திங்கள், 9 மே, 2016

இனி எனது குடும்பத்திற்கு இந்த அரசியல் வேண்டாம் : மு.க.ஸ்டாலின் அதிரடி


 இனி எனது குடும்பத்திற்கு இந்த அரசியல் வேண்டாம் : மு.க.ஸ்டாலின் அதிரடி
tamil.chennaionline.com/சென்னை,மே 09 (டி.என்.எஸ்) தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தனியார் தொலைக்காட்சியில் நேயர்கள் நேரடியாக கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது நேயர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு பதில் அளித்த அவர், இனி எனது குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள், என்று தெரிவித்தார்.
அதன் விவரம் வருமாறு:
கேள்வி: தொடர் தேர்தல் சுற்றுப் பயணத்தால் சோர்வடைந்து இருப்பீர்கள். உங்கள் பிரச்சார அனுபவத்தைப் பற்றி சொல்லுங்கள்?

பதில்: நூற்றுக்கணக்கான கூட்டங்களில் கலந்து 25 மாவட்டங்களில் எனது பிரச்சாரச் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு, இன்று விடியற்காலை 3 மணியளவில் சென்னைக்கு வந்து சேர்ந்தேன். அதனால் தான் என்னை பார்க்கும் போது கொஞ்சம் சோர்வாக தெரியும். இருந்தாலும் நேயர்களிடம் இருந்து லட்சக்கணக்காண கேள்விகள் வந்திருப்பதாக கேள்விப்பட்டேன். எந்த கேள்வியாக இருந்தாலும் கேளுங்கள். தாராளமாக பதில் சொல்லத் தயாராக இருக்கிறேன்.
கே: தேர்தல் அறிக்கையில் நீங்கள் பூரண மது விலக்கு கொண்டு வருவோம் என்று சொல்லி இருக்கின்றீர்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அரசுக்கு வருமானம் இல்லை என்று மீண்டும் மதுக்கடைகளை திறக்க மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்?
ப: தி.மு.க.வை பொறுத்த வரையில் எப்போதும், “சொன்னதைத்தான் செய்யும், செய்வதைத்தான் சொல்லும்”. பெண்களுடைய பாதுகாப்பிற்காக, தமிழர்களின் கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக திமுக தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு அமுல்படுத்துவோம் என்று தெளிவாக குறிப்பிட்டு காட்டி இருக்கின்றோம். அதன் மூலமாக அரசுக்கு இழப்பு ஏற்படும் என்பது உண்மைதான்.
ஆனால் அந்த இழப்பீட்டுத் தொகையை, எப்படி 2006–ம் ஆண்டு 7000 கோடி ரூபாய் விவசாயக் கடனை தள்ளுபடி செய்தபோதும் இதே பிரச்சினை வந்தது. தலைவர் கலைஞர் அந்த இழப்பை சமாளித்தார்கள். அதேபோலத்தான் இப்போதும் கனிம வளம், தாது மணல், கிரானைட் போன்றவற்றில் இருந்து வரக்கூடிய வருமானங்களை தனியாருக்குத் தராமல், அரசே பொறுப்பேற்று, அரசின் மூலமாகவே அந்த பணிகளை மேற்கொள்கிற போது, நிச்சயமாக அரசிற்கு போதிய வருமானம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் பல்வேறு வகையில் அரசுக்கு வரக்கூடிய வருமானங்களை கண்காணிக்கும் போது நிச்சயமாக இந்த இழப்பை சமாளிப்போம் என்ற நம்பிக்கை தி.மு.க.விற்கு இருக்கிறது.
கே: பக்கத்து மாநிலங்களில் மது விற்பனை இருக்கும்போது தமிழ்நாட் டில் பூரண மது விலக்கு என்பது எப்படி சாத்தியம்?
ப: ஒவ்வொரு மாநிலத்திற்கும் தங்களது கொள்கைகளை முன்னெடுக்கும் அடிப்படை உரிமை இருக்கிறது. அவை அந்தந்த மாநிலங்களின் சூழ்நிலைக்கு ஏற்ப அமைந்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்த வரையில் இளைஞர்கள், குறிப்பாக பெண்களுடைய பாதுகாப்புக்கு மதுவிலக்கு அவசியமாக தேவைப்படுகிறது. ஆகவேதான் தமிழகத்தில் மதுவிலக்கை அமுல் படுத்துவதில் தி.மு.க. உறுதியாக இருக்கின்றது.
கே: ஜெயலலிதா தனது ஒவ்வொரு பிரச்சாரத்திலும் தி.மு.க.வை குடும்ப கட்சி என்றும் உங்கள் ஆட்சியை குடும்ப ஆட்சி என்றும் சொல்லி வருகிறார். அதை நீங்கள் எப்படி பார்க்கின் றீர்கள்?
ப: அதாவது சசிகலாவை பக்கத்தில் வைத்துக் கொண்டு அவர்கள் குடும்ப ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், அதை மூடி மறைப்பதற்காக திட்டமிட்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக செய்யக் கூடிய ஒரு உத்தியை அவர் கையாண்டு இருக்கிறார். அது தவிர வேறொன்றும் அல்ல.
என்னைப் பொறுத்தவரையில் நான் சொல்ல வேண்டும் என்று சொன்னால், நான் 45 ஆண்டுகளாக அரசியலில் இருந்து கொண்டு இருக்கிறேன். அதுவும் தி.மு.க.வில் கிளைக் கழகத்தில் இருந்து தொடங்கி நகரக் கழகம், பகுதி கழகம், மாவட்டக் கழகம், தலைமைக் கழகம் என்று படிப்படியாக வளர்ந்து வந்திருக்கிறேன். ஆகவே என்னை வைத்து அவர் இப்படி சொல்வதை தமிழ் நாட்டு மக்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
கே: உங்கள் குடும்பத்தில் இருந்து இன்னும் யாராவது அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதா?
ப: என்னுடைய மகனாக இருந்தாலும் சரி, என்னுடைய மருமகனாக இருந்தாலும் சரி, என்னுடைய குடும்பத்தில் வேறு யாராக இருந்தாலும் அரசியலுக்கு நிச்சயமாக வர மாட்டார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
கே: பொதுவாக உங்கள் கட்சி மீதும் சரி, அ.தி.மு.க. மீதும் சரி ஊழல் புகார்கள் அதிகம் உள்ளன. இரு கட்சிகளுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது?
ப: தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் மீது பல சொத்துக்குவிப்பு வழக்குகள் போடப்பட்டு உள்ளதே தவிர, எதுவுமே நீதிமன்றங்களில் நிரூபிக்கப்பட்டு தண்டனை கள் வழங்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் சில அமைச்சர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் தள்ளுபடி தான் செய்யப்பட்டது.
ஆனால் ஜெயலலிதாவை பொறுத்தவரையில் ஏற்கனவே ஆட்சியில் இருந்த போது டான்சி வழக்கில் என்ன தண்டனை பெற்றார் என்பது உங்களுக்குத் தெரியும். அதன் பிறகு சமீபத்தில் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கில் 4 வருடம் சிறைத்தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம் வழங்கப்பட்டது. இப்போது அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டில் உள்ளது.
ஆக, தி.மு.க. மீது போடப் பட்ட வழக்குகள் எதுவுமே ஆதாரத்தோடு நிரூபிக்கப்பட வில்லை. அப்படியொரு தீர்ப்பும் வரவில்லை. ஆனால் அ.தி.மு.க. தலைவர் ஜெயலலிதா மீதான ஊழல் வழக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் இதில் சேர்த்து பேசுவதில் எந்தவித நியாயமும் கிடையாது என்பதுதான் என்னுடைய கருத்து.
கே: நமக்கு நாமே பயணம் தேர்தலை ஒட்டி நடந்த பயணமா அல்லது பொது மக்களை சந்திக்க வேண்டும் என்ற உள்ளார்ந்த எண்ணத்தை உள்நோக்கமாக கொண்டு நடைபெற்ற பயணமா?
ப: என்னைப் பொறுத்த வரையில் நான் ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்று சொன்னாலும் நான் தொடர்ந்து மக்களை சந்தித்துக் கொண்டு இருப்பவன் என்பது எல்லோருக்கும் தெரியும். நமக்கு நாமே பயணத்தை ஏதோ ஒரு நடைப்பயணம் போன்று நான் நடத்தவில்லை.
நான் சென்ற 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் இருக்கின்ற அனைத்துத்தரப்பு மக்களையும் சந்தித்து, இந்த ஆட்சியில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும், அதையெல்லாம் வரக் கூடிய தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்ற வேண்டும் என்ற நிலையில் தான் நான் இந்த பயணத்தை மேற்கொண்டேன்.
அதுமட்டுமல்ல இந்த பயணம் ஆட்சிக்கு வந்த பிறகும் தொடரும் என்று நான் உறுதியாக சொல்லி வருகிறேன். எனவே இதை தேர்தலுக்காக நான் நடத்திய பயணம் என்று நீங்கள் கருத வேண்டிய அவசியம் இல்லை.
கே: நமக்கு நாமே பயணத்தில் சில இடங்களில் நீங்கள் மன்னிப்பு கேட்டீர்கள். அது எதற்காக?
ப: நமக்கு நாமே பயணத்தின் போது எல்லாத்தரப்பு மக்களையும் நான் சந்தித்தேன். அதில் குறிப்பாக தொழில் அதிபர்கள், சிறுகுறு தொழில்களை நடத்தக்கூடிய நண்பர்கள் என பலதரப்பினரை சந்தித்தபோது, அவர்களுக்கு ஏற்பட்ட சில சங்கடங்களை எல்லாம் எடுத்துச் சொன்னார்கள். அதில் சில பிரச்சினைகளில் மத்திய அரசின் அனுமதிகளை பெற வேண்டிய சூழ்நிலை, பொருளாதார ரீதியான சில பிரச்சினைகள் இப்படி பலதரப்பட்ட பிரச்சினைகளை வரும் காலத்தில் முறைப்படுத்தி செயல்படுத்துவோம்.
அப்படிப்பட்ட சிலவற்றில் எங்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ சில தவறுகள் கூட நடந்திருக்கலாம். அப்படி நடந்திருந்தால் நான் எங்களுடைய சார்பில் பகிங்கரமாக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன், என்று நான் வெளிப்படையாக சொன்னேன். இனி அதுபோன்றதொரு சூழ்நிலை வராது. வரக்கூடிய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கரெப்ஷன், கமிஷன், கலெக்ஷன் என்ற நிலை இல்லாத ஆட்சியாகத்தான் இருக்கும் என்ற உறுதியை நான் அவர்களிடத்தில் சொல்லி இருக்கின்றேன்.
கே: நமக்கு நாமே பயணத்தில் உங்கள் மனதை அதிகம் பாதித்த விஷயம் எது? நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த விஷயத்திற்கு எந்தவிதமான நடவடிக்கை எடுப்பீர்கள்?
ப: எட்டாம் வகுப்பு படிக்கக் கூடிய ஒரு மாணவி வந்து என்னிடத்தில் பேசிய போது, ‘‘என்னுடைய குடும்பமே டாஸ்மாக் கடையால் அழிந்து விட்டது, ஒரு அனாதையாக நான் இப்போது இருக்கிறேன்”, என்று சொன்னது என் மனதை மிகவும் பாதித்தது.
அதுமட்டுமல்லாமல், மாணவர்கள் கல்விக்காக கல்விக்கடன் வாங்கும்போது, அந்த கடன் தொகையை குறித்த காலத்தில் முறையாக திரும்ப செலுத்த முடியாத சூழ் நிலையில் வட்டி செலுத்தக்கூடிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். அந்த வட்டியைக் கூட செலுத்த முடியாத சூழலில் வட்டிக்கு வட்டி செலுத்தும் நிலை வந்து, அந்த குடும்பத்தின் பெற்றோர்கள் தற்கொலை செய்து கொண்டு மாண்டிருக்கக் கூடிய நிலைகள் எல்லாம் நடந்து இருக்கிறது.
ஆக, இதையெல்லாம் நமக்கு நாமே பயணத்தில் நான் தெரிந்து கொண்டேன். இவை எனது மனதை மிகவும் பாதித்தது. எனவே இதையெல்லாம் தலைவர் கலைஞரிடத்தில் வந்து சொன்னேன். அதன் பிறகுதான் மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தலைவர் கலைஞர் குறிப்பிட்டு இருக்கிறார்.
கே: நீங்க கட்சி பணிகளில் எப்போதும் பிசியாகவே இருக்கக் கூடியவர். குடும்பத்துடன் உங்களால் நேரம் செலவழிக்க முடிகிறதா?
ப: என்னுடைய பிறந்த நாளாகட்டும், என்னுடைய குடும்பத்தினருடைய பிறந்த நாளாகட்டும் நிச்சயம் அவர்களோடு தான் இருப்பேன். இரவு வெளியில் ஷாப்பிங் செல்வது, குடும்பத்தோடு ஹோட்டலில் சாப்பிடுவது என அவர்களுக்கான முக்கியத்துவத்தை கொடுத்துதான்வர்றேன்.
கே: பேரக்குழந்தைகளோடு அவர்களுடைய ஸ்கூலுக்கு போனதுண்டா? அவர்களை பள்ளியில் விட்டுட்டு வருகிற பழக்கம் இருக்கா?
ப: அவர்களுக்கு அதில் ஆசை இருக்கோ மகிழ்ச்சி இருக்கோ இல்லையோ, எனக்கு அதுமாதிரி போகணும்னு ரொம்ப ஆசை. என்னுடைய மகன் பள்ளியில் படிச்சப்போ நான் தான் தொடர்ந்து பள்ளியில் விட்டுவிட்டு அழைச்சுட்டு வருவேன். என்னுடைய பேரக்குழந்தைகளையும் அதேபோல அழைச்சிட்டு போகணும்னு ஆசை. நேரச் சூழலில் முடியவில்லை. ஆனால் சில நேரங்களில் பள்ளிகளில் இருந்து அழைச்சிட்டுவர்றேன். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது.
கே: தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 30 வருடங்களாகவே தி.மு.க மற்றும் அதிமுக வுக்கு இடையேதான் போட்டி இருக்கிறது. இருந்த போதிலும் மூன்றாவது அணி, நான்காவது அணி உருவாவது பற்றி உங்களுடைய கருத்து?
ப: இந்த தேர்தலைப் பொறுத்த வரையில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட யார் ஆட்சியில் இருக்க கூடாது என்பதுதான் முக்கியம்.அதிலும் ஜெயலலிதாவின் அ.தி.மு.க. இருகக்கூடாது என்பதுதான் ஒட்டுமொத்த மக்களின் எண்ணம். அந்த நிலை உருவாவதற்கு தி.மு.க வைத் தவிர வேறெந்த கட்சியையும் சொல்வதற்கு வாய்ப்பில்லை. மற்ற கட்சிகள் ஓட்டுக்களை பிரிப்பதற்காக நிற்கலாம். முதல்–அமைச்சர் வேட்பாளர் என்றும் சொல்லிக் கொள்ளலாம். எனவே தி.மு.க. தான் அ.தி.மு.க.வை மாற்றுகிற சக்தியாக இருக்கும்.
கே: நான் இந்தமுறைதான் முதலாவதாக ஓட்டு போட போறேன். நான் ஏன் தி.மு.க.வுக்கு ஓட்டு போடணும், ஏன் அதிமுக.விற்கு வாக்களிக்க கூடாது?
ப: தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை முழுவதும் படிச்சிருக்கீங்களா? அதைப் படிச்சீங்கனா தி.மு.க.விற்கு தான் ஓட்டு போடுவீங்க. ஏனெனில் இளைஞர்களுக்கு, மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அதில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைபடித்தால் நிச்சயம் உங்களுடைய ஓட்டு தி.மு.க.வுக்குதான்.
கே: எஞ்ஜீனியரிங் படிச்சுட்டு லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்காங்க. இதற்கான சிறப்பு கவனம் தி.மு.க. ஆட்சியில் செலுத்தப்படுமா?
ப: இந்த ஆட்சியில் வேலையில்லாமல் திண்டாடும் இளைஞர்களின் எண்ணிக்கை 84 லட்சம் பேர். காரணம் ஒரு தொழிற்சாலைகள் கூட இந்த ஆட்சியில் உருவாக்கப்படவில்லை. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது பல தொழிற்சாலைகள் தொடங்கி, லட்சக்கணக்கான பேருக்கு வேலை வழங்கப்பட்டது.
இந்த தேர்தல் அறிக்கையில் கூட, ஒற்றைச் சாரள முறையைக் கொண்டு வந்து தொழிலதிபர்கள், வெளிமாநிலத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்கு சில சலுகைகள் வழங்கி தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளை உருவாக்குகிற வாய்ப்பை ஏற்படுத்தினால் நீங்கள் சொல்கின்ற அந்த பட்ட தாரிகள் பயனடைவார்கள். அதனால் தான் இந்த தேர்தல் அறிக்கையில் வேலை வாய்ப்பிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப் பட்டிருக்கிறது.
கே: அடுத்து வரக்கூடிய உங்க ஆட்சியில் விளையாட்டுத் துறைக்கு என்ன மாதிரியான முக்கியத்துவம் கொடுக்கப் போறீங்க?
ப: நமக்கு நாமே பயணம் மேற்கொண்டபோது விளையாட்டுத் துறையைச் சார்ந்த பலரை சந்தித்தி கலந்துரையாடினேன். அப்போ அவங்க சொன்ன தெல்லாம், இந்த ஆட்சியில் இருக்கிற விளையாட்டு துறை அமைச்சரை சந்தித்து குறைகளை சொல்ல முடியவில்லை, பல நாடுகளில் சென்று வென்று பல பதக்கங்களை வாங்கினாலும் எங்களை ஊக்குவிக்கவில்லை என்பது தான். அதையெல்லாம் எடுத்துகொண்டு, தி.மு.க ஆட்சியில் நிச்சயம் அந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்

கருத்துகள் இல்லை: