செவ்வாய், 26 டிசம்பர், 2017

குருமூர்த்தியின் ஆண்மை பற்றிய ஆபாசம் ....

நாங்கள் காங்கயம் காளைகள்: ஜெயக்குமார்மின்னம்பலம் :வீர்யமற்ற தலைவர்கள் என்று அதிமுக தலைவர்களைப் பற்றி ஆடிட்டர் குருமூர்த்தி முன்வைத்த விமர்சனம் அதிமுகவினரிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் ஜெயக்குமார் இதற்குக் காட்டமாகப் பதிலடி கொடுத்திருக்கிறார்.
அதிமுக உயர்மட்டக் குழு கூட்டம் நேற்று (டிசம்பர் 25) நடைபெற்றது. இதில், தினகரன் ஆதரவாளர்களின் பதவிகள் பறிக்கப்பட்டன, சிலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இது தொடர்பாக துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த பலவீனமானவர்கள் ஆறு மாதங்கள் கழித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். வீர்யமற்ற தலைவர்கள்.. (impotent leaders)” என்று பதிவிட்டார். ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் இப்போதுதான் தலைவர்கள்போல் செயல்படத் தொடங்கியுள்ளனர். தற்போதுவரை அவர்களுக்குக் காலில் விழவும் லஞ்சம் வாங்கவும் மட்டுமே தெரியும் எனவும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
அதிமுகவினரை ஏனைய அரசியல் கட்சிகள் தொடர்ந்து விமர்சித்துவரும் நிலையில் அவர்களையும் தாண்டி, குருமூர்த்தி கடுமையாகக் விமர்சித்துள்ளது அக்கட்சியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக இன்று (டிசம்பர் 26) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “குருமூர்த்திக்கு முகம் என்பதே கிடையாது. ஆண்மையில்லாதவர்கள் தான் அதைப்பற்றிப் பேசுவார்கள் (impotent என்பதற்கு ஆண்மையற்ற என்ற பொருளும் உண்டு). இப்படிப்பட்ட கீழ்த்தரமான வார்த்தையை அவர் பயன்படுத்தியுள்ளது ஜனநாயகத்தில் வெட்கித் தலை குனியக்கூடிய ஒன்று. தன்னை ஆடிட்டர், பத்திரிகையாளர் எனக் கூறிக்கொள்ளும் ஒருவர் இப்படிப் பேசியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. குருமூர்த்தி ஆண்மையில்லாதவராக இருக்கலாம். ஆனால், அதிமுகவில் உள்ள அனைவருமே காங்கயம் காளைகள்தான்” என்று பதிலளித்தார்.
யாராக இருந்தாலும் அஞ்ச மாட்டோம்
“குருமூர்த்தி என்ன கிங் மேக்கரா? யார் அவர்?” என்று கேள்வியெழுப்பிய ஜெயக்குமார், “எதற்குமே ஒரு அளவு உண்டு. அதிமுகவினர் கொதித்தெழுந்தால் என்ன நடக்கும் என்பதை அவர் புரிந்துகொண்டு பேச வேண்டும். தடித்த வார்த்தைகள் ஒன்று சொன்னால், நாங்கள் நூறு சொல்லுவோம். அந்தளவு எங்களுக்குத் திராணியுள்ளது” என்றும் ஜெயக்குமார் கூறினார்.
குருமூர்த்தியின் பேச்சுக்குப் பின்னால் பாஜக உள்ளதா என்ற கேள்விக்கு, தனக்குத் தெரியாது எனப் பதிலளித்த ஜெயக்குமார், “தன்மானத்தை விடக் கூடாது என்று எம்ஜிஆரும் ஜெயலலிதாவுக்கு எங்களுக்குக் கற்றுக்கொடுத்துள்ளனர். அத்தகைய தன்மானத்திற்கு சோதனை வந்தால் ஒரு கை பார்த்துவிடுவோம். எனவே குருமூர்த்தியின் பின்னால் யார் இருந்தாலும் அஞ்ச மாட்டோம்” என்றார்.
அதிமுகவில் தொண்டனை விமர்சித்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவசியம் ஏற்பட்டால் குருமூர்த்தி மீது வழக்கு தொடரப்படும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
குருமூர்த்தியின் விமர்சனம் தவறானது, கடுமையானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியும் தெரிவித்துள்ளார்.
ஜெயக்குமாரின் கருத்துக்குக் குருமூர்த்தி தனது ட்விட்டரில் அளித்துள்ள பதிலில், “ எனது ஆலோசனையில் தான் தமிழக அரசு செயல்படுகிறது என்ற தவறான எண்ணத்தை நீக்கியதற்காக அமைச்சருக்கு நன்றி. அதிமுக தலைமை குறித்தும், எடப்பாடி அரசு குறித்தும் நான் விமர்சிப்பது புதிதல்ல. தொடர்ந்து துக்ளக் இதழில் விமர்சித்துக்கொண்டுதான் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

நக்கீரன் :ஆண்மை இல்லாதவர்கள்தான் ஆண்மையைப்பற்றி பேசுவார்கள்: ஜெயக்குமார் ஆவேசம் தினகரனின் ஆதரவாளர்கள் 6 மாதத்திற்கு பிறகு நீக்கப்பட்டுள்ளது குறித்து துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி டிவிட்டரில் கருத்த தெரிவித்துள்ளார். அதில் முதல்வர் மற்றும் துணை முதல்வரை ஆண்மையற்றவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இதற்கு கண்டனம் தெரிவித்தார். அவர், ‘’அவதூறு கருத்தை பதிவிட்ட குருமூர்த்தி மீது அவசியம் இருந்தால் வழக்கு தொடருவோம். தனது வார்த்தைகளை குருமூர்த்தி திரும்ப பெறவேண்டும். குருமூர்த்திக்கு நாவடக்கம் தேவை. ஆண்மை இல்லாதவர்கள்தான் ஆண்மையைப்பற்றி பேசுவார்கள். அதிமுக நிர்வாகிகள் காங்கேயம் காளை போல செயல்பட்டு வருகிறார்கள்’’ என்று ஆவேசமாக கூறினார்<

கருத்துகள் இல்லை: