புதன், 11 மே, 2016

ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்' என உறுதிமொழி 1.64 கோடி பேர்! * தேர்தல் கமிஷன் முயற்சிக்கு வெற்றி

ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்; பணம் கொடுப்பவர்களை பிடித்து கொடுப்போம்' என, 1.64 கோடி பேர் நேற்று உறுதிமொழி எடுத்தனர்.
தமிழகம் முழுவதும், தேர்தல் கமிஷன் எடுத்த முயற்சிக்கு, இதன்மூலம் வெற்றி கிடைத்துள்ளது. 1.64 கோடி பேர் சட்டசபை தேர்தலில், வாக்காளர்களுக்கு கட்சியினர் பணம் கொடுப்பதை தடுக்க, தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அத்துடன் பொதுமக்கள், பணம் வாங்குவதை தடுக்கவும், விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி, நேற்றைய தினம், வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நாளாக அறிவிக்கப்பட்டது. 'மாநிலம் முழுவதும் நடத்த, தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்தது.தமிழகத்தில் உள்ள, 66 ஆயிரம் ஓட்டுச் சாவடிகளிலும், நேற்று காலை, 10:00 மணிக்கு, வாக்காளர்களை அழைத்து, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் உறுதிமொழி ஏற்க செய்தனர். அதேபோல், அனைத்து அரசு அலுவலகங்கள், குடியிருப்புசங்கங்கள், கேளிக்கை விடுதிகள் போன்றவற்றில், உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்தனர்.

தலைமைச் செயலக ஊழியர்கள், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமையில், கோட்டையில் உறுதிமொழி எடுத்தனர். அனைத்து மாவட்டங்களிலும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளர்கள், ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும், உறுதிமொழி எடுத்தனர்.

அரியலுார் கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட விளையாட்டு அரங்கில், 20 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊழியர்கள், கலெக்டர் சரணவேல்ராஜ் தலைமையில் உறுதிமொழி எடுத்தனர்.பெரம்பலுார் மாவட்டத்தில், அனைத்து கிராமங்களிலும்உள்ள தனியார் அமைப்பினர், உறுதிமொழி எடுத்தனர்.இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும், அதிகாரிகள், தனியார் நிறுவன ஊழியர்கள், மக்கள் உறுதிமொழி எடுத்தனர்.
சென்னை, அண்ணா சாலை மின் வளாகத்தில், மின் வாரிய தலைமை அலுவலகம், மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் உள்ளிட்ட பல அலுவலகங்கள் உள்ளன. இவற்றில், 3,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் அனைவரும், நேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மனமாற்றம் ஏற்படுமா?


தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:தமிழகம் முழுவதும், 2 கோடி பேரை உறுதிமொழி எடுக்க வைக்க முடிவு செய்தோம். நேற்று, 1.64 கோடிக்கு மேற்பட்டோர் உறுதிமொழி எடுத்தனர். அவர்களின் புகைப்படங்கள், தேர்தல் கமிஷன் இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.மக்களிடையே மனமாற்றத்தை ஏற்படுத்த,
இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி உதவும்.இவ்வாறு லக்கானி தெரிவித்தார். - நமது நிருபர் குழு   dinamalar.com

கருத்துகள் இல்லை: