கட்சித் தலைவரின் சர்ச்சை அறிக்கை



L Murugan bjp tamil naduபடத்தின் காப்புரிமை Dr L Murugan Twitter Page
ஜூலை 4-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில் “தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்” என்று முருகன் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது தமிழகத்தில் பட்டியல் சாதிகளாக உள்ள குடும்பன், கடையன், தேவேந்திர குலத்தான், பள்ளன், வாதிரியார், பண்ணாடி, காலாடி ஆகிய ஏழு பிரிவுகளையும் ‘தேவேந்திர குல வேளாளர்’ எனும் ஒரே சாதியாக அறிவிக்கவேண்டும் என்று பல்லாண்டு காலமாக ஒரு கோரிக்கை நிலவி வருகிறது.
அந்த கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் முருகன்.
தேவேந்திர குல வேளாளர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் சாதியினரை இட ஒதுக்கீட்டுப் பிரிவில் பட்டியல் வகுப்பிலிருந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று பல சாதிச் சங்கங்களும் அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருவது குறித்து முருகன் அந்த அறிக்கையில் எதையும் குறிப்பிடவில்லை.
பாஜக தலைவர் முருகன் அறிக்கை வெளியிட்ட மூன்று நாட்களில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரியும் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 7ஆம் தேதி ஓர் அறிக்கையை வெளியிட்டார்.
அதில் 2010ஆம் ஆண்டு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பீட்டர் அல்போன்ஸ் இதே கோரிக்கையை சட்டமன்றத்தில் முன்வைத்தார் எனவும் அதை அப்போதைய தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி உடனடியாக ஏற்றுக் கொண்டு நீதிபதி ஜனார்த்தனன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து இந்த கோரிக்கையை பரிசீலித்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டார் என்றும் அழகிரி தெரிவித்துள்ளார்.
ஏழு வெவ்வேறு சாதிகளாக பட்டியலின வகுப்புகள் பிரிவில் அடையாளப்படுத்தப்படும் அனைத்து சாதிகளையும் ஒரே சாதியாக்க வேண்டும் என்று நீதிபதி ஜனார்த்தனன் இந்த கோரிக்கைக்கு ஆதரவாக அறிக்கை அளித்தார்; ஆனால் அறிக்கை சமர்ப்பித்த சில நாட்களிலேயே 2011ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அந்தப் பரிந்துரையை நிறைவேற்ற முடியவில்லை என்றும் அழகிரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதே கோரிக்கை தொடர்பாக தற்போதைய ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட குழுவும் தமிழக அரசுக்கு தனது அறிக்கையை அளித்துள்ளது.

சாதிப் பெயரால் சர்ச்சை

இப்பொழுது பிரச்சனைக்கும் விவாதத்துக்கும் உள்ளாகி இருப்பது இந்தக் கோரிக்கை தாமதமாவதல்ல.
‘வேளாளர்’ எனும் பெயரில் ஏற்கனவே சில சாதிகள் இருக்கும்போது மேலும் புதிதாக ஒரு சாதிக்கு அந்தப் பெயரை வழங்குவது ஏற்கனவே ‘வேளாளர்’ என்று அறியப்படுவோரின் உணர்வுகளைப் புண்படுத்தும் என்றும் தமிழகத்தில் சமூக அமைதிக்கும் நல்லிணக்கத்துக்கு பாதிப்பை உண்டாக்கும் என்றும் இப்போது சிலர் தெரிவிக்கும் ஆட்சேபனைதான் புதிய விவாதத்துக்கு காரணம்.
பல ஆண்டுகளாக மேற்கண்ட கோரிக்கை உள்ளது; இது உடனடியாக நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவு என்றாலும், இப்போது ஓர் சுகாதார அவசரநிலை இருக்கும் காலகட்டத்திலும் சமூக ஊடகங்களிலும், அரசியல் அரங்கிலும் இந்தப் பிரச்சனை கவனத்தைப் பெற்றுள்ளது.
தமிழகத்தில் பட்டியல் சாதிப் பிரிவிலுள்ள எந்த சாதியும் ‘வேளாளர்’ எனும் பெயரை தாங்கி இருக்கவில்லை.
ஒருவேளை மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஏழு பிரிவுகளும் ஒரே பிரிவாக அறிவிக்கப்பட்டால் பட்டியலின வகுப்பிலேயே ‘வேளாளர்’ என்று பெயரைப் பெற்றுள்ள முதல் மற்றும் ஒரே சாதியாக தேவேந்திரகுல வேளாளர் எனப்படும் சாதிதான் இருக்கும்.
தமிழகத்தில் தற்போது, தங்களது சாதியின் பெயரில் ‘வேளாளர்’ எனும் பெயரைக் கொண்டுள்ள சாதிகள் அனைத்துமே பிற்படுத்தப்பட்ட சாதிகள் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் பட்டியலில் இருக்கின்றன.

‘வேளாளர்’ யார்?

சாதிப் பெயர்கள் என்பது இப்போது கார்ப்பரேட் நிறுவனங்களின் ‘டிரேட்மார்க்’ போல பயன்படுத்தப்படுகிறது என்கிறார் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் ஆ. சிவசுப்பிரமணியன்.
“காலப்போக்கில் வேளாளர் என்ற தொழில் பிரிவு வேளாளர் என்ற சாதியாக மாறிவிட்டது. வேளாளர் என்ற சாதி பல்வேறு சாதிகளை உள்ளடக்கிய பொதுச் சொல்லாகவே இன்று வழக்கிலுள்ளது. இதில் அடங்கிய சாதியினர் சிலர் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் முகமாக கொங்கு வேளாளர், சோழிய வேளாளர், சைவ வேளாளர், பாண்டிய வேளாளர், நாஞ்சில் வேளாளர், துளுவ வேளாளர், கார்காத்த வேளாளர், இசை வேளாளர் என்று அடைமொழி ஏற்றுக்கொண்டுள்ளனர்.”
“இவர்களது சாதிப் பட்டங்கள் கவுண்டர், முதலியார், பிள்ளை, பிள்ளையன் என உள்ளன. அட்டவணையில் இடம் பெற்றுள்ள பள்ளர் என்ற சாதியினரைக் குறிக்கும் சொற்களில் ஒன்று தேவேந்திர குல வேளாளர் என்பதாகும். இவர்கள் வேளாண்மையில் ஈடுபட்டவர்கள். இன்று போல ஒரு குறிப்பிட்ட சாதியை குறிக்கும் சொல்லாக வேளாளர் என்ற சொல் தொடக்கத்தில் வழக்கில் இல்லை. வேளாண்மைத் தொழிலுக்கு புதிதாக நுழைந்தோர் தம் பழைய குழு அல்லது சாதி அடையாளத்தைத் துறந்துள்ளனர்,” என ‘பதவி சாதியானமை’ எனும் தனது கட்டுரை ஒன்றில் சிவசுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார்.



ஆ. சிவசுப்பிரமணியன்
திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு போன்ற நிகண்டுகளிலும் (பழைய அகராதிகள்), பள்ளு வகை சிற்றிலக்கியத்திலும் தேவேந்திர குல வேளாளர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் மக்கள் வேளாண் தொழில் செய்ததற்கான சான்றுகள் இருப்பதைப் போலவே ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் வரையிலும் அவர்கள் வேளாண் தொழில் செய்ததற்கான சான்றையும் சிவசுப்பிரமணியன் சுட்டிக்காட்டுகிறார்.
“சொத்து வரி செலுத்துபவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிடவும் வாக்களிக்கவும் முடியும் என்று ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஒரு சட்டமிருந்தது. தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் விடுதலைக்கு முன்பு நடந்த சென்னை மாகாண சட்டமன்றத்துக்கான தேர்தலில் திருத்துறைப்பூண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதற்கான சான்றுகள் இருக்கின்றன. அவ்வாறு தேர்தலில் வெற்றி பெற்றவர் வாக்களிக்கும் உரிமை உடைய அதாவது நிலவுடைமை உடைய தனது சொந்த சாதியினரின் ஆதரவையும் சேர்த்துப் பெற்றுதான் வெற்றி பெற்றிருக்க முடியும். அப்படியானால் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் வரை வேளாண் தொழில் செய்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன,” என்கிறார் சிவசுப்பிரமணியன்.

“சாதி – உணர்வு – அடையாளம்”

“கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அனைவரும் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் முருகன் இதுபோன்ற ஓர் அறிக்கையை வெளியிடுவது திசைதிருப்பும் முயற்சி,” என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன்.



கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன்படத்தின் காப்புரிமை kongu eswaran twitter page
Image caption கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன்
“வெவ்வேறு சாதிகளாக அடையாளப்படுத்தப்படுபவர்கள் ஒரே பெயரில் அடையாளப்படுத்தப்பட்ட வேண்டும் என்று விரும்பினால் ‘தேவேந்திர குலத்தார்’ என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். தேவேந்திரகுல வேளாளர் என்று அடையாளப்படுத்த விரும்பும்போதுதான் ‘வேளாளர்’ எனும் பெயர் வைத்துள்ள வேறு சில சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இடையே எதிர்ப்பு கிளம்புகிறது.”
“சாதி என்பது ஒருவரின் உணர்வு சார்ந்த விஷயம். அதை சிலர் தங்களது அடையாளமாக பார்க்கிறார்கள். தேவேந்திர குலத்தார் வேளாண் தொழில் செய்தவர்கள் என்று வரலாற்றில் அல்லது இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருந்தால் அதை வைத்து இப்போது இருக்கும் இளைஞர்களின் மனதை மாற்ற முடியாது,” என்று கூறுகிறார் ஈஸ்வரன்.

கருத்துகள் இல்லை: