நந்தினியின் கொலை கற்பனையே செய்துபார்க்க முடியாத அளவுக்கு கொடூரமானது. அந்தப் பெண்ணின் வயிற்றிலிருந்து குழந்தையை எடுத்து, பின் கழுத்தை நெறித்து கொலை செய்திருக்கிறார்கள். இது வன்முறையின் கொடுமையான வடிவம். மேலும், நந்தினி ஒடுக்கப்பட்ட தலித் பெண். இப்படிச் சொன்னவுடன், எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சாதி பார்க்கிறார்கள் என்று குதிப்பார்கள். காலங்காலமாக ஒடுக்கி வைக்கப்பட்ட மக்களை எளிமையாக ஏமாற்றி, கொலையும் செய்ய முடிகிறது என்பதை மனதில் வைத்து இந்தக் கொலையை நாம் ஆராய வேண்டும்.
நந்தினியின் கொலைக்கு பல கட்சிகள், அமைப்புகள் குரல் கொடுத்த பின்பே அரசு நடவடிக்கையில் இறங்கியுள்ளது என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும்.
நம் நாட்டில், அதுவும் தமிழ்நாட்டில் பெண்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்தே வரும் சூழலை, சமூகத்தின் மீது அக்கறை கொண்டோர் கவலையோடு அணுக வேண்டும். ஆனால், தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய, அதிமுகவைச் சேர்ந்த நிர்மலா பெரியசாமியின் பதிவு அப்படியாக இல்லை. தன் பெண்ணைப் பறிகொடுத்திருக்கும் அந்த எளிய குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லாமல், அவர்களையே குறை சொல்வது கொஞ்சமும் நியாயமில்லை.
இதை, ஜாதிய ஆணவத்தின் கருத்து உடையவரின் வெளிப்பாடாகவே பார்க்க முடியும். ஒழுக்கம் பற்றி பேசுகிறார். இவர் இந்த ஒழுக்கத்தோடு இருக்க வேண்டும் என யாருடைய அளவுகோல் வைத்து அளக்கிறீர்கள். அதிமுக வில் இதற்கென தராசு வைத்திருக்கிறார்களா என்ன?
சரி, ஒழுக்கத்தைப் பற்றி பேசியே ஆக வேண்டும் எனில், இந்த நேரத்தில் யாருடைய ஒழுக்கதைப் பற்றி பேச வேண்டும். ஏழைப் பெண்ணை ஏமாற்றி, கர்ப்பமாக்கி, கொலையும் செய்த குற்றவாளியின் ஒழுக்கத்தைப் பற்றித்தானே பேச வேண்டும். அதுதானே முறையாக இருக்கும். ஆனால், அதை விட்டுவிட்டு பாதிக்கப்பட்ட பெண்ணைக் குறை கூறுவது, அவளின் வளர்ப்பைக் குறைச் சொல்வது எல்லாம் ஆணாதிக்க குணமே.
இந்த கருத்தை எதிர்ப்பதோடு வன்மையாக கண்டிக்கவும் செய்கிறேன். நிர்மலா பெரியசாமி பேசியிருப்பது ஆளுங்கட்சியில் உள்ள ஆணாதிக்க மனநிலையை வெளிச்சம்போட்டு காட்டியிருக்கிறது. இப்படி பேசியிருப்பது, ஆளுங்கட்சியான அதிமுகவின் தலைமைக் கழகப் பேச்சாளர் என்பதால், அதிமுகவின் தலைமை இவரின் பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதோடு, அவரைக் கண்டிக்க வேண்டும்.
இந்த வழக்கின் குற்றவாளிகளைக் குண்டர் சட்டத்தில் மட்டுமே சேர்த்திருக்கிறார்கள். அவர் மீது, பாலியல் வன்கொடுமை, பெண்ணை ஏமாற்றி மோசடி செய்தது, பெண் கடத்தல் உள்ளிட்டவையும் இணைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நந்தினிக்கு சட்டப்படி நியாயமான நீதி தாமதமின்றி கிடைக்க வேண்டும். என்றார் பாலபாரதி.
நிர்மலா பெரியசாமியின் பேச்சு பற்றி அதிமுக தரப்பு பதிலைப் பொறுத்திருந்து பார்ப்போம். நீதி வெல்ல வேண்டும்; பெண் கொலைகள் தொடர்வதை நிறுத்தியாக வேண்டும். வி.எஸ்.சரவணன் விகடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக