ஞாயிறு, 17 ஜனவரி, 2016

பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் காலமானார்...தமிழ் தலித் எழுச்சியின் அடையாளம்

நாட்டுப்புற இசைக் கலைஞரும் புதுச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறை
பேராசிரியருமான முனைவர் கே.ஏ.குணசேகரன் (1955-2016) உடல்நலக் குறைவால் இன்று ஞாயிற்றுக்கிழமை (17-01-2017) புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நடனங்களை ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்ற குணசேகரன் தமிழ் நவீன நாடக உலகில் நடிகராகவும் இயக்குனராகவும் புகழ்பெற்றவர். சத்திய சோதனை, பவளக்கொடி, பலியாடுகள் உள்ளிட்ட நாடகங்கள் பலவற்றை எழுதியுள்ளார்.
நாட்டுப்புற இசைக்கு பொதுவெளியில் ஏற்பையும் மதிப்பையும் உருவாக்கியவர். தற்போது புகழ்பெற்று விளங்கும் சின்னப்பொண்ணு உள்ளிட்ட இசைக் கலைஞர்கள் அவரால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள்.
கவிஞர் இன்குலாப் எழுதி குணசேகரன் பாடிய "மனுசங்கடா நாங்க மனுஷங்கடா....." என்றபாடல் தமிழ்நாட்டு முற்போக்காளர்களின் தேசிய கீதம் எனப் புகழப்பட்ட ஒன்று.
"ஆக்காட்டி.. ஆக்காட்டி..." என்ற நாட்டுப்புற பாடலில் நுட்பமான சில மாற்றங்களைச்செய்து அவர் பாடிவந்தார். கேட்போரைக் கண்கலங்கச்செய்யும் பாடல் அது. "அழகி" உள்ளிட்ட திரைப்படங்கள் சிலவற்றிலும்கூட அவர் நடித்திருக்கிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேடைகளைத் தனது ஆற்றல்மிகு குரலால் எழுச்சிகொள்ள வைத்தவர். பாரதிதாசன் கவிதைகள் சிலவற்றுக்கு அற்புதமாக இசையமைத்துப் பாடியவர். தமிழ்நாட்டில் தலித் பண்பாடு, இலக்கியம் குறித்த முன்முயற்சிகளை 1990 களின் துவக்கத்தில் நானும் சில தோழர்களும் முன்னெடுத்தபோது எங்களோடு எல்லா களங்களிலும் இணைந்து நின்றவர்.
தலித் பண்பாட்டு அரசியல் வரலாற்றில் அவரது 'மனுசங்கடா' ஒலிநாடாவுக்கும் 'பலி ஆடுகள்' நாடகத்துக்கும் முக்கியமான இடம் உண்டு. சேரிப்புறவியல், தலித் அரங்கியல் என்ற நூல்களின்மூலம் கோட்பாட்டுத் தளத்திலும் பங்களிப்பைச் செய்துள்ளார். வடு என்ற தலைப்பிலான அவரது நூல்தான் தலித் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டதற்குப்பின் தமிழில் வெளியான முதல் தலித் சுயசரிதை ஆகும்.
சி.மௌனகுரு, பாலசுகுமார் உள்ளிட்ட ஈழத்து நாடககர்த்தாக்களோடும் அவருக்கு நெருங்கிய நட்பிருந்தது. உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று அவர் நாடகங்களை நடத்தியிருக்கிறார். நாட்டுப்புறவியலில் மட்டுமின்றி செவ்வியல் இலக்கியத்திலும் அவருக்குப் புலமை இருந்தது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராகப் பணியாற்றியபோது சில செவ்வியல் நூல்களுக்குப் புதிய விளக்கவுரைகளையும் அவர் எழுதியிருக்கிறார்.
கே.ஏ.குணசேகரன் அவர்களுக்கு ரேவதி என்ற மனைவியும், குணவதி என்ற மகளும் அகமன் என்ற மகனும் உள்ளனர்.
மார்க்சிய அரசியல் பின்புலத்தோடு தமிழ் உணர்வையும் தலித் மக்களின் உரிமைகளையும் தனது இசையின் மூலமும் நாடகங்களின் மூலமும் வெளிப்படுத்திவந்த மக்கள் கலைஞர் அவர். கேட்பவரின் உயிரில் ஊடுருவிச் செல்லும் அந்த உரிமைக் குரல் இன்று ஓய்ந்துவிட்டது. திரு கே.ஏ.ஜி க்கு என் அஞ்சலி!
(டி. ரவிக்குமார், தலித் எழுத்தாளர், ஆய்வாளர், நிறப்பிரிகை ஆசிரியர்) bbc.tamil.com

கருத்துகள் இல்லை: