வியாழன், 12 மே, 2016

டாஸ்மாக் போராட்ட பெண்கள் மீது போலீசின் பாலியல் வக்கிரம்


வினவு.com மதுரவாயல் 5, 2016 டாஸ்மாக் முற்றுகை போர்க்களத்தில்>பாகம் 4 சட்டக் கல்லூரி மாணவியான கனிமொழி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக நடந்த பச்சையப்பன் கல்லூரி டாஸ்மாக் மூடும் போராட்டத்தில் கலந்து கொண்டவர். போலீசின் தாக்குதலுக்கு ஆளானதோடு ஒரு மாதத்திற்கும் மேலாக சிறை சென்றவர். இந்த மே 5 போராட்டத்திலும் கலந்து கொண்டு கடும் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்.
கீதா மூன்று குழந்தைகளுக்கு தாய். பகுதியில் டாஸ்மாக் கடையால் பல்வேறு குடும்பங்களில் நடக்கும் துன்பங்களை அறிந்தவர். அதைப் பற்றி பேசும் போது கோபமடைகிறார். அவரது கணவர், மூன்று குழந்தைகள் என முழுக்குடும்பமுமே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு போலிசால் தாக்கப்பட்டிருக்கின்றார்கள்.
பாதுகாப்பாக வாழ்வதற்கு விதவிதமான ஆயுள் காப்பீடுகள் துவங்கி வீட்டிற்கான பாதுகாப்பு கருவிகள் உட்பட ஏகப்பட்ட முன்னெச்செரிக்கையுடன் வாழ்வோருக்கு ஒரு குடும்பமே இப்படி ஒரு மக்கள் கோரிக்கைக்கு பணயம் வைத்திருப்பது அசட்டுத்தனமாக தோன்றலாம்.
உழைக்கும் மக்களைப் பொறுத்தவரை போராட்டமும், இழப்பும், போர்க்குணமும் அவர்களோடு ஒட்டிப் பிறந்தவை. பிறர் நலத்திற்காக இப்படி முன் வந்து அவர்கள் போராடுவதால்தான் இந்த உலகில் மனித குலம் சேர்ந்து வாழ்வதற்கான பல்வேறு சாதகமான நிலைகள் உருவாகியிருக்கின்றன.
ஒரு இளம் பெண் என்ற முறையில் இப்படி தொடர்ந்து போராட்டங்களில் கலந்து கொண்டு அடி வாங்குவதும், சிறை செல்வதும் பயமாக இல்லையா, எதிர்கால வாழ்க்கை குறித்து அச்சமில்லையா என்று கேட்ட போது கனிமொழி அழுத்தமாக பயமில்லை என்றார். போராட்டக் களத்தில் அவரை நான்கு போலிசார் ஆளுக்கொரு கை, கால்களை தூக்கிச் செல்வதும் தர தரவென இழுத்துச் செல்வதுமான காட்சிகளைப் பார்க்கும் எவரும் அதிர்ச்சியடைவர்.
அழகு நிலையங்களிலும், அன்பான கணவருக்கான கனவுகளிலும் நாட்களை கடத்தும் வயதில் அடுத்த போராட்டம் என்ன என்று இவரைப் போன்ற பல இளம்பெண்கள் மக்கள் அதிகாரத்தின் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். ஆணாதிக்கத்தை எதிர்த்து கருத்திலும், கவிதையிலும், கட்டுரையிலும் வாழ்வதைக் காட்டிலும் இத்தகைய போராட்டக் களத்தில் வாழ்வது கடினமானது.
மக்கள் அதிகாரத்தின் போர்க்குணமிக்க போராட்டங்களில் இத்தகைய இளைஞர்கள் அதிகம் ஈடுபவடுவதால் போலிசார் பல திட்டங்களையும், பயிற்சிகளையும் தயார் செய்து அமல்படுத்துகின்றனர். உடலை பிடிப்பதிலும், இழுப்பதிலும் கடுமையான வலியோடு உட்காயத்தை ஏற்படுத்துவது, ஆடைகளைக் கிழித்து மான உணர்ச்சியை கிளப்பி பணிய வைப்பது, பெண்களாக இருந்தால் அவர்களது அங்கங்களை பிடித்து அதிர்ச்சி ஏற்படுத்தி முடக்க நினைப்பது, தகாத வார்த்தைகளோடு திரும்பத் திரும்பத் திட்டுவது என்று ஒரு வேட்டை நாய் போல பயிற்சி பெற்று கடிக்கின்றனர்.
ஆனால் மணிப்பூரில் இந்திய இராணுவத்தின் பாலியல் அடக்குமுறையை எதிர்த்து “இந்திய இராணுவமே எங்களை வன்புணர்வு செய்” என்று ஆடைகளைக் களைந்து போராடிய பெண்களின் போராட்டத்தை நினைவுகூறும் கனிமொழி இந்த பாலியல் வக்கிரங்களுக்கு அஞ்சமாட்டோம், அடிபணியமாட்டோம் என்று கூறுகிறார்.
“மூடு டாஸ்மாக்” போராட்ட இயக்கம் கட்சிகள், சமூகம் எனும் அரசியல் களத்தில் மட்டுமல்ல பண்பாட்டு ரீதியான பல்வேறு களங்களுக்கும் புதிய விசயங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது.
“இது மக்கள் அதிகாரம், நீங்க எப்ப வந்து சேரப்போறீங்க” என்று கேட்கிறார் கனிமொழி. அந்த அழைப்பை யாரும் மறுக்க முடியாது என்றே தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை: