சனி, 25 ஆகஸ்ட், 2018

திருமுருகன் காந்திமீது ‘உபா’ சட்டம் ஏன்?

திருமுருகன் காந்திமீது ‘உபா’ சட்டம் ஏன்?மின்னம்பலம் : மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities (Prevention) Act கீழ் நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமுருகன் காந்தி மீது இதுவரை 13 வழக்குகள் போடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக நேற்று (ஆகஸ்ட் 24) ஆலந்தூர் நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அங்கிருந்த காவலர்களை நோக்கி, “என்னை ஏன் இப்படி சித்ரவதை பண்றீங்க? நான் என்ன தீவிரவாதியா? வண்டிய நிறுத்துங்கன்னு நிறைய வாட்டி சொன்னேன். சிறுநீர் கழிக்கணும்னு மூணு மணிநேரமா சொல்றேன். வண்டிய நிறுத்தவில்லை. எஸ்.வி.சேகரை மட்டும் ஏன் இன்னும் கைதுசெய்யல. சிறுநீர் போகக்கூட அனுமதிக்க மாட்றீங்க. என்னைப் பரிசோதித்த மருத்துவர் எனக்கு சிகிச்சை அளிக்கணும்னு சொன்னாங்க. அதுக்குக்கூட அனுமதிக்கல” என்று ஆவேசமாக பேசினார். அங்கிருந்த நிருபர்களிடம், ‘'என்மீது உபா (UAPA) வழக்கு போட்டிருக்காங்க. பயங்கரவாதிங்க மீது போடுற வழக்கு அது. மோடி அரசை விமர்சித்தால் அந்த வழக்கு போடுவீங்களா? நூறு முறை உபா வழக்கு போடுங்க. நான் பயப்பட மாட்டேன்’' என்றும் திருமுருகன் காந்தி கூறினார்.

உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களை விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்காமல் 180 நாட்கள் வரை எவ்விதக் காரணமும் இன்றி சிறையில் அடைத்து வைக்க முடியும்.
திருமுருகன் காந்தி மீது ஏன் சட்டம் பாய்ந்தது?
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தமிழர்கள் சர்வதேச இனமாய் ஒன்றுகூடுவோம் என்ற தலைப்பில் தான் பேசிய வீடியோ ஒன்றை திருமுருகன் காந்தி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “தூத்துக்குடியில் தமிழக அரசு மற்றும் இந்திய பாஜக அரசு இணைந்து படுகொலையை நடத்திக்கொண்டிருக்கிறது. ஒரு கார்ப்ரேட் நிறுவனத்தின் லாபத்திற்காக இந்திய அரசு சொந்த மக்களைக் கொல்லக் கொஞ்சம்கூடத் தயங்காது என்பதை வரலாறு நமக்கு இப்போது சொல்கிறது. தமிழர்கள் வன்முறையில்லாத, அறவழி சார்ந்த போராட்டங்களையே நடத்திவருகின்றனர். முதல்வரோ, அமைச்சர்களோ, கலெக்டரோ, மத்திய அரசோ, பிரதமரோ வேறு ஒரு உலகிலிருந்து வந்தவர்கள் கிடையாது. மக்களின் பிரச்னையை தீர்ப்பதுதான் அவர்களின் வேலை.
ஓ.என்.ஜி.சி., மீத்தேன் எடுக்கும் நிறுவனம், ரிலையன்ஸ் போன்ற கார்ப்ரேட் நிறுவனங்களா அல்லது மக்களா என்றால் கார்ப்பரேட் பக்கமே நான் இருப்பேன் என்று அரசு சொல்கிறது. மத்திய, மாநில அரசின் அடியாளாக காவல்துறை செயல்படுகிறது. எதிரி நாட்டு ராணுவத்தைச் சுட்டுக் கொல்வது போல் சொந்த நாட்டு மக்களைச் சுட்டுக் கொல்கின்றனர்.
கார்ப்பரேட்தான் அதிகார வர்க்கமாக உள்ளது. வேதாந்தா நிறுவனத்தை மட்டும் கூறவில்லை, தமிழ்நாடு கடற்கரையை ஒட்டி சாகர்மாலா திட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் வரப் போகின்றன. மீனவர்களை அப்புறப்படுத்தப்போகிறார்கள். ஸ்டெர்லைட் போராட்டத்தில் நாம் வெற்றி பெற்றால் அவர்கள் கடற்கரையில் இந்த அழிவுத் திட்டங்களைக் கொண்டுவர முடியாது. அதனால்தான் இந்த அரசு தூத்துக்குடியில் மூர்க்கமாகக் கொலை செய்கிறது. இந்த பகுதியை ராணுவமயமாக்கப் பார்க்கிறது. இந்த சண்டை தமிழர்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்குமான சண்டை. உலகம் முழுதும் இருக்கக் கூடிய சர்வதேச ஜனநாயக இயக்கங்களைத் தொடர்பு கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தமிழர்களும், உலகம் முழுதும் ஈழத்தமிழர்களும், புலம் பெயர் தமிழர்களும் சர்வதேச இனமாய் ஒன்றாக எழுந்து நின்று இந்த அரச பயங்கரவாதத்திற்கு எதிரான பெரும் போராட்டத்தினை நடத்துவோம்.
இதே வேந்தாந்தா நிறுவனம் ஒரிசாவில் நிறுவனம் அமைக்க முயற்சி செய்தது. அதை எதிர்த்துப் பழங்குடி மக்கள் போராடினார்கள். அவர்கள் ராணுவம் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டனர். பழங்குடியினரின் போராட்டத்திற்கு உலகளவில் ஆதரவு கிடைத்தது.
அதே வேதாந்தாவின் ஸ்டெர்லைட்தான் தூத்துக்குடியில் உள்ளது. ஒரிசாவில் பழங்குடியினர் எப்படிப் போராடினார்களோ நாமும் அப்படி போராட வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக அனைத்துத் தொழிற்சங்கங்களும் போராட வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும்.
இந்திய அரசு மிகவும் மோசமான அரசு. இனப் படுகொலை எப்படி செய்ய வேண்டும் என்று இலங்கைக்குக் கற்றுக்கொடுத்த அரசு. தமிழகத்தில் உள்ள அனைத்து இயக்கங்களும் ஒன்றாக இணைந்தால் மட்டுமே இந்த அரசைக் கேள்வி கேட்க முடியும். நாம் ஒவ்வொருவரும் எழுந்து நின்றால் அரசு ஒன்றும் பெரிது கிடையாது” என்று பேசியிருந்தார்.
இந்தப் பேச்சுக்காகத்தான் அவர் மீது உபா சட்டம் போடப்பட்டுள்ளதாக மே 17 இயக்கத்தினர் கூறுகின்றனர். திருமுருகன் காந்தி ஐ.நா.வில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து பேசியதும் காரணம் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: