செவ்வாய், 19 ஜனவரி, 2016

சுந்தரத்தெலுங்கினில் டப்பிசைத்து... எழுவாய்/பயனிலை/செயப்பாடு எல்லாம் மாற்றிப்போட்டு

1501759_1405339143041454_892997285_nvadhini.com :டாக்டர் ராஜசேகர் ஒரு தமிழர் என உங்களுக்கு தெரியும். தில்லுமுல்லு தேங்கா சீனிவாசன் சொல்வதுபோல் அவர் ஒரு ‘அமிஞ்சிக்கரை டாக்டர்’. ஆனால் அவரே தன் மொழிமாற்ற தமிழ்ப்படங்களுக்கு தானே டப்பிங் பேசமாட்டார். ராஜசேகரின் ’குரல்வளம்’ ஒரு காரணமென்றாலும் சாய்குமார் என்பவரை வைத்துதான் எல்லா படங்களிலும் தமிழ் பேசியிருப்பார். இந்த சாய்குமார் இருக்கிறாரே, அவரின் பேச்சுமொழி (ஆக்சண்ட்) ஒரு பக்கா தெலுங்கா தமிழாவென சொல்லமுடியாத ஜோலார்பேட் பார்டர் தமிழ். சாய்குமார் பின்னர் அவரே ஹீரோவாக மாறினார். அந்தப்புரத்தில் சௌந்தர்யா ஜோடியாக வருவாரே அவர் தான்.
தெலுங்கர்கள் டபுள் பேட்டா கொடுத்து இருமொழிப்படங்கள்‘ ஒருநாளும் எடுத்ததில்லை (இஞ்சி இடுப்பழகி வரை ஓபி தான்).
டைரக்டர்கள் ராஜசேகரிடம் ‘சம்பந்தம், நீ ஒன்னியும் பண்ணவேணாம், இந்த பபுள்கம்மை போட்டு ம்ம்ம்ம்ன்னு மென்னுட்டே இரு, நான் டப்பிங்ல பார்த்துக்கறேன்’ என சாய்குமாரிடம் சரண்டைவார்கள். சாய்க்குமாரும் ‘ஏய்ய்..உன்னாட்டம் ரவுடிங்கக்கிட்டருந்து என்னாட்டம் போலீஸ்க்காரங்க லா அண்டு ஆர்டரை காப்பாத்தாம போனா’ என பேசினால் அச்சுஅசலாக ராஜசேகர் தமிழ்பேசியது போல இருக்கும். அப்படி அவுட்-ஆஃப்-சின்க் இருந்தாலும் ராஜசேகரின் முறுக்குமீசையில் மறைந்துவிடும்.
அப்படி (டப்பிங் கலைஞர்கள்) சங்கம் வைத்து வளர்த்த மொழிமாற்ற தமிழின் இன்றைய நிலை என்ன? டப்பிங் கலைஞர்கள் இப்போதைய தெலுங்கு ஹீரோக்களுக்கு பேசி முடிப்பதற்குள் வெந்து வெக்சாகி நொந்துநூடுல்சாகி டரியலாகி பொரியலாகிறார்கள். ஏன்? முதற்காரணம் இப்போதெல்லாம் தெலுங்கு ஹீரோக்கள் கத்துவதை குறைத்துவிட்டார்கள். அப்படி ஒர்ரே என உறுமும் பாலைய்யா போல ஓரிருவர் படங்களும் நேரடி தெலுங்கு ரிலீஸாக புரசைவாக்கம் அனுஈகாவில் வந்துவிடுகிறது. சற்றே மூக்கை விடைத்து கத்தும் ஜூனியர் NTR கூட முடியை மொஹாக் விட்டு, தொடை சைஸை குறைத்து பாலீஷாகிவிட்டார். அவருக்கு பதிவாய் பேசும் மிமிக்ரி கலைஞர் அரவிந்தும் தன் ஹஸ்க்கி வாயில் எண்டிஆர் குரலை மேட்ச் செய்துவிடுகிறார்.
தெலுங்கு சூப்பர்ஸ்டார் ப்ரின்ஸ் மகேஷ்பாபுவுக்கு வாய்ஸ் கொடுப்பவர்கள் தான் பாவம். நடிகர் வினீத்தின் காதல்தேசம், சந்திரமுகி படங்களின் ஏப்பம் விடுவதற்கு ஒருநொடி முந்தைய குரல் மாடுலேஷன் ஞாபகம் வருகிறதா? அவற்றை பேசிய சேகர் தான் பெரும்பாலும் மகேஷுக்கு பேசுகிறார். ரஜினி எலக்‌ஷனில் வாய்ஸ் கொடுத்து அம்மாவிடம் லோல்பட்டதை விட அதிக கஷ்டம் இவருக்கு. அதற்கு காரணம் இந்த மகேஷ்பாபு இருக்கிறாரே, அவர் கெத்து, ஸ்டைலிஷ் டயலாக் டெலிவரிஎன நினைத்து சிலதை செய்துவிடுவார்.
1. வேகவேகமாக எழுவாய்/பயனிலை/செயப்பாடு எல்லாம் மாற்றிப்போட்டு பேராசிரியர் நன்னன் தூக்கில் தொங்குவதுபோல ஒரு வரியை பேசிவிடுவார். “அதிகம் பேசாத நண்பா, வாய் இருக்குன்னு நினைச்சுக்கிட்டியான்னா அதுவும் சாப்பிடக்கூட இருக்காது” என்பது போல் கடகடவென தெலுங்கில் மூன்றரை செகண்டில் சொல்லியிருப்பார். அதை தமிழில் மீட்டருக்குள் அடக்குவதற்குள் மேட்டராகிவிடுவார்கள்.
2. மகேஷுக்கு வரிக்குவரி பன்ச் பேச வேண்டும். வில்லன் என்றில்லை, ஹீரோயினிடம், நண்பனிடம், ஏன் பெற்ற அம்மாவிடம் கூட. ’அம்மா உன் சமையல் டேஸ்ட்டு. மிச்சம்வெச்சா வேஸ்ட்டு” என்பதுபோல் சொல்லிக்கொண்டே கைகழுவுவார். இதை தமிழுக்கு மொழிபெயர்த்து முழிப்பெயர்ந்து போவார்கள் வசனகர்த்தாக்கள்.
3. மகேஷ் எப்போதும் கண்ணாஸ்பத்திரியில் கண்ணில் மருந்துவிட்டு தெளியாததுபோல் குன்சாக எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டு தான் டயலாக் பேசுவார். சஜஷனில் பேசவே மாட்டார். இப்போது நீங்கள் என் முன்னே வந்து ‘எப்படிப்பா இருக்க” என்கிறீர்கள். ‘மனசு டல்லா இருந்தா உடம்பு நல்லா இருக்காது நண்பா’ என சின்னதம்பி கவுண்டமணி சுவரை பார்த்துச்சொல்வது போல சொல்லிவிட்டு சீனிலிருந்து ஸ்டைலாக நகர்ந்துவிடுவார். என்னவோ இருவரி திருக்குறளையே சொல்லிவிட்டதுபோல் ஒரு செண்டிமெண்ட் BGM வர, காமெடியன் அலியோ, ஹீரோயின் சுருதியோ பெருமிதமாய் மகேஷை பார்ப்பதுபோல் அந்த காட்சி முடியும்.
4. இப்போது சொல்வதுதான் டப்பிங்குக்கு முக்கியமான பிரச்சனை. ஒரு வசனம் எடுபடுவது வெறும் வார்த்தைகளால் அல்ல. அது சொல்லப்படும் விதமும், உணர்வுகளும் மிகமுக்கியம். மகேஷுக்கு நான் என்றால் மட்டுமல்ல நாம் என்றாலும் உதடுகள் ஒட்டாது. வில்லனிடம் கூட கல்யாண ரிசப்சனில் ஃபோட்டோவுக்கு சிரித்துக்கொண்டே மாப்பிள்ளையிடம் பேசுவது போல வாயை லைட்டா சிரிச்சாற்போல் வைத்துக்கொண்டு சவாலோ சவடாலோ, ரெண்டு குத்தோ விடுவார். இவருக்கும் ராம்கி போல் ஃபைட்டுக்கு பிறகு முடி கலையவே கலையாது (டோப்பாவோ என நீண்டநாள் சம்சயம்) சந்தேகம் இருப்பின் சமீபத்தில் வந்த செல்வந்தன் (ஸ்ரீமந்துடு) கல்யாண ஃபைட்டை பாருங்கள். அண்டர்ப்ளே செய்வதாய் நினைத்துக்கொண்டு முகத்தில் botox ஊசி குத்தி மரத்தது போல், மாமியார் வீட்டில் மோசமான மைசூர்பாகை வாயில் போட்டது போல் படம் நெடுக வளைய வருவார். இந்த சிரிச்சாப்போல இருக்கும் முகத்துக்குள் காமெடி,கோபம்,சிருங்காரம் என அவன்,இவன் விஷால் போல் நவரசத்தையும் பிழியும் கஷ்டத்தை நினைத்து டப்பிங் ஆர்டிஸ்டுகள், டப்பே வேண்டாம் என ஓடிவிடுகிறார்கள்.
5. கடைசியாய், வஜனம் பேச மகேஷ் கொடுக்கும் டைமிங் ரொம்ப ரொம்ப கம்மி. அவர் ரெண்டரை செகண்ட் வாயை திறந்து மூடுவதற்குள் தமிழ் டயலாகை ஸ்கூலுக்கு முன் இட்லியை திணிப்பதுபோல் திணிக்கவேண்டும். கலேஜா (தமிழில் பத்ரா) என நினைக்கிறேன். மகேஷ் வாயை லைட்டாய் குவிப்பார். தமிழ் வசனகர்த்தா ‘நண்பா எம்பேரு வீரபாண்டிய கட்டபொம்மன், சுருக்கி சிவாஜின்னு வெச்சுக்கிட்டேன், அந்த பேரு சரிதானே, அது சிவாஜிக்கு பெரியார்(!) வெச்ச பேரு’ என பெரியார் வரை இழுத்து ஒரு லெங்த்தி டயலாகை வாயில் அடைத்திருப்பார்கள். மகேஷ் ஆல்ரெடி தன் வாயை மூடி ஆஃபனவர் ஆகியிருக்கும்.
என் ஆசையெல்லாம் ஒன்றே ஒன்று தான். கைக்காசை போட்டாவது ஒரு படத்தை டப் செய்து மகேஷுக்கு நாபிக்கமலத்திலிருந்து தம் பிடித்து, அடித்தொண்டையிலிருந்து உருட்டி, நாக்கை சுழட்டி, பல்லை கடித்துப்பேசும் சாய்குமாரின் குரலை டப் செய்ய வைக்கவேண்டும். அப்படி ’செய்யாட்டி போனா’ தமிழ்சினிமா ஜிகர்தண்டா அ.குமார் போல ஒரு படத்தை இழக்க நேரிடும்.
  • ரசனைகாரன்,முகநூல்.

கருத்துகள் இல்லை: