வியாழன், 12 மே, 2016

விவசாயி பெருமாள் மனைவியுடன் தற்கொலை... விவசாயிகளை கைவிட்ட ஜெயலலிதா அரசு .. வைகோ கண்டனம்

இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெருமாள் தனது மனைவியுடன் தற்கொலை செய்து சம்பவம் குறித்து மதிமுக பொதுச்செயலாள வைகோ அறிக்கையில்,விழுப்புரம் மாவட்டம் - திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெருமாள் மற்றும் அவரது மனைவி பழனியம்மாள் இருவரும் பூச்சி மருந்து குடித்து தங்கள் வயலிலேயே போய்ப் படுத்து தற்கொலை செய்துகொண்ட செய்தி நெஞ்சைப் பிளக்கிறது.விவசாயம் செய்ய செலவழித்த பணத்தில் ஒரு பகுதிகூட லாபம் பெற முடியாமலும், விளைப்பொருளுக்கு சரியான விலை கிடைக்காமலும் விவசாயத் தொழிலில் நட்டம் ஏற்பட்டு, வங்கிக் கடன், கந்து வட்டிக் கடனைக் கட்ட முடியாமல், தனது தந்தையும், தாயும் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக அவர்களது மகன் அன்பரசன் கூறி உள்ளார்.


மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டுள்ள விவசாயி பெருமாள் குடும்பத்துக்கு தமிழக அரசு 20 இலட்சம் ரூபாய் உடனே வழங்க வேண்டும்.">அரியலூரில் விவசாயி அழகர் என்பவர் வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாததால், தற்கொலை செய்துகொண்டார். கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் 7 விவசாயிகள் உயிரைப் போக்கிக்கொண்டுள்ளனர். இயற்கை இடர்பாடுகளை எல்லாம் எதிர்கொண்டு விவசாயிகள் உற்பத்தி செய்து வரும் விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பது இல்லை. இதனால் போட்ட முதலையும் இழந்து, வருமானம் இல்லாமல் கடன் புதைகுழிக்குள் சிக்கி, இறுதியில் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்குத் தள்ளப்படுகின்றனர்

ஜெயலலிதா ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 2,422 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மத்திய அரசின் தேசிய மாதிரி கணக்கெடுப்பு ஆணையம் தெரிவித்து இருக்கிறது. மத்திய -மாநில அரசுகளின் விவசாய விரோதக் கொள்கைகளாலும், விவசாயிகளின் வாழ்வாதரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் அலட்சியப்படுத்துவதாலும் விவசாயிகளின் தற்கொலைத் துயரங்கள் தொடருகின்றன. தமிழகத்தில் வெற்று விளம்பர அரசியலைச் செய்து வருகிற ஜெயலலிதா அரசுதான் விவசாயிகளின் தற்கொலைக்குப் பொறுப்பேற்க வேண்டும்.

விவசாயிகளைக் கைவிட்ட ஜெயலலிதா அரசுக்கு தமிழக விவசாயிகள் வரும் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவர். சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அமையப் போகும் தேமுதிக -மக்கள் நலக் கூட்டணி -தமாகா கூட்டணி அரசு விவசாயிகளின் வாழ்வில் விடியலை ஏற்படுத்தும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.’’என்று தெரிவித்துள்ளார். நக்கீரன்,in

கருத்துகள் இல்லை: