செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

மாநிலத் தகவல் ஆணையமா? அண்ணா தி.மு.க. அறக்கட்டளையா? வைகோ கேள்வி!

மத்திய, மாநில அரசுத் துறைகளில் வெளிப்படையான செயல்பாட்டை வளர்க்கவும், அரசுப் பணியாளர்களின் பொறுப்புடைமையை உறுதிப்படுத்தவும், ஊழலற்ற சமூக அமைப்பு உருவாக வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடனும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் (2005) கொண்டு வரப்பட்டது.பொதுமக்களுக்குத் தகவல் வழங்கும் பணிகளைக் கவனிக்க, தன்னாட்சி அதிகாரம் கொண்ட மத்தியத் தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில் தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்களாகப் பொறுப்பு வகிப்பவர்களுக்கான தகுதிகளையும், தகவல் பெறும் உரிமைச்சட்டம் வரையறுத்து இருக்கின்றது.
அதன்படி, பொதுவாழ்வில் உயர்ந்த நிலையில் இருப்பவராகவும், சட்டத்தில் பரந்துபட்ட அறிவு பெற்றவராக, சமூக சேவை, அறிவியல் தொழில்நுட்பம், நிர்வாகம், இதழியல், மக்கள் தொடர்பு போன்ற துறைகளில் அனுபவம் வாய்ந்தவராகவும் ஆணையர்கள் இருக்க வேண்டும். மக்களுக்கான தகவல்களை வழங்குவதில் முழு அர்ப்பணிப்புக் கொண்டவராக இருக்க வேண்டும். நாடாளுமன்ற, சட்டமன்ற  உறுப்பினர்கள், வேறு வருவாய் தரக்கூடிய பணிகளில் இருப்பவர்கள், அரசியல் கட்சி சார்புடையோர், ஆணையர்களாகப் பொறுப்பு வகிக்க முடியாது.

இவ்வாறு நியமிக்கப்படுகின்ற ஆணையர்கள் செயல்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் இச்சட்டத்தில் வரையறுத்துக் கூறப்பட்டுள்ளன. 

இச்சட்டத்தில் மத்தியத் தகவல் பெறும் ஆணையத்திற்கு வரையறை செய்யப்பட்டுள்ள தகுதிப்பாடுகள் அனைத்தும் மாநிலத் தகவல் ஆணையத்திற்கும் பொருந்தும். மாநிலத் தகவல் ஆணையம், எந்தத் தலையீடும் இல்லாத தன்னாட்சி அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

மாநிலத் தகவல் ஆணையத் தலைவர் மற்றும் பத்துக்கு மேற்படாத தகவல் ஆணையர்கள், முதலமைச்சர் தலைமையிலான குழுவின் பரிந்துரையின் பேரில் மாநில ஆளுநரால் நியமிக்கப்படுவர். ஆணையர்களைத் தேர்ந்து எடுக்கும் குழுவில், பேரவை எதிர்க்கட்சித் தலைவர், முதல் அமைச்சரால் முன்மொழியப்படும் மாநில அமைச்சர் உள்ளிட்டோர் இடம் பெற்று இருப்பர் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் கூறுகிறது.

ஆனால், ஜெயலலிதா அரசு தகவல் பெறும் உரிமைச் சட்ட விதிகளைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, ஏதோ அண்ணா தி.மு.க கட்சியின் அறக்கட்டளைக்கு நியமனம் செய்வதைப் போல மாநிலத் தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்களை நியமனம் செய்து இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

காவல்துறையின் உளவுத்துறையில் நீண்ட காலம் பணிஆற்றி ரகசியங்களைப் பாதுகாத்து, காவல்துறைத் தலைவர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும்  ஜெயலலிதா அரசுக்கு ஆலோசகராகப் பணிபுரிந்தவரையும், ஜெயலலிதா மற்றும் சசிகலா வருமானவரி குறித்த வழக்குகளில் அவர்களை விடுவித்துத் தீர்ப்பு அளித்த ஒருவரையும், ஆளும் கட்சியின் வழக்கறிஞர் அணியில் பொறுப்பு வகிக்கும் ஒருவரையும் ஆணையர்களாக நியமனம் செய்து இருக்கின்றார்கள். ஜனநாயக சட்ட நெறிமுறைகளைக் குழிதோண்டிப் புதைத்து விட்டார்கள்.   

எனவே, தகவல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த, மாநிலத் தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர் நியமனத்தை ஜெயலலிதா அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். 

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி விதிமுறைகளைப் பின்பற்றியே மாநிலத் தகவல் ஆணையர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன் nakkheeran,in 

கருத்துகள் இல்லை: