ஞாயிறு, 29 அக்டோபர், 2017

காஷ்மீருக்கு தன்னாட்சி அந்தஸ்து: சிதம்பரம் கோரிக்கை

Chidambaram1_PTItamilthehindu : ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் வலியுறுத்தினார்.
குஜராத் மாநிலம், ராஜ்கோட் நகரில் ப.சிதம்பரம், செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும். அதேவேளையில், அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவின்படி, காஷ்மீருக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இதுதொடர்பாக, ஜம்மு-காஷ்மீர் மக்களுடன் கலந்துரையாடினேன். அவர்களில் பெரும்பாலானோர், காஷ்மீருக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று கூறினர். அதுவே எனது விருப்பமாகவும் உள்ளது என்றார் அவர்.

இந்நிலையில், ப.சிதம்பரத்தின் கருத்துக்கு மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ஸ்மிருதி இரானி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, அருண் ஜேட்லி, மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காஷ்மீர் பிரச்னைக்கு காரணமே காங்கிரஸ் கட்சிதான். அந்தக் கட்சிதான் 1947- ஆம் ஆண்டில் இருந்தே தவறான கொள்கை முடிவுகளை எடுத்து வருகிறது. கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடம் கற்காமல், நாட்டில் மேலும் நெருக்கடியை உருவாக்குவதற்கு காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.
காங்கிரஸ் கட்சி, ஒட்டுமொத்த நாட்டையே ஏமாற்றி வருகிறது. தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டு, ஜம்மு-காஷ்மரில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கிறது என்றார் அவர்.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக ப.சிதம்பரம் கருத்து தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆனால், வியப்பை ஏற்படுத்தவில்லை. ஏனெனில், அவரது கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியோ, மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார், தேச விரோதக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து போராடியவர்களுக்கு ஆதரவு கொடுத்தவர்.
நாட்டின் நன்மைக்காக, தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் சர்தார் வல்லபபாய் படேல். அவர் பிறந்த மண்ணில் இருந்து, ப.சிதம்பரம் பேசுவது அவமானகரமான செயல் என்று அந்த சுட்டுரைப் பக்கத்தில் ஸ்மிருதி இரானி குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பாஜக பொதுச் செயலர் ராம் மாதவ் கூறுகையில், ""ஜம்மு-காஷ்மீர் பிரச்னைக்கு, அந்த மாநில நலம் விரும்பிகளிடம் இருந்து மத்திய அரசு கருத்து கேட்கும்; சிதம்பரம் போன்றவர்களின் அறிவுரை தேவையில்லை'' என்றார்

கருத்துகள் இல்லை: