புதன், 8 பிப்ரவரி, 2017

சட்டமன்றத்தில் பன்னீர்செல்வம் பெரும்பான்மையை நிருபிப்பாரா? தமிழகத்தின் மிகப்பெரும் கேள்வி?

ஓ.பி.எஸ்ஸூக்கு அதிமுகவின் 40 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து உள்ளதாக கூறப்படும் நிலையில், அதைத்தொடர்ந்து அவர் நேற்று இரவு 10 மணியளவில் செய்தியாளர்களிடம் வழங்கிய பேட்டியில் எப்படிப்பட்ட ஒருவர் முதல்வராக வேண்டும் என்று கோடிட்டு காட்டிய செய்தி சசிகலா முதல்வராக வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
நேற்று ஜெயலலிதா சமாதியில் ஓ.பி.எஸ் அளித்த பேட்டியில், மக்கள் மற்றும் தொண்டர்கள் விரும்பினால் தான் ஏற்கனவே கொடுத்திருந்த ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுவேன் என்றும் கூறியுள்ளார். அதாவது அவர் தற்சமயம் காபந்து முதல்வராக இருக்கிறார். இப்போது அவருடைய ராஜினாமாவை திரும்ப பெற ஆளுநர் சம்மதித்து ஓ.பி.எஸ் மீண்டும் முதல்வரானால் அவர் கட்டாயம் சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க கூடிய அவசியம் ஏற்படும். ஆகவே அதுசமயம் அவரது அதிமுக கட்சி எம்.எல்.ஏக்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளரான சசிகலா கண்டிப்பாக ஓ.பி.எஸ் முதல்வராக தொடர்ந்து இருக்க அனுமதிக்கமாட்டார் என்று நம்பப்படுகிறது. ஆகவே முதல்வர் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாத பட்சத்தில் அவர் பதவி விலகுவதோடு அவரது அமைச்சரவையும் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
அத்தோடு மட்டுமில்லாமல் பெரும்பான்மை பெறமுடியாமல் முதல்வர் பதவியை இழக்கும் பட்சத்தில் அவர் சட்டமன்றத்தை கலைத்துவிடுங்கள் என்று ஆளுநரை கோரலாம். இதனை ஆளுநர் ஏற்று சட்டமன்றத்தை கலைத்தால், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி 6 மாதத்திற்குள் தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்த வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும்.
தற்சமயம், தமிழக சட்டமன்றத்தில் அதிமுகவிற்கு 135 எம்.எல்.ஏ.க்களில் ஜெயலலிதா இறந்ததால் தற்சமயம் 134 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அதில் நாற்பது எம்.எல்.ஏ.க்களோ அல்லது பெரும்பான்மை பலம் இழக்க கூடிய வகையில் 18 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஓ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவித்து சட்டமன்றத்தில் பிளவு ஏற்பட்டால், அதிமுக தங்களது பெரும்பான்மையை இழந்து ஆட்சியை இழக்கவேண்டி இருக்கும். இந்த சூழலில் திமுகவில் 89 எம்.எல.ஏ.க்கள் இருந்தாலும் திமுக ஆட்சி அமைக்கும் உரிமை கோராது என்று தெரிகிறது. அதாவது அதிமுக சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை இழந்தாலும் திமுக ஆட்சி அமைக்கும் உரிமை கோராத சமயத்தில் வினோதமான சட்டமன்ற நிகழ்வுகளை சந்திக்க தமிழகம் தயாராக இருக்க வேண்டும்.
இன்றைக்குள்ள சட்டங்களின் படி ஒரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் ஐம்பது சதவீதத்தினர் பிரிந்து வந்தால்தான், அவர்களுக்கு சட்டப்படி சட்டசபையில் அங்கீகாரம் வழங்கப்படும். இந்த சூழலில், 134 உறுப்பினர்களை கொண்ட அதிமுகவில் இருந்து 40 எம்.எல்.ஏ.க்களோ அல்லது அதற்கு குறைவான எம்.எல்.ஏ.க்கள் பிரிந்து வந்தால், அவர்களுக்கு எந்த சட்ட பாதுகாப்பும் கிடைக்காது. அதனால் அனைவரும் பதவி இழக்க கூடிய வாய்ப்பு ஏற்படலாம். இப்படி சட்டமன்றத்தில் பெரும்பான்மை இழந்த அதிமுக தனது ஆட்சியை தமிழகத்தில் தொடரக்கூடிய வாய்ப்பில்லை. இதனால் தமிழகத்தில் முதல்முறையாக தொங்கு சட்டமன்றம் ஏற்பட கூடிய வாய்ப்புள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், மத்திய பி.ஜே.பி அரசின் ஆலோசனை படி ஜனாதிபதி ஆணையின் மூலமாக தமிழக சட்டமன்றத்தை முடக்கிவைக்க கூடிய சந்தர்ப்பம் ஏற்படும். இப்படி அதிமுகவில் இருந்து ஓ.பி.எஸ்க்கு ஆதரவாக வரக்கூடிய எத்தனை எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலும், அவர்களின் ஆதரவினை திமுக ஏற்றுக்கொள்ளாது என்றும், அதிமுக சட்டசபையில் பெரும்பான்மை இழந்தாலும் திமுக ஆட்சி அமைக்க உரிமை கோராது என்று கூறியுள்ளதால் மத்திய பிஜேபி அரசின் ஆலோசனை படி ஜனாதிபதி தமிழக சட்டமன்றத்தை முடக்கிவைக்க கூடிய சந்தர்ப்பம் ஏற்படும்.
இப்படிப்பட்ட சூழலில் மத்திய பிஜேபி அரசு, தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தி மறைமுகமாக தமிழகத்தை பிஜேபி கட்சி ஆட்சி செய்ய கூடிய சந்தர்ப்பம் வெகுவாக கூடியுள்ளது. இந்திய அரசியல் சட்டத்தின்படி எந்த ஒரு மாநிலத்திலும் ஆறு மாதங்களுக்கு மேல், ஜனாதிபதி ஆட்சியை நடத்த முடியாது. ஆனால் பிஜேபி கட்சி இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சட்டமன்றத்தில் ஏற்பட்ட குழப்பங்களை உபயோகித்து, சட்டமன்றத்தை கலைக்காமல், முடக்கி வைத்து ஆறு மாதங்களுக்கு மேலும் ஒரு வருடத்திற்கு மேலும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி ஜனாதிபதி ஆட்சியை தொடர்ந்து அமல்படுத்தி மறைமுகமாக ஆளுநர் மூலமகாக ஆட்சி செய்யும். ஆகவே பிஜேபி இந்த மாதிரியான வழிகளில் அந்த மாநில ஆட்சியை தேர்தலில் சந்திக்காமல் மறைமுகமாக ஆளுவதில் அனுபவம் உள்ளதால், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள சில ஷரத்துகளை உபயோகித்து இன்னும் ஒன்றரை ஆண்டுக்கு ஜனாதிபதி ஆட்சியை நடைமுறைப்படுத்தி 2019 மே மாதத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலையும் சேர்த்து நடத்த கூடிய யுத்திகளை கையாளக்கூடிய சந்தர்ப்பங்ககளும் உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
இவையல்லாமல், ஏதேனும் காரணங்களினால் சட்டமன்றத்தில் அதிமுக தனது பெரும்பான்மை பலத்தை இழக்கும்பட்சத்தில், அதேசமயம் இந்த சந்தர்ப்பத்தை திமுக உபயோகப்படுத்தாமல் தார்மீக அடிப்படையில் செயல்படும்பட்சத்தில், சட்டமன்றம் கலைக்கப்பட கூடிய சூழலில் மத்திய பிஜேபி அரசு நியாயமாகவும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மதித்தும், தார்மீக பொறுப்புடனும் செயல்பட்டு ஆறு மாத காலத்திற்கு தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை ஆளுநர் மூலமாக நடத்தி, உடனடியாக தமிழக சட்டமன்றத்திற்கு பொது தேர்தலை நடத்தி தமிழக மக்களுக்கு ஒரு நிலையான ஆட்சியை அமைத்து கொடுக்க வேண்டிய கடமை உள்ளது.
-அருண் வைத்தியலிங்கம்  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: