ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

இலங்கை: மேலும் இரண்டு இடங்களில் குண்டுவெடிப்பு!

இலங்கை: மேலும் இரண்டு இடங்களில் குண்டுவெடிப்பு!மின்னம்பலம் : ஈஸ்டர் பண்டிகை தினமான இன்று இலங்கையில் நிகழ்த்தப்பட்ட அடுத்தடுத்த குண்டுவெடிப்புகளால் 35 வெளிநாட்டவர் உட்பட சுமார் 160 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மூன்று தேவாலயங்களிலும், வெளிநாட்டவர் அதிகம் வந்துபோகும் மூன்று நட்சத்திர ஹோட்டல்களிலும் எட்டு குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. தமிழர்கள் அதிகம் வாழும் மட்டக்களப்பு நகரிலுள்ள சியோன் தேவாலயத்திலும் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவசர கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.
நிவாரணப் பணிகளுக்காக 200 ராணுவ வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து மதியம் மேலும் இரண்டு இடங்களில் குண்டுகள் வெடித்தன. தொடர் குண்டுவெடிப்புகள் காரணமாக இலங்கை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் உள்ளேயே முடங்கியுள்ளனர். மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும், இலங்கை தலைநகர் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஆணையத்திலும், முக்கிய தேவாலயங்களிலும் தாக்குதல் நடத்த தற்கொலை படையினர் திட்டமிட்டுள்ளதாக இலங்கை போலீஸ் தலைவர் புஜுத் ஜெயசுந்தரா ஏப்ரல் 11ஆம் தேதியன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல இந்திய தலைவர்களும், உலக நாடுகளின் தலைவர்களும், போப் பிரான்சிஸும் வருத்தம் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி இலங்கை அதிபர் சிறிசேனாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு இதுவரையில் எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எட்டாவது குண்டுவெடிப்பு ஒரு தற்கொலை படை தாக்குதல் எனவும், அதில் மூன்று போலீசார் உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலி செய்திகளையும், வதந்திகளையும் கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கையில் பேஸ்புக், வாட்சப், ட்விட்டர் போன்ற முக்கிய சமூக ஊடகங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: