வியாழன், 28 டிசம்பர், 2017

ரஜினி ..... கட்சி இல்லையாம் .. பவுண்டேசனாம் .... சிவாஜி பட பாணியில் சேவையாம் ,,,, ஆர் கே நகர் எபெக்ட்?

டிஜிட்டல் திண்ணை: கட்சி இல்லை, பவுண்டேஷன்!மின்னம்பலம் :ரஜினியின் ரகசிய திட்டம்
அலுவலகத்தில் வைஃபை ஆனில் இருந்தது. தயாராக வைத்திருந்த ஸ்டேட்டஸுக்குப் போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக்.
“குழந்தைகளை நல்லா வளர்க்கணும். அவங்கதான் நம்ம இன்வெஸ்ட்மெண்ட். ஆக்கபூர்வமான விஷயங்களை சிந்தியுங்க. குடும்பத்தை நல்லா பார்த்துக்கோங்க...’ -இன்று ரசிகர்கள் சந்திப்பு நிகழ்வு தொடங்கியபோது இப்படித்தான் பேசினார் ரஜினி. டிசம்பர் 31-ம் தேதி அரசியலில் என்ன முடிவெடுக்கப் போகிறேன் என அறிவிக்கப் போவதாக நேற்று அறிவித்திருந்திருந்தார் ரஜினி. அன்று என்ன சொல்லப் போகிறார் ரஜினி என்பதுதான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இன்று காலையில் ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களுடன் ரஜினி போட்டோ எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் அவருக்கு நெருக்கமான சில நண்பர்களும் அங்கே வந்திருந்தார்கள். அவர்களிடம் பேசியபோது சில விஷயங்களைச் சொன்னார்கள். அதுதான் டிசம்பர் 31-ம் தேதி ரஜினி அறிவிக்கப் போகும் முடிவு பற்றியது. அவர்கள் சொன்னதை அப்படியே இங்கே சொல்கிறேன்.

‘அரசியல் கட்சி துவங்குவது பற்றியோ, அல்லது யாருக்காவது ஆதரவு தெரிவிப்பது பற்றியோ அன்று எதுவுமே அறிவிப்பது ரஜினியின் திட்டம் இல்லை. அரசியல் கட்சி தொடங்குவது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை என்பதை அவர் தெளிவாக உணர்ந்திருக்கிறார். அரசியல் கட்சிக்கான அடித்தளம் மிக முக்கியமானது என்பதைத்தான் அவர் இவ்வளவு நாளாக ஸ்டெடி செய்ததில் உணர்ந்திருக்கிறார். அதனால் முதலில் ஒரு பவுண்டேஷன் தொடங்கலாம் என்பதுதான் ரஜினியின் திட்டம்.
பவுண்டேஷன் என்றால், அதன் மூலமாக தமிழகம் முழுக்க பல உதவிகளை மக்களுக்கு செய்யலாம் என்பதுதான் அவரது திட்டம். இன்னும் உங்களுக்குப் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால்... ’சிவாஜி’ படத்தில், வெளிநாட்டில் இருந்து வந்த ரஜினி, சிவாஜி பவுண்டேஷன் என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கி, தமிழ்நாடு முழுக்க பல உதவிகளை செய்வார். தனியாக ஒரு கல்லூரி கட்டி அதில் ஏழை மாணவர்கள் இலவசமாக படிக்க உதவிடுவார். ஒரு கிராமத்தை தத்தெடுத்து மேம்படுத்துவார். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவார். அதுதான் இனி நிஜத்திலும் ரஜினி செய்ய திட்டமிட்டு இருக்கிறார். கல்லூரி தொடங்குவது என்பது உடனே சாத்தியம் ஆகாது. மற்ற விஷயங்களை ரஜினி தொடங்க இருக்கும் பவுண்டேஷன் செய்ய இருக்கிறது. இந்த அமைப்புக்காக தமிழகம் முழுக்க நிர்வாகிகளை நியமிக்கப் போகிறார்.
ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமல்லாமல், படித்த இளைஞர்கள் தொடங்கி ஆர்வமுள்ள எல்லோரையும் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக சேர்க்கப் போகிறோம். அப்படி உறுப்பினர்களை சேர்த்த பிறகு, அதில் நிர்வாகிகளை நியமிக்கப் போகிறோம். முழுக்க முழுக்க இது ரஜினியின் நேரடிப் பார்வையில்தான் நடக்கப் போகிறது. ‘மக்களால் நான்... மக்களுக்காக நான்’ என ஜெயலலிதா அடிக்கடி சொல்வார். அவர் அப்படி இருந்தாரா என்பது தெரியாது. நான் அப்படித்தான் இனி இருக்கப் போறேன் என ரஜினி சொல்லிட்டே இருக்காரு’ என்று சொன்னவர்களிடம், ‘ஏன் உடனடியாக அரசியல் அறிவிப்பை ரஜினி வெளியிடாமல் மறுபடியும் மழுப்பும் திட்டத்தில் இருக்கிறார்?’ என்று கேட்டோம்.
அதற்கும் நண்பர்கள் பதில் சொன்னார்கள். ‘ரஜினியை பொறுத்தவரை அவரை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர்கள் எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார். இப்போது காலா, 2.0 என இரண்டு மிகப்பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் உடனடியாக அவர் நேரடி கள அரசியலுக்கான அறிவிப்பை வெளியிட்டால், அது அவரது படத்துக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும் என நினைக்கிறார். அந்தப் படங்கள் இரண்டும் ரிலீஸ் ஆகட்டும். அதற்குள் நமது அமைப்பு மூலமாக மக்களுக்கு நல்லது செய்வோம்.
நாம் செய்யும் நல்லதைப் பார்த்து மக்களே நம்மைத் தேடி வருவார்கள். நமக்கு உறுப்பினர்கள் அதிகமாவார்கள். நாம் தொடங்கப்போகும் அமைப்பில், எவ்வளவு பேர் உறுப்பினர்களாக சேருகிறார்கள் என்பதை வைத்தே நமது பலம் என்ன என்பதை புரிந்து கொள்ளலாம். காலமும் நேரமும் இருக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்லலாம் என்று ரஜினி சொல்லி வருகிறார். தொடங்கப்போகும் அமைப்புக்கு என்ன பெயர் வைக்கலாம் என எல்லோரிடமும் ரஜினி கேட்டு இருக்கிறார். ஆனால், என்ன பெயர் என்பதை யாரிடமும் அவர் சொல்லவில்லை. எல்லோர் சொன்ன ஐடியாக்களையும் கேட்டுக் கொண்டார். பெயருக்குள் தமிழ்நாடு என்பது இருக்க வேண்டும் என்பதிலும் ரஜினி உறுதியாக இருக்கிறார்’ என்று சொன்னார்கள்“ என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.

கருத்துகள் இல்லை: