வியாழன், 21 ஜனவரி, 2016

காஞ்சி வழக்கு தீர்த்த அல்லது வழக்கறுத்த ஈசன்...பீப் பாட்டுகாரன் வருகையால் பூஸ்ட் கிடைத்த...கண்றாவி

IMG_3139தமிழகத்தில் ‘திடீர் சாம்பார், திடீர் புளியோதரை’ கணக்கில் பிரபலமாகும் சினிமா நடிகர்களுக்கு போட்டியாக திடீர் கோவில்களும் உண்டு.  அப்படித்தான் காஞ்சிபுரத்தில் வழக்கு தீர்த்த ஈசன் என்றழைக்கப்படும் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் தமிழக பக்தர்களின் திடீர் புன்ணியஸ்தலமாகிவிட்டது. பொறுக்கி பாடல் பாடிய நடிகர் சிம்பு தனது பொறுக்கித்தனத்தை மெயின்டைன் செய்ய உதவி கேட்டது மேற்படி புண்ணியஸ்தலத்தல்தான். ஆம் இங்கேதான் எல்லா பக்தர்களின் பிரச்சினைகளும் அவர்கள் கிரிமினல்களாகவே இருந்தாலும் தீர்க்கப்படுகிறது என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
திருமுறைப் பாடல் பெற்ற சைவ திருக்கோவில்கள் 1028, மங்கள சாசனம் பெற்ற வைணவ 168 கோவில்கள் நிறைந்துள்ள காஞ்சியில் பீப் பாடலால் புகழ் பெற்று தன்னிகரற்ற ஸ்தலமாக திகழ்கிறது இந்த புண்ணியஸ்தலம்.
தமிழகத்தின் வரலாறு காணாத வெள்ளத்தை அடித்து சென்ற இந்த பொறுக்கி பாடலின் நாயகனை பெற்றெடுத்த டி.ராஜேந்தரின் காலடி பட்டு தமிழகத்தின் திடீர் கதாநாயகானாக வலம் வருகிறார் வழக்கறுத்தீஸ்வரர்.
அந்த புன்ணிய ஸ்தலத்திற்குள் நாமும் காலடி எடுத்து வைத்தோம். அந்த முகூர்த்த நேரத்தில் கண்டு கேட்ட காட்சிகளை வினவு வாசகர்களுக்கு தருகிறோம்.

காஞ்சிபுரம் நகரின் மையத்தில் மூங்கில் மண்டபத்திற்கு அருகில் பிரதான காந்தி சாலையின் தென்புறத்தில் அமைந்துள்ளது இக்கோவில். இப்போது புதிதாக கோபுரம் கட்டும் பணிகள் நடந்துவருகின்றன. அக்கோவிலின் அமைப்பை பொறுத்தவரை காஞ்சிபுரத்தின் தொன்மை மிக்க கோவில்களின் தோற்றத்திற்கு எவ்விதத்திலும் ஈடுகொடுக்காமல் வழிப்போக்கர்களின் பழங்கால சத்திரம் போல் பராமரிப்பின்றி உள்ளது.
அதில் கருவறை என்ற  10 அடி அறையில் லிங்கமும், வேலைப்பாடற்ற சில சிலைகளும் உள்ளன. கோவிலின் ஒரு பிரதான இடத்தில் பக்தர்களுக்கு அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மூதாட்டியிடம் பேச்சு கொடுத்தோம்.
ellammaal
எல்லம்மாள் – விளக்கு தயாரிப்பவர்
70 வயதுக்கு மேற்பட்ட எல்லம்மாள்,                         “ காஞ்சிபுரத்திற்கு பக்கத்தில் இருக்கும் தாமல் தான் சொந்த ஊர். புருசன் இல்லை . பசங்க கூலி வேலை செய்கிறார்கள். என்னை கவனிக்கவில்லை. வீட்டைவிட்டு துரத்தி விட்டார்கள். ஐந்து வருடமாக இந்த வேலையை செய்கிறேன். சரியாக கண் தெரியவில்லை. படுக்க இடம் இல்லை. போக வர பஸ்சுக்கு 30 ரூபாய் ஆகிறது. என்ன செய்வது. கோவில் வேலை செய்கிறோம் தினமும் குளித்து சுத்தபத்தமாக இருக்கனுமில்லையா. அதனால் தினமும் ஊருக்கு சென்று வருவேன். காலையில் 7 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினால் இரவு வீட்டிற்கு செல்வதற்கு 9 மணி ஆகிரும். உடம்பு முடியல. வயிறு இருக்குதுல். தினமும் கூலியாக 130 ரூபாய் தருகிறார்கள். டீ க்காசு 20 ரூபாய் தருவார்கள். அதில் தான் காலையில் இட்லி வாங்கி சாப்பிடுவேன். மதியம் கோவில் அன்னதானம் தான் சாப்பாடு. இப்படி தான் என் பொழப்பு தினமும் போகுது” என்றார் சலிப்புடன்.
இங்கு பக்தர்கள் காசு கொடுத்து வாங்கி தீபம் போட்ட அகல் விளக்குகளை திரும்பவும் எடுத்து கழுவி எண்ணெய் ஊற்றி விற்கிறார்கள். ஒரு அகல் 5 ரூபாய். நெய்விளக்கு, பூ, பழம், முறுக்கு, அடை, பிரசாதம் அனைத்தையும் பார்ப்பனர்களே காண்டிராக்ட் எடுத்து நிர்வகிக்கிறார்கள். நாள் ஒன்றுக்கு 100 அகல் விளக்குகளை கொண்டு பத்து டிரேக்களை தினமும் தயாரிக்கிறார் இமூதாட்டி. பணக்கார முதலாளிகள் – நடிகர்கள் – கிரிமினல்களின் கஷ்டங்களை அதாவது தில்லு முல்லுக்களை தீர்க்கும் வழக்கு ஈஸ்வரன் இத்தகைய ஏழை மூதாட்டிகளின் துன்பங்களை போக்குவதில்லை போலும். போக்காவிட்டாலும் பரவாயில்லை, போக்க வரும் பக்தர்களின் சடங்கிற்காக விளக்கு குவளையை கழுவி கழுவியே அவரது கைகள் புண்ணாகிவிட்டன.
அக்கோவிலின் சாமந்திபூ வில்வ இலைகள், மற்றும் பக்தர்களின் கோரிக்கை விண்ணப்பங்களை விற்கும் 50 வயது முனிரத்தினம் ” பட்டு நெசவு நொடிந்து போனதால் இங்கு ஐந்து வருசத்திற்கு மேல வேலை செய்கிறேன். எனக்கு தினமும் 150 ரூபாய் கூலி கொடுக்கிறார்கள். எங்கேயோ இருந்து வருபர்களுக்கு பிரச்சனை தீருகிறது என்கிறாரக்ள் என் பிரச்சனையை தான் ஆண்டவன் கண்டு கொள்ளவில்லை. இரண்டு பசங்களை எப்படி கரையேத்த போறேனு தெரியலை” என்று வியாபாரத்தில் மூழ்கினார். விண்ணப்பங்களை விற்கும் குமாஸ்தாவிற்கே நீதிபதியின் மேல் கடுகளவும் மரியாதை இல்லை என்பது வழக்கறுத்தீஸ்வரரை நாடி வரும் பக்தர்களுக்கு தெரியுமா?
loganathan-bank
லோகநாதன்
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தினமும் தவறாமல் கோவிலுக்கு வரும் லோகநாதன் ” ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். அவரிடம் பேசினோம்.
“இக்கோவிலின் தரிசித்து படியிறங்கிய மறுகணமே பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும். இப்போது டி.ஆர் சிம்பு பாடல் வழக்கிலும் இப்படிதான் விமோசனம கிடைத்ததாக சொல்கிறார்கள்.”
நீங்கள் மட்டும் 20 ஆண்டுகளாக தினமும் வருகிறீர்களே. உங்கள் கோரிக்கை அதைவிட பெரிதா?”
“சார். தினமும் நான் சாமியை கையெடுத்து கும்பிடுவது போல தான் தெரியும். ஆனா தெனமும் நான் சாமியை திட்டிவிட்டுதான் போவேன். திருட்டு தொழில் பன்றவன், குறுக்கு வழியில் போகிறவன் எல்லோரும் நம்பிக்கையா கும்பிட்டுவிட்டு போகிறானே அவர்களை தண்டிக்க மாட்டியா என்று திட்டுவேன் சார். ஒ.பி. பன்னீர் செல்வம், நளினி சிதம்பரம், நடிகை மஞ்சுளா, திமுக ராஜாத்திஅம்மாள், செல்வி, முதல்வர் ஜெயலலிதா, மியூசிக் டைரக்டர் அனிருதோட அப்பா அம்மா, இது இல்லாத தெலுங்கு, கன்னடம் என பல வி.ஐ.பிகள் அவ்ளோ பேரும் இங்க வந்த பிறகுதான் தண்டனையிலிருந்து மீண்டதாக சொல்கிறார்கள். நாட்டில் தான் என்னமோ நடக்குதுனு பாத்தா கோவில்லயும் அதுதான் நடக்குது. பக்தர்களை யார் சார் மதிக்குறாங்க. அர்ச்சகர்கிட்ட நீங்க வெறும் கைய நீட்டுங்க. வேண்டா வெறுப்ப திருநீரை கையில் தூக்கி போடுவார். தட்டில் தட்சணை வைப்பவர்களுக்கு மட்டும் ஒரு பூவை சேர்த்து போடுவார். தட்சணை பெருசா கொடுத்தா பூவும் பெருசா வரும். ஆயிரக்கணக்கில் தட்சணை போட்ட சாமி கழுத்திலிருக்கு மாலை உங்க கழுத்திற்கு வந்துரும். இது பொய்யில்ல சார். எல்லார் கண் முன்னேயும் தான் நடக்கிறது” என்று பெருமூச்சு விட்டார்.
அடுத்து நாம் அர்ச்சகர் முன் பவ்வியமாக நின்றோம். என்ன என்று கண்ணாலேயே கேட்டார்.
“சென்னையிலிருந்து வருகிறோம். இக்கோவிலை பற்றி அங்கு பெரும் பேச்சாக இருக்கிறது. எங்களுக்கு சில பிரச்சினைகள் 1இருக்கிறது. அதற்கு நீங்கள் தான் பரிகாரம் செய்ய வேண்டும்”என்று கையிலிருந்த 100 ரூபாயை கொடுத்து கப்பித்தனமாக (வேறு வழியில்லை) 50 ரூபாய் திருப்பி தரும்படி கூறினோம். அவரும் மூலவருக்கு அருகே இருந்த கல்லாப் பெட்டியிலிருந்து 50 ரூபாயைத் திருப்பி கொடுத்தார்.
“குறைந்த பட்சம் யாகத்திற்கு ரூபாய் 8000 செலவாகும். பிரச்சனைக்கேற்ப யாக சாமான்கள் மாறும். எங்களுக்கு தரும் தட்சணை அதில் சேராது. அது உங்கள் விருப்பம்” என்றார். கடந்த காலத்தில் அங்கு வந்த வி.ஐ.பிகள் பற்றியும் அவர்கள் யாகத்தை முடித்துவிட்டு கோவில் படி இறங்கும் முன்னரே பிரச்சனைகள் பனி போல் விலகியது பற்றி பரவசமாக கூறினார்.
“இதை பார்த்து என்னுடைய ஆட்களே(சக பார்ப்பனர்கள்) எங்களுக்கு தெரியாத எந்த மந்திரம்டா ஆண்டவனிடம் சொல்கிறாய் என்று நச்சரிக்கிறார்கள். அதெப்படி நான் சொல்லுவேன். அது அவருக்கும் நமக்கு இருக்கும் பந்தம். அவருடைய கருவி மட்டும்தான் நான். என்னக்கென்று எந்த பெருமையும் இல்லை. வாங்கோ கண்டிப்பா கஷ்டங்கள் தீரும் ” என்று நம்மை வழியனுப்ப பார்த்தார். நாம் மீண்டும் எங்கள் நண்பர்கள் கோவிலுக்கு வராமலேயே பிரச்சனையை தீர்க்க வழியிருக்கிறதா என்று அடக்கமாக வினவினோம்.
” பேஷா. பணம் அனுப்பி பிரச்சனயை அப்பிளிகேசனா எழுதி ஸ்டாம்ப் ஒட்டி கவர் கொடுத்துட்டா முறையா கூரியர்ல பிரசாதம் அனுப்பிவிடுவோம்” என்றார்.
சரி ஒரே வழக்கில் தொடர்புடைய வாதி, பிரதிவாதி இருவரும் வந்தால் ஈஸ்வரன் யாருக்கு உதவுவார்? ஒருவேளை தமிழகத்தில் கட்டப்பஞ்சாயத்துக்களை கமிஷன் அடிப்படையில் ‘நியாயமாக’ தீர்க்கும் தாதாக்களை போன்று கூட ஈஸ்வரன் மாறியிருக்கலாம்.
munirathanam
முனிரத்தினம்
கோவிலுக்கு வெளியே கோவில் கடைகளை வாடகைக்கு எடுத்து வியாபரம் செய்யும் கடைக்காரகளிடம் பேச்சு கொடுத்தோம்.  “உங்களுக்கு என்ன. வியாபரம் பிச்சிகினு போகும்” என்ற போது, பதிலுக்கு நீங்கள் யார் என்று விசித்திரமாக பார்த்துவிட்டு ” ஊருக்கு புதுசா நீங்க. வாங்க தண்டலை(தின கடன்) தவறாம கட்டமுடியல. ஒரு வியாபாரமும் இல்ல. நெய் விளக்கு மட்டுமில்ல பூ பழமும் அவனே உள்ள வித்துறான். இங்க கடவுள பாக்க வர்றவனெல்லாம காரில சர் புர்னு வந்துட்டு போயிறான். அவங்கள பாத்து ஈ ஒட்டினு இருக்கிறோம் என்றார்கள்” சோகமாக.
“டி.ஆர் வந்தார் அவருடைய ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வந்திருப்பார்கள். பெரிய ஆளுங்கனா படையோடு தானே வருவார்கள்” என்றோம். அவர் நம்மை முறைத்து விட்டு “அவனுங்க திருடன் மாதிரி வந்துட்டு திருடன் மாதிரி போயிறாங்க. அவனுங்க வரப்போறேனு போஸ்டர் ஒட்டிட்டா வர்ரானுங்க. ஏதோ திருட்டுதனம் பண்ணிட்டுதான் இங்க தீர்த்துக்கிறதுக்கு வரரான்னுங்க. இங்க இருக்குற ஐயரும் மானங்கெட்டவனுங்க. நீ பதினாறு வாட்டி வா . நீ முப்பத்திரண்டு வாட்டி வானு பீதியூட்டி பணத்தை புடுங்குறாங்க. அந்த வி.ஐ.பி வந்தான் இவன் வந்தான் என இவர்கள் வாயாலேயே போஸ்டர் ஒட்டி திருடர்களை ஒரே இடத்தில் சேர்த்துவைத்து அவர்களிடமிருந்து பிடுங்கிக் கொள்கிறார்கள். ஆனா… இந்த வருடத்திற்கு முன்னாடி இந்த கோயில் சீந்துவாரில்லாமல் இருந்தது. அப்போ வருசத்திற்கு ஒரு திருவிழா நடக்கும். டிசம்பர் மாத ஆருத்திர திருவிழா.
திருட்டு போன உண்டியல்
திருட்டு போன உண்டியல்
அதற்கு இங்கிருக்கும் சாமியை தூக்கி வலம் வரக்கூட ஒருத்தன் இருக்கமாட்டான். நீ தூக்கு நான் தூக்கு என்று ஏலம் போடுவார்கள். இப்போ வி.ஐ.பி- கள் மொய்ப்பதை பார்த்துவிட்டு கோவில் குளத்தை கட்டுகிறேன், கோபுரத்தை கட்டுகிறேன் என்று கோடி கோடியாக வசூலை ஆரம்பித்துவிட்டார்கள். எங்கே போய் நிற்குமினு தெரியல். ஏற்கனவே 2012-ல் இந்த கோயில் உண்டியலை உடைத்துவிட்டார்கள். யாரு உடைச்சாங்கனு அந்த கேசே இன்னும் தீரலை. இந்த லட்சணத்தில் ஊருல இருக்கிற கேசை எல்லாம் இவரு தீர்த்துவைக்கிறாருனு சொல்றானுங்க என்று கூறினார்” விரக்தியாக.
தமிழகத்தில் இத்தகைய மூட நம்பிக்கைகளை முன்வைத்து கிளம்பும் கோவில்களை பெரும் பணக்காரர்களே புதிது புதிதாக உருவாக்குகிறார்கள். அப்படி உருவாக்கும் போக்கில் அதற்கென்ற புராண கட்டுக்கதைகள் இட்டு நிரப்பப்படுகின்றன. ஜெயா – சசி கும்பல் ஆட்சிக் காலத்தில் அவர்கள் செய்த பெரும் யாகங்கள் மூலம் பல கோவில்களின் சக்தி கிசுகிசுவாக உருவாக்கப்பட்டது.  மேட்டுக்குடி குற்றவாளிகள் தமது திருட்டுத்தனத்தை சட்டப்படியே சரிக்கட்டினாலும் ஒன்றிரண்டு தப்பிவிட்டால் என்ன செய்வதென்று இத்தகைய சடங்கு சம்பிரதயாங்களுக்கு இலட்சக் கணக்கில் செலவழிக்கிறார்கள். தி.மு.க-வின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த டி.ஆர்.ராஜேந்தர் போன்ற முட்டாள்களே இங்கு வந்து சென்றால் பிரச்சினைகள் தீரும் என்று நினைக்கிறார்கள். அதற்கு மக்களை முட்டாள்களாக கருதி தமது இமேஜை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற புத்திசாலித்தனம்தான் காரணம்.
மக்கள் புத்திசாலிகளாக மாறும் போது வழக்கறுத்தீஸ்வரன்களின்  பார்ப்பன பவர் பறிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.
– வினவு செய்தியாளர்.

கருத்துகள் இல்லை: