சனி, 18 ஜூலை, 2020

ராஜேந்திரபாலாஜியை பற்றி இரவு 12 மணி வரை விசாரணை நடத்திய வேலுமணி

ராஜேந்திரபாலாஜி: இரவு 12 மணி வரை விசாரணை நடத்திய வேலுமணிமின்னமபலம் : அதிமுகவின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து மார்ச் 23 ஆம் தேதி நீக்கப்பட்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீண்டும் கடந்த ஜூலை 3 ஆம் தேதி மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
மீண்டும் விருதுநகர் மாவட்டப் பொறுப்பாளரான பிறகும் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் ராஜேந்திர பாலாஜியை மரியாதை நிமித்தமாக சென்று சந்திக்கவில்லை. ஆனால் மாவட்டத்தின் அத்தனை நிர்வாகிகளும் சேர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று முன் தினம் (ஜூலை 16) சேலத்திலுள்ள அவரது வீட்டில் சந்தித்திருக்கிறார்கள்.

தனக்கு மீண்டும் பதவி வேண்டி ராஜேந்திரபாலாஜி கடந்த மே 23, 34 தேதிகளில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோரை அவசரப் பயணமாக சென்று சந்தித்தார். இதுபற்றி மின்னம்பலத்தில், குமரி-சேலம் கோவை: அமைச்சரின் அவசரப் பயணம்! என்ற தலைப்பில் மே 26 ஆம் தேதி விரிவான செய்தி வெளியிட்டிருந்தோம். அன்று ராஜேந்திரபாலாஜி சென்ற அதே ரூட்டில் இன்று அவருக்கு எதிராக சென்றிருக்கிறார்கள் விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள்.
இதுபற்றி அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.
“விருதுநகர் மாவட்டத்திலுள்ள அதிமுக நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் 19 பேர் உட்பட மொத்தம் 25 நிர்வாகிகள் ஜூலை 16 விருதுநகரில் இருந்து புறப்பட்டனர். ராஜேந்திரபாலாஜியின் தொகுதியான சிவகாசியில் உள்ள இரு ஒன்றிய செயலாளர்களில் ஒருவர் தவிர அனைத்து நிர்வாகிகளும் சேலம் சென்றனர். நேற்று மாலை எடப்பாடி இல்லம் சென்ற அவர்களை சிறிது நேரக் காத்திருப்புக்குப் பின் உள்ளே வருமாறு அழைத்தார் முதல்வர். சுமார் ஐந்து நிர்வாகிகள் மட்டும் உள்ளே சென்றனர். ராஜேந்திரபாலாஜியை மீண்டும் மாவட்டப் பொறுப்பாளராக நியமித்தது குறித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தவர்கள், அமைச்சரைப் பார்க்காமல் முதலமைச்சரைப் பார்க்க வந்த காரணங்களைப் பட்டியலிட்டனர். சிறிது நேரத்துக்குப் பின் அவர்களோடே வெளியே வந்த முதல்வர், வெளியே நின்ற மற்ற நிர்வாகிகளைப் பார்த்து ‘நான் பாத்துக்கறேன் போயிட்டு வாங்க’ என்று அனுப்பி வைத்திருக்கிறார்.
சேலத்தில் இருந்து புறப்பட்ட அவர்கள் நேற்று காலை கோவை வந்தடைந்தனர். அங்கே அமைச்சர் எஸ்பி. வேலுமணியைப் பார்த்து அவரிடமும் ராஜேந்திரபாலாஜியை பற்றி முறையிடுவதுதான் அவர்களின் நோக்கம். ஏனெனில் ராஜேந்திரபாலாஜிக்கு மீண்டும் பதவி கிடைத்ததே வேலுமணியால்தான் என்பது அந்த நிர்வாகிகளின் நம்பிக்கை. இதனால் வேலுமணியைப் பார்க்க சென்றிருக்கிறார்கள். அவர்களிடம் வேலுமணி, ‘காலையில் வேலை இருக்கிறது. சாவகாசமாக இன்று மாலை சந்திப்போம்’ என்று சொல்லவே இன்று பகல் முழுதும் வேலுமணிக்காக காத்திருந்து மாலை சந்திக்கிறார்கள்” என்கிறார்கள்.
மாலை என்றாலும் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருக்கும் விருந்தினர் மாளிகையில் இரவு 8 மணிக்குதான் விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அத்தனை பேரையும் சந்தித்தார் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி. லுங்கி கட்டிக் கொண்டு கேஷுவலாக அமர்ந்திருந்த வேலுமணி அதிமுக நிர்வாகிகளின் ராஜேந்திரபாலாஜி பற்றிய புகார்களைக் கேட்க கேட்க அதிர்ந்துவிட்டார், இரு முறை டீ கொடுத்தவர் பின் அனைவருக்கும் இட்லி, தோசை டிபன் வாங்கிக் கொடுத்து பேச இந்த விசாரணை நேற்று இரவு 12 வரை நீண்டிருக்கிறது.
“விருதுநகர் மாவட்டத்தில் 11 ஒன்றியங்கள் இருக்கின்றன. இதில் அதிமுக ஜெயிச்ச ஒரே ஒன்றியம் விருதுநகர்தான். மத்த ஒன்றியங்கள்ல நம்ம ஜெயிக்க முடியலை. எல்லாத்துக்கும் காரணம் நம்ம அமைச்சர்தான். இன்னும் கட்சியில ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கிறது.” என்று ஆரம்பித்து ராஜேந்திரபாலாஜி மீதான புகார்களை அடுக்கினார்கள்.
எம்.ஜி.ஆர்.காலத்தில் இருந்து கட்சியில் இருக்கும் சீனியரான விருதுநகர் ஒன்றிய சேர்மன் கலாநிதி மாவட்டத்தின் தற்போதைய நிலைமையை வேலுமணியிடம் விவரித்திருக்கிறார். ஒவ்வொருவரிடமும் இதுபோல விரிவாக பேசிய வேலுமணி கடைசியில், “நீங்க இவ்வளவு பேரு வருவீங்கன்னு எதிர்பார்க்கலை. உடனே போய் டெபுடி சிம் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அண்ணனை போய் பாருங்க. நானும் அவர்கிட்ட பேசுறேன்” என்று சொல்லி அவர்களை நள்ளிரவில் வழியனுப்பி வைத்திருக்கிறார் வேலுமணி.
இதையடுத்து அனைத்து நிர்வாகிகளும் எவ்வித இ பாஸும் இல்லாமல் `12 கார்களில் அங்கிருந்து தேனி புறப்பட்டார்கள்.
-ஆரா

கருத்துகள் இல்லை: