சனி, 25 ஆகஸ்ட், 2018

சிங்கார சென்னையும் நவீன இனஅழிப்பும்..! - ஷாலின் மரியா லாரன்ஸ்

எந்த ’பின்னி’மில்லை சுற்றி இந்த சென்னை வடிவமைக்கப்பட்டதோ.. கூவத்தில் படகுகள் விடப்பட்டதோ... எங்கே எம் சி ராஜாவும் திருவிகாவும் உலாவினார்களோ... எங்கே இந்தியாவின் முதல் தொழிற்சங்கம் துவங்கப்பட்டதோ... எங்கே சாதி வெறிக்கு எதிராக முதல் தொழிலாளர் புரட்சி வெடித்ததோ... அந்த வரலாற்று சிறப்பு மிக்க இடம் இப்போது ஹிந்தி பேசி கொண்டிருக்கிறது. அங்கே வரலாற்றை அழித்து நவீன அக்ராஹாரத்தை, சாதிய படிநிலைகளை கட்டி கொண்டிருக்கிறார்கள் மார்வாடிகள்.
வீடு ! ஏதோ சில காரணங்களுக்காக நான் சென்னையில் இப்பொழுது இருக்கும் வீட்டிலிருந்து வேறு வீட்டுக்கு மாறி செல்ல வேண்டிய சூழ்நிலை. இப்பொழுது இருக்கும் இந்த புரசைவாக்கத்து வீட்டை விட்டு போக வேண்டும் என்று கேள்விப்பட்ட மூன்று மாத காலமாக உண்மையாக சொல்லுகிறேன் மனது மனதாக இருக்க மறுத்துவிட்டது. சரியான உறக்கம் இல்லை, உணவை ருசிக்க முடியவில்லை, எழுத்து வசப்படவில்லை. இன்னும் சொல்ல போனால் முழுமனதாக அங்கே காதலும் கொள்ள முடியவில்லை.
வீடு என்பது வெறும் கற்களால் ஆனது கிடையாது. உணர்வுள்ளவர்களுக்கு அது ரத்தத்தினாலும் நரம்புகளிலும் பின்னி பின்னி இழைத்து கட்டப்பட்ட உணர்ச்சி கூடு அது. இந்த வீடு என்னோடு சிரித்திருக்கிறது, இந்த வீடு என்னோடு அழுதிருக்கிறது, தூக்க மாத்திரைகள் அள்ளி வாயில் திணித்த அன்று இந்த வீடு ஓலமிட்டு மற்றவர்களை தூக்கத்தில் இருந்து எழுப்பி இருக்கிறது. வீடு அஃறிணை அல்ல.

வீட்டை பிரிவது ஒரு மனிதனை பிரிவது போல அல்ல. அது நம் உடலின் ஒரு பகுதியை ஒரு இடத்தில அறுத்து வீசிவிட்டு நடப்பது போல. மூன்று மாதங்கள் மனதை ஆறுதல் படுத்திகொண்டு இந்த வீட்டினோடு இருக்கும் பிரிவை தாங்கும் மனநிலையை ஏற்படுத்தி கொண்டாலும் ஆறா துயர் மனதில் குடியேறுகிறது.

இந்த நகரமும் ஒரு வீடுதான்..!

நானும் இணையரும் கடந்த ஒன்றரை வருட காலமாக இரவு பத்து மணிக்கு கடற்கரைக்கு செல்லும் வழக்கத்தை வைத்திருக்கிறோம். காலையிலிருந்து வீட்டுக்கு வேலைகளை பரபரப்பாக்க செய்து கொண்டிருந்த மனைவி இரவில் பிரெஷ் ஆகி நைட்டி மாட்டி இளையராஜா இசையோடு ரசனைமிகுந்த அழகுக்காரியாக மாறி நிற்பாளே அது போல் பேரழகியாக மாறி நிற்கும் சென்னையின் மெரினா கடற்கரை இரவு பத்து மணிக்குமேல்.
அப்படிப்பட்ட இரவுகளில் வாலாஜா சாலையில் இருந்து நேரெதிரே ரிச்சி தெருவுக்குள் புகுந்தால் கூவத்தையொட்டி ஒரு நீண்ட குடியிருப்பு பகுதி வரும். அண்ணா சாலையில் துவங்கி சிந்தாதரி பேட்டையில் முடியும் அதன் வழி நெடுக்கும் மோட்டார் ரிப்பேர் கடைகளும், பட்டறைகளும், சென்னையின் பூர்வகுடி மக்களின் குடியிருப்புகள் இருக்கும்.
இரவு பதினோரு மணிக்கு அந்த சாலையை பைக்கில் கடக்கும்போதெல்லாம் அங்கே விளிம்பு நிலை மனிதர்கள் இரவில் அந்த நாளின் களைப்பை தெருநாய்களோடு விளையாடி கொண்டு போக்கி கொண்டிருப்பார்கள்.
திடிரென்று இரண்டு பெண்கள் சண்டை பிடித்து கொண்டிருப்பார்கள். அங்கே முழுவதும் இருட்டான நிலையில் ஒரே ஒரு மூடிய கடையின் வாசலில் ஐம்பதில் இருந்து அறுபத்தைந்து வயதுக்குள் இருக்கும் ஆறு ஆண்கள் அதாவது ஏரியாவில் பெரிய கைகள் ஒரு குண்டு பல்பை மாட்டிவிட்டு கேரம் போர்டு ஆடி கொண்டிருப்பார்கள். அந்த காட்சி அப்படியே வெற்றிமாறன் படத்தில் வரும் வடசென்னையின் சூழலை போட்டோ எடுத்து போட்டதை போன்று இருக்கும். நான் கூட ஒரு நாலாவது பைக்கில் இருந்து இறங்கி அந்த விளையாட்டை ஆடி கொண்டிருக்கும் மனிதர்களிடம் அவர்களின் கதையை கேட்கவேண்டும் என்று அடிக்கடி மனதுக்குள் சொல்லி கொள்வேன்.
கடைசியாக கலைஞருக்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டு வரும் வழியில் அந்த மனிதர்களை பார்த்தேன். தலையில் கருப்பு சிவப்பு மப்ளரை கட்டிக்கொண்டு சரக்கேற்றிக்கொண்டு கலைஞர் படத்திற்கு மாலை அணிவித்துவிட்டு அழுது கொண்டிருந்தார்கள்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் எப்பொழுதும்போல அதே மெரினா, அதே அழகு, அதே பைக் பயணம் ஆனால்... அந்த கடை, குடியிருப்பு, மனிதர்கள் யாரும் இல்லை. வெறும் இடித்து தள்ளி நொறுக்கப்பட்ட வீடுகள் அங்கே இருந்தன. கடைகள் இல்லை, அந்த மனிதர்களும் இல்லை. வெறும் நிசப்தம். இரவு அதிகமாக கூக்குரலிட்டு கொண்டிருந்த அந்த இரவு சென்னை அழகுபடுத்த பட்டிருந்தது. சிங்கார சென்னை.
இந்த மாநகரம் தன்னை சிங்காரமாகி கொண்டிருக்கும் வேலையில் சில கேள்விகள் எழுந்து கொண்டே இருந்தது. ஒரே பகலில் தரைமட்டமாக்கட்டும் வீடுகளில் வசிக்கும் மனிதர்கள் எங்கு செல்வார்கள்..? அவர்கள் அன்று சாப்பிடுவார்களா..? அவர்கள் சீட்டு போட்டு சேமித்து வைத்த பணத்தை எங்கு ஒளித்து வைப்பார்கள்..? பழக்கமில்லா நகரத்தின் மூலைகளில் இருக்கும் தண்ணீரின் சுவை இவர்களுக்கு எப்படி பழக்கப்படும்..? நாளை வீட்டு வேலைக்கு செல்லும் இடத்திற்கு இவர்கள் 40 மைல்கள் எப்படி பயணிப்பார்கள்..? இரவு எங்கே தூங்குவார்கள்..?
மரத்தை வெட்டும்போது கூடிழந்த பறவைகளின் நிலை என்னவோ அதேதான் இவர்களின் நிலை என்கிற பதிலை மனம் சொல்லிற்று. வலி அதிகமாகிறது.
வீட்டை இழப்பதை விட வலி ஒன்று இருக்கிறது அது தங்களின் அடையாளத்தை இழப்பது. தங்கள் நகரத்தை இழப்பது.
இந்த நகரத்தை புதிய பாரின் கார்களும், நவீன காபி ஷாப்புகளும் நிரப்புகின்றன. ஆனால் இந்த மண்ணின் பூர்வகுடிகளுக்கோ தலை சாய்க்க இங்கே இடமில்லை.
அய்யா இந்த நகரில் இரட்டை குவளை கிடையாது; இங்கே தனி சுடுகாடு கிடையாது; தனி கிணறுகள் கிடையாது; ஆனாலும் இந்த மண்ணின் பூர்வகுடிகள் நகரத்தின் மைய்யப்பகுதியில் வாழ தகுதி இல்லாத தீண்டத்தகாதவர்களே. நவீன சென்னை... நவீன தீண்டாமை..!
இந்த பூர்வகுடி மனிதனின் தாத்தனும், கொள்ளு பாட்டியும் பார்த்து பார்த்து உழைப்பால் மேம்படுத்திய இந்த மாநகரம், தங்கள் ரத்த துளிகளால் அழகுபடுத்திய இந்த நகரம் இனி அவனுடையதல்ல. நாளை அவன் மகனுடையதுமல்ல.

நாங்கள்

நான் பிறந்ததிலிருந்தே வசிக்கும், என் தலைமுறைகள் பல காலங்களாக வாழ்ந்து வரும் சென்னையின் இந்த பகுதியில் மூன்று மாதமாக வீடு தேடி கொண்டிருக்கிறேன். என் சென்னையில் அடுக்குமாடிகள் அதிகரித்து விட்டன. எங்கே சென்றாலும் குதுப் மினாரின் உயரத்தை தாண்டி அழகோவிய கட்டிடங்கள் இங்கே. கண்ணாடி மாளிகைகள்.
அவற்றில் குடிபோக என்னிடம் வசதி வாய்ப்பிருக்கிறது. ஆனால் என்னால் முடியாது. "மேடம் நீங்க ஜெய்ன்ஸ் ஆ மேடம்..?" வீடு புரோக்கர் கேட்கிறார். சென்னையில் என் பூர்வகுடி இடத்தில நான் வீடு போக வேண்டுமெனில் நான் ஹிந்திகாரியாக இருக்க வேண்டும், மார்வாடியாக இருக்கவேண்டும், அசைவ சாப்பிடாத ஹிந்துவாக இருக்க வேண்டும். ஒரேடியாக சொல்ல வேண்டுமென்றால் நான் பூர்வகுடி தமிழாக இருக்க கூடாது.
பெரியார் மண்ணை வடக்கு நவீன வடிவத்தில் சூறையாடி பல வருடம் ஆகிறது. பெரியார் திடல் இருக்கும் அந்த சாலையில் 90 % மார்வாடி வாழ்கிறார்கள்..! அங்கே சுற்று வட்டாரத்தில் கறிக்கடை கிடையாது. ஒவ்வொரு பத்து அடிக்கும் ஒரு பதாஞ்சலி கடை. EVK சம்பத் சாலையில் தமிழில் பேசினால் கேவலமாக பார்த்து செல்வர்.
மவுண்ட் ரோடு, புரசைவாக்கம், பெரம்பூர், அயனாவரம், ஜமாலியா, கீழ்ப்பாக்கம், அண்ணா நகர், கெல்லிஸ், சேத்துப்பட்டு, சூலை, பெரம்பூர் பெரெக்ஸ், பட்டாளம் ,ராயபுரம், புளியந்தோப்பு என்று எல்லா இடங்களும் வட இந்தியர்கள் கையில்.
நான் வசிக்கும் புரசைவாக்கம், ஹிந்துக்கள், இஸ்லாமியர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் என்று கொண்டாடிய அந்த பகுதி இன்று காவி வண்ணமாக காட்சி அளிக்கிறது. இப்போதெல்லம் இங்கே தமிழ் நாட்டு காய்கள் கிடைப்பதில்லை..! காய்கள் கூட அவர்கள் சாப்பிடும் காய்தான். எங்கே திரும்பினாலும் அங்கே ஒரு சமோசா சாட் கடை. பத்து கறிக்கடைகள் இருந்த இடத்தில் மூன்று கடைகள் மட்டுமே மிச்சம். இருபது சைவ ஓட்டல்களுக்கு ஒரு அசைவ ஹோட்டல்.
இங்கே திரும்பினாலும் ஒரு சமண கோவில். ஆங்காங்கே ராமகோபாலன் ஜி அவர்களின் படம் மற்றும் கொடி. தமிழர்கள் கூட தமிழர்களுக்கு வீடு கொடுப்பதில்லை. ”இருபதாயிரம் கொடுக்கும் இடத்தில் சேடு முப்பதாயிரம் கொடுப்பான்.. நீ கொடுப்பியா..? உனக்கு எதற்கு வீடு..? உனக்கு எதற்கு வாழ்வு.. ? ச்சீய்... பூர்வகுடி..!”
"பூர்வகுடியாய் பிறந்ததற்க்கே வெட்கப்படுகிறேன் தோழர்" என்று என் வாயாலேயே என்னை சொல்ல வைத்துவிடுவார்கள் போல .
இங்கே நிறம் கூட எங்கள் நிறம் இல்லை. காட்டன் புடவைகள் எல்லாம் இப்பொழுது கல் வைத்த ஜம்க்கி வைத்த புடவைகளாக மாறி இருக்கிறது. கருப்பை விட ரோஸ் கலர் பெண்கள் அதிகம் அணிகிறார்கள்.
இதைவிட எல்லாம் பெரிய கொடுமை ஒன்று இருக்கிறது. நகரை அழகாக்குகிறேன் என்கிற பெயரில் வரலாற்று சின்னங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படுகின்றன. நாளை, ’சிங்காரவேலர் யார்..?’ என்று அடுத்த தலைமுறைக்கு தெரியப்போவது இல்லை, இந்த சென்னையை உருவாக்கிய என் முன்னோருக்கு ஆங்கில அறிவை, கல்வியறிவை கொடுத்த பிரிட்டிஷ்காரனின் பெயர் இங்கே அவசர அவசரமாக அழிக்கப்படுகிறது .
எந்த ’பின்னி’மில்லை சுற்றி இந்த சென்னை வடிவமைக்கப்பட்டதோ... கூவத்தில் படகுகள் விடப்பட்டதோ... எங்கே எம் சி ராஜாவும் திருவிகாவும் உலாவினார்களோ... எங்கே இந்தியாவின் முதல் தொழிற்சங்கம் துவங்கப்பட்டதோ... எங்கே சாதி வெறிக்கு எதிராக முதல் தொழிலாளர் புரட்சி வெடித்ததோ... அந்த வரலாற்று சிறப்பு மிக்க இடம் இப்போது ஹிந்தி பேசி கொண்டிருக்கிறது. அங்கே வரலாற்றை அழித்து நவீன அக்ராஹாரத்தை, சாதிய படிநிலைகளை கட்டி கொண்டிருக்கிறார்கள் மார்வாடிகள்.
இங்கே முன்போல் எதுவும் இல்லை.
இங்கே இனி எங்கள் வரலாறு இல்லை.
இங்கே யாரும் எங்களுக்கு இல்லை.
இங்கே சென்னை இல்லை.
இந்த நகரத்தின் மைய்ய பகுதிக்கு சென்று நள்ளிரவில் 'ஓ...' வென்று கதற வேண்டும் போலிருக்கிறது.
"டேய்... இது என் ஊருடா...
டேய்... இது என் மொழிடா...
டேய் நான் கறி தின்னுவேன்டா... மாட்டுக்கறி
கருவாடு வாசம் எனக்கு புடிக்கும்டா...
டேய்... எங்கப்பன் ஊருடா இது" என்று வயிற்றில் அடித்துக்கொண்டு கதற வேண்டும் போலிருக்கிறது.
நெஞ்சு வெடிக்கிறது.
வீடில்லை நகரமும் இல்லை .
நலமாக வாழு தமிழினமே !
-ஷாலின்   https://www.hixic.com/shalinmarialawrence/singara-chennaiyum-naveena-ina-alzippum

கருத்துகள் இல்லை: