புதன், 24 ஏப்ரல், 2019

அ.தி.மு.க தினகரன் பின்னால் வராது!” - கிருஷ்ணப்ரியா அதிரடி

அ.சையது அபுதாஹிர் ஜெ விகடன் :
யலலிதா இருந்தவரை அ.தி.மு.க-வின் அதிகாரம் மிக்க சக்திகளாக வலம்வந்தவர்கள், சசிகலாவின் குடும்ப உறவினர்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் ஏற்பட்ட விரிசல்கள், சசிகலா குடும்பத்துக்குள்ளேயும் பிளவுகளை ஏற்படுத்தி யிருக்கிறது. குறிப்பாக, தினகரனுக்கு எதிராக இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில், அ.ம.மு.க-வின் பொதுச் செயலாளராக டி.டி.வி தினகரன் நியமிக்கப்பட்டது குறித்து அவரிடம் சில கேள்விகளை எழுப்பினோம்.

“தினகரன் அ.ம.மு.க-வின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டது குறித்து?”

‘‘என் அத்தை சசிகலா சொன்னார் என்ற ஒரே காரணத்தினால், தங்கள் பதவிகளைத் துறந்து, தினகரனின் பின்னால் நின்ற உண்மையான அ.தி.மு.க விசுவாசிகளுக்கு, தினகரனின் இந்த முடிவு பெரும் ஏமாற்றத்தை அளிக்கும். இவை அனைத்துமே தினகரனால் ஏற்கெனவே திட்டமிட்டு, அதன்படி அரங்கேறுகின்றன. என்னைப் பொறுத்தவரை இந்த நிகழ்வு ஒரு கேலிக்கூத்து.”
“சசிகலா ஒப்புதலுடன்தான் இந்த மாற்றம் நடந்ததா?”


“சசிகலாவின் ஒப்புதலுடன் நடந்ததாகத்தான் அவர் சொல்லிக் கொள்கிறார்!”

“ ‘அ.தி.மு.க எங்கள் கைக்கு வந்துவிடும்’ என்று தினகரன் சொல்லிவந்தாரே, இனி அது சாத்தியமா?”

“அ.தி.மு.க-வை அவர் கைக்குள் கொண்டுவர முடியாது என்கிற சட்டரீதியான தோல்வியை அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்ல, அ.தி.மு.க என்றைக்குமே தினகரனின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்குச் சாத்தியமே இல்லை.”
“சசிகலா உட்பட உங்கள் குடும்பத்தினர் யாருடைய  தலையீடும் அரசியலில் இருக்கக் கூடாது என்று தினகரன் நினைக்கிறாரா?”

“அவருடைய அ.ம.மு.க-வில் எவரும் இருக்கக் கூடாது என்று வேண்டுமானால் அவர் நினைக்கலாம். அரசியலிலேயே எங்கள் குடும்பத்தினர் யாரும் இருக்கக் கூடாது என்று நினைப்பதற்கு அவருக்கு மட்டுமல்ல... யாருக்கும் உரிமை கிடையாது.”

“அரசியல் கட்சியாகப் பதிவுசெய்ய வேண்டிய நெருக்கடி இருப்பதாலேயே, பொதுச் செயலாளர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டதாக தினகரன் தரப்பில் சொல்லப்படுகிறதே?”

“கட்சியாக இல்லை என்றால் பொதுச் சின்னம் கிடைக்காது என்ற நிலையும் சுயேச்சையாக தேர்தல் களத்தில் நின்றுள்ள அவருடைய வேட்பாளர்களில் ஒரு சிலர் வெற்றிபெற்றால், அவர்கள் தன்னைவிட்டு வேறு கட்சிக்கு மாறிவிடுவார்களோ என்கிற பீதியும் தினகரனுக்கு இருக்கிறது. அதனாலேயே இந்த முடிவை எடுத்திருக்கிறார்.”

“சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்த பிறகு அரசியலில் ஈடுபடுவாரா?”

“அதை சசிகலாதான் முடிவுசெய்ய வேண்டும்.”

- அ.சையது அபுதாஹிர்

கருத்துகள் இல்லை: