வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

கொள்ளிடத்தில் புதிய கல்லணை கட்டப்படும் .. முதல்வர் இடப்பாடி பழனிசாமி

கொள்ளிடத்தில் புதிய கதவணை: முதல்வர்!மின்னம்பலம் : திருச்சி முக்கொம்பில் வெள்ளப்பெருக்கினால் மதகுகள் உடைந்த மேலணைக்கு பதில் ரூ.325 கோடியில் புதிய கதவணை கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் உள்ள 45 மதகுகளின் மூலமாக அணையில் இருந்து காவிரி மற்றும் கால்வாய்களுக்குத் தண்ணீர் பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அணையின் ஒன்பது மதகுகள் திடீரென வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அணை மற்றும் கொள்ளிடம் பாலத்தின் தூண்களை முன்கூட்டியே சீரமைக்கத் தவறிய அதிமுக அரசே இந்தப் பாதிப்புகளுக்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மணல் கொள்ளையும் அணை உடைந்ததற்குக் காரணம் என விவசாயிகள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 24) காலை 9 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கொம்பு மேலணையில் உடைந்த மதகுகளை ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் காமராஜ், துரைக்கண்ணு, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரும் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், “முக்கொம்பு மேலணையில் 9 மதகுகள் இடிந்து விழுந்துள்ளது. அதிக அளவில் வெள்ள நீர் வெளியேறியதால் அழுத்தம் காரணமாக பழமையான முக்கொம்பு அணையின் மதகு உடைந்துள்ளது. முதற்கட்டமாக 8 நாட்களும் இரண்டாம் கட்டமாக 12 நாட்களும் தண்ணீர் அதிக அளவில் வெளியேற்றப்பட்டதால் இந்த உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இன்னும் 4 நாட்களில் சீரமைப்பு பணிகள் நிறைவடையும்.
மேலணைக்குப் பதிலாக 325 கோடி ரூபாய் செலவில் கதவணை கட்டப்படும். மேலும், கொள்ளிடத்தின் வடக்கில் உள்ள அய்யப்பன் வாய்க்காலிலும் 85 கோடி ரூபாய் செலவில் 15 கதவணைகள் கட்டப்படும். இந்த கதவணைகள் 15 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும்.
முக்கொம்பிற்கு வரும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அதிக அளவு நீர் வெளியேறியதன் காரணமாகவே மதகுகள் உடைந்துள்ளன. மணல் குவாரிக்கும் மதகுகள் இடிந்து விழுந்ததிற்கும் சம்பந்தம் இல்லை. குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் தான் மணல் அள்ளுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், தற்போது வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்யப்படுகிறது. நமது மாநிலத்தில் மணல் பயன்பாட்டை படிப்படியாகக் குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மணலுக்குப் பதிலாக எம் சாண்ட் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. புதிய கதவணை கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்” என்று தெரிவித்தார்.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து அறிவிக்கப்படாமல் தண்ணீர் திறந்துவிட்டதும் வெள்ளத்திற்கு காரணம் என கேரளா குற்றம் சாட்டியுள்ளது தொடர்பான கேள்விக்கு, “முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரால் கேரளாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நீர்மட்டத்தைக் குறைக்காததால் வெள்ளம் ஏற்படவில்லை. அங்குள்ள அனைத்து அணைகளில் இருந்தும் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 152 ஆக உயர்த்தக்கூடாது என்பதற்காகக் கேரளா தவறான குற்றச்சாட்டை கூறுகிறது” என்று பதிலளித்தார்.

கருத்துகள் இல்லை: