ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

கொள்ளிடம் 18 வது தூண் இடிந்து விழுந்தது 21, 22ஆம் தூண்கள் சேதம்... உடையும் நிலையில் கொள்ளிடம் இரும்பு பாலம்

Lakshmi Priya = ONEINDIA TAMIL   .. திருச்சி: திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆங்கிலேயர் காலத்து பாலம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. 
ஆங்கிலேயர் காலத்தில் கடந்த 1924-ஆம் ஆண்டு இந்த பாலம் கட்டப்பட்டது. சுமார் 792 மீட்டர் நீளமுள்ள இந்த பாலம் ஸ்ரீரங்கத்தை இணைத்தது. இந்நிலையில் 90 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாலத்தின் உத்தரவாத காலம் முடிவடைந்துவிட்டது. 
இதையடுத்து பாலத்தின் வலுவிழந்த தன்மையை சுட்டிக் காட்டி பழைய பாலத்துக்கு பக்கத்திலேயே புதிய பாலம் ஒன்று கடந்த 2014-ஆம் ஆண்டு கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. இந்த பழைய பாலம் நடப்பதற்கும் இரு சக்கர வாகனங்களை இயக்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இங்கு 4 சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. 
இந்நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அங்கு அணைகள் நிரம்பி தண்ணீரானது முக்கொம்பு, மேட்டூர் அணைக்கு திருப்பப்பட்டது. அதன்படி முக்கொம்பு அணையிலிருந்து 87,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இது கொள்ளிடத்தை அடைந்ததால் கொள்ளிடம் நிரம்பியது. இதனால் பழைய பாலத்தின் 18ஆவது தூண் சேதமடைந்துள்ளது. பாலம் விரிசல் அடைந்தது. மேலும் வெள்ளப் பெருக்கின் வேகத்தாலும், மணல் அரிப்பாலும் 21 மற்றும் 22-ஆம் தூண்களும் சேதமடைந்து வருகின்றன. இதனால் பாலம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வெள்ள நீர் வடிந்த பிறகு இந்த பாலம் இடித்து அகற்றப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: