செவ்வாய், 23 ஏப்ரல், 2019

உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக அதிகரிப்பு.. .. இன்று இறுதிப் பயணம்

தமிழ் மிரர்: ஞாயிற்றுக்கிழமையன்று (21) நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 310ஆக அதிகரித்துள்ள அதேவேளை, 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.இதேவேளை, இந்த வெடிப்புச் சம்பவங்களால், வெளிநாட்டவர்கள் 32 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் உல்லாசப் பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த வெளிநாட்டவர்களில் 14 பேர் காணாமற்போயுள்ளனர் எனவும், வெளிநாட்டலுவல்கள் அமைச்சு ​தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இன்றைய தினம் (23) தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களது இறுதிக் கிரியைகள், இன்று இடம்பெறவுள்ளன.
இதனால், அரச, தனியார் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் அனைத்திலும், தேசியக் கொடி, அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
அத்துடன், இன்று காலை 8.30 மணி முதல் 8.33 மணி வரையான மூன்று நிமிடங்கள், குண்டு வெடிப்புகளால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொச்சிக்கடை – ஜிந்துப்பிட்டி சந்தியிலுள்ள கொழும்புத் துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்த வெடிகுண்டு பாதுகாப்பு தரப்பினரால் தகர்க்கப்பட்டது.
குறித்த வானுக்குள், 4 சமையல் எரிவாயுச் சிலிண்டர்களை இணைத்துப் பொருத்தப்பட்டிருந்த இந்தக் குண்டு, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் குண்டு செயழிலக்கும் பிரிவால் செயலிழக்கப்பட்டதாக, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரி சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லத்தீப் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த குண்டில் நூல் ஒன்று கட்டப்பட்டு இருந்ததாகவும் அந்த நூலின் மறு நுனியில், ஆயிரம் ரூபாய் நாணயத்தாள் ஒன்று கட்டப்பட்டு இருந்ததாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த நாணயத்தாளைக் காண்பவர்கள், அதனை எடுக்க முற்படும்போது, ​வெடிகுண்டு வெடிக்கும் வகையிலேயே சூட்சுமமான முறையில் திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும் எம்.ஆர்.லத்தீப் தெரிவித்துள்ளார்.
எனினும், குறித்த பிரதேசத்திலுள்ள மக்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் குண்டு ​தகர்க்கச் செய்யப்பட்டதாகவும் இதன்போது, பல வீடுகளின் கூரைகள், யன்னல்கள் சேதமடைந்துள்ளதுடன் கொழும்புத் துறைமுகத்தின் மதிலும் உடைந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை: