செவ்வாய், 26 டிசம்பர், 2017

ரஜினியின் அரசியல் ஆசைக்கு தூபம் போடும் பாஜகா ...

ஆர்.கே.நகர்  அத்தியாயம் முடியும் தறுவாயில் அடுத்த ‘பரபரப்பு’ வந்து விட்டது. வரும் டிசம்பர் 31 அன்று
அரசியலுக்கு வருவது பற்றி திருவாளர் ரஜினி அறிவிக்கிறாராம். இலண்டன் பிபிசி முதல் தில்லி என்டிடிவி வரை அலச ஆரம்பித்துவிட்டார்கள். என்றால் தமிழின் நடுப்பக்க கருத்து கந்தசாமிகள் பற்றி சொல்ல வேண்டியதில்லை. ரஜினியின் 67-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 66, 65, 64……….50 பிறந்த நாட்களில் என்னென்ன பேசினார்களோ அவையே சலிக்காமல் மீண்டும் புதிய மேக்கப்பில் வருகின்றன.
டிசம்பர் 26 முதல் ஆறு நாட்களுக்கு அடையாள அட்டை வைத்துள்ள ஆறு மாவட்ட ரசிகர்களை ரஜினி சந்திக்கிறாராம். புகைப்படமும் எடுக்கிறாராம். ரஜினியின் சமீபத்திய அரசவைப் புலவரான தமிழருவி மணியன் இந்த நாட்களின் திரைக்கதையை எழுதியிருப்பார் போலும்.
உதவி இயக்குநர்கள் விதந்தோதும் இயக்குநர் மகேந்திரன் முதல் நாள் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். அவரும் ரஜினியைப் போன்ற தலைவர் யாருமில்லை, அவருடைய அறிவிப்பிற்காக காத்திருப்பதாக பேசியிருக்கிறார்.

பிறகு பேசிய ரஜினி “காலா படப்பிடிப்பு, மழை, மனம் சரியில்லாத காரணத்தால் ரசிகர்களை சந்திப்பது தள்ளிப்போனது” கூறியிருக்கிறார். மனம் சரியில்லாத காரணத்தால் காலா படப்பிடிப்பு ரத்தாகவில்லை, ரசிகர் சந்திப்புதான் ரத்தாகியிருக்கிறது. முன்னது பணம், பின்னது அடிமைத்தனம் என்பதால் விளக்கம் தேவையில்லை.
சென்ற முறை போர், வீரம் என்று ஆக்சன் ஹீரோ வேடம் போட்டவர் இந்த முறை, வியூகம், கஷ்டம் – நஷ்டம், தயக்கம் என ‘அறிவு’ வேடம் போடுகிறார்.  இறுதியில் வரும் 31 அன்று அரசியலுக்கு வரப்போவதாகத் தெரிவிக்கவில்லை என்றும் அரசியல் குறித்து அறிவிக்கப் போவதாக மட்டும் கூறியதாக தனிச்சிறப்பாக விளக்கியிருக்கிறார். இதை சாதாரண பாப்பையா பாணியில் ஆய்வு செய்தாலும், அவர் அரசியலுக்கு வரவில்லை என பொருள் கொள்ளலாம்.
எனினும் வரும் நாட்களில் பல்வேறு நிலைய வித்வான்களின் வாசிப்போடு ரஜினி அரசியல் பற்றி ஊடகங்களில் பீறாய்ந்து பேசப்படும். காதுகள் கவனம்.

கருத்துகள் இல்லை: