ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

குமரி தேர்தல் அதிகாரி சிறைப்பிடிப்பு வீடியோ .. கடற்கரையோர கிராமங்களில் ஆயிரக்கணக்கானோருக்கு வாக்கு இல்லை

  
குமரி தொகுதியில் வரலாறு காணாத அளவில் ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டதால் மக்கள் ஆவேசம்....லோக்கல் தேர்தல் அலுவலர் சிறை பிடிப்பு....
உபயம் - பொன்னார் and தேர்தல் ஆணையம் கூட்டணி
மின்னம்பலம் :குடியரசுத் தலைவரிடம் முறையிடும் குமரி
ஒரே தொகுதியில் மாயமான 40 ஆயிரம் வாக்குகள்!மக்களவைத் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராமங்களான முட்டம், தூத்தூர் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தேர்தல் அதிகாரியை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் சமாதானம் செய்து தேர்தல் அதிகாரியை மீட்டனர்.

இந்த விவகாரம் இப்போது குமரியில் இருந்து குடியரசுத்தலைவர் வரைக்கும் செல்லும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து வருகிறது. காரணம் குமரி மாவட்ட கடற்கரை ஓர 48 மீனவ கிராமங்களில் இருந்து சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் நீக்கப்பட்டிருப்பது நேற்று மாலைதான் முழுமையாகத் தெரிந்தது. இந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர் வாக்காளர்களில் பெரும்பாலானோர் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள்.
தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சர்ச்சுகள் மூலம் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட நிலையில் வரிசை வரிசையாக சென்ற மீனவ மக்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. அங்கொன்றும் இங்கொன்றுமாக மீனவ வாக்குகள் மிஸ் ஆகியிருக்கின்றன என்று பலரும் நினைக்க,வாக்குப் பதிவு முடிவதற்கு சற்று நேரம் முன்புதான் குமரி கடற்கரை கிராமங்களான 48 மீனவ கிராமங்களிலும் இந்த திருட்டு விளையாடல் நடந்திருப்பது தெரிந்தது. இதுகுறித்து மீனவ மக்கள் போராட்டம் நடத்தியும் வாக்குரிமை அளிக்கப்படவில்லை.
இந்த விவகாரம் குறித்து குமரியைச் சேர்ந்தவரும் தெற்காசிய மீனவ தோழமை அமைப்பின் பொதுச் செயலாளருமான சர்ச்சில் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் பத்திரிகைக்காக நம்மிடம் பேசினார்.
“குமரியின் வரலாற்றிலோ, தமிழக வரலாற்றிலோ இதுவரை இப்படி நடந்ததில்லை. எங்கள் 48 மீனவ கிராமங்களிலும் சரியாக 500 முதல் ஆயிரம் மீனவ வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றன.
தூத்தூர் கிராமத்தில் 1,200 ஓட்டுகள் வாக்காளர் பட்டியலில் இல்லை. கலியப்பட்டினத்தில் 920 வாக்குகளைக் காணோம், இணையத்தில் 500 மீனவ வாக்குகள் பறிபோயின. இப்படி 48 மீனவ கிராமங்களிலும் மொத்தம் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் குறிப்பாக கத்தோலிக்க கிறிஸ்துவ மீனவர்களின் வாக்குகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
நாங்கள் ஃபார்ம் 7 நிரப்பி எங்கள் வாக்குகளை ரத்து செய்ய சொல்லி விண்ணப்பம் கொடுக்கவில்லை. 2016 சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் வாக்குப் பதிவு செய்தோம். அரசு வழங்கிய வாக்காளர் அடையாள அட்டை எல்லாரிடமும் இருக்கிறது.
இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் மட்டும் இத்தனை ஆயிரம் ஓட்டுகள் ரத்து செய்யப்பட்டது ஏன்? எங்கள் உரிமையை எங்களிடம் இருந்து திருடியது யார்? இந்தியக் குடியரசுத் தலைவர் , தேர்தல் ஆணையம், குமரி கலெக்டர் இம்மூவரில் யார் இதற்குப் பொறுப்பு? அரசியல்வாதிகள்தான் மக்களிடம் திருடுவார்கள். இப்போது அரசு அதிகாரிகளே திருடர்களாக மாறியிருக்கிறார்கள். எலக்‌ஷன் ப்ரொசீடிங் ஆபீசர், ஆர் ஓ போன்ற அதிகாரிகளிடம் நேற்று கெஞ்சினோம். ஆனால் அவர்கள், ‘லிஸ்ட்ல இல்லேன்னா நாங்க ஒண்ணும் பண்ண முடியாது’ என்று சொல்லிவிட்டனர்” என்ற சர்ச்சிலிடம்,
“இப்பகுதி மீனவர்கள் தேர்தல் ஆணையம் நடத்திய வாக்காளர் சரிபார்ப்பு முகாம்களில் வந்து செக் செய்திருக்க வேண்டும்” என்று மாநில தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹு சொல்லியிருப்பது குறித்து கேட்டோம்.
“நாங்கள் 2016 சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்தோம். அப்புறம் ஏன் நாங்கள் போய் செக் செய்ய வேண்டும்? புதிதாக விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிந்துகொள்வதற்காக செக் செய்வார்கள். ஆனால், காலம் காலமாக ஓட்டுப் போட்டு வரும் எங்களை சரிபார்ப்பு முகாம்களில் சரிபார்க்கவில்லை என்பதற்காக நீக்கிவிடுவது என்ன நியாயம்?” என்று கேட்டார்.
நீக்கப்பட்ட வாக்காளர்கள் சார்பாக அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று கேட்டோம்.
“இன்று புனித வெள்ளி, வரும் ஞாயிறு ஈஸ்டர் என்பதால் தேவாலய வழிபாட்டில் அனைவரும் ஈடுபாட்டோடு இருப்பார்கள். எனவே ஈஸ்டருக்குப் பிறகு கூடி விவாதிப்போம். குமரி மாவட்ட தேர்தல் அலுவலர், தமிழக தேர்தல் ஆணையர் மீது குடியரசுத் தலைவர் வரை முறையிடுவோம். தமிழகத்தில் அடுத்து நடக்க இருக்கும் 4 தொகுதி இடைத்தேர்தலின் போது எங்கள் பகுதியில் மறு வாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். எங்கள் வாக்குகளை யார் ரத்து செய்தார்கள் என்பதைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார் சர்ச்சில்.
மாயமான மீனவ வாக்குகள் அனைத்துமே பாஜகவுக்கு எதிரான வாக்குகள் என்பதும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கொண்டுவரும் துறைமுகத் திட்டத்துக்கு எதிராகப் போராடியவர்கள் இக்கடற்கரை மீனவர்களே என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது. இப்பிரச்னை பற்றி குமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரும் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழகத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு, “குமரி மீனவர்கள் வாக்கு நீக்கப்பட்டது குறித்து விசாரிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
-ஆரா

கருத்துகள் இல்லை: