ஞாயிறு, 7 ஜனவரி, 2018

ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றும் 80 ஆயிரம் பேராசிரியர்கள்.. அம்பலம்

tamilthehindu :நாடுமுழுவதும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றுவது, ஆதார் இணைப்பின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த 2016 -2017 கல்வியாண்டில் நாடுமுழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழங்களில் பயிலும் மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வி நிலை குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கை நேற்று (சனிக்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தயாரித்துள்ள இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


‘‘பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களில் மொத்தம் 15 லட்சம் பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவர்களில் 85 சதவீதம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
பேராசிரியர்கள் பற்றி விவரங்களை சேகரிப்பதற்காக ஆதார் எண் இணைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. இதன் மூலம், 70 ஆயிரத்தில் இருந்து, 80 ஆயிரம் பேராசிரியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணியாற்றி வரும் விவரம் தெரிய வந்துள்ளது.
இதுபற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளோம். கவுரவப் பேராசரியர்களாக இருந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்ற தடையில்லை. அதேசமயம் இதில் முறைகேடு ஏதும் நடந்துள்ளதா எனவும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முறைகேடு உறுதியானால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: