செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

மோடி ஜெயாவிடம் பிரதமராக செல்லவில்லை கார்ப்பரேட்டுகளின் கைக்கூலியாக சென்றிருக்கிறார்!

13319PAug---07---E-bigsavukkuonline.com :தமிழகத்தைப் போல அவலச்சூழல் வேறு எங்காவது நிலவுமா என்பது சந்தேகமே.   அத்தனை அவலங்களும் தங்கு தடையின்றி தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு நிலுவையில் உள்ளது.  இந்த சூழலில் ஒரு தவறான தீர்ப்பின் மூலம் முதல்வராயிருக்கும் ஒருவரை, சந்திப்பது எத்தகைய ஒரு செய்தியை சமூகத்துக்கு சொல்லும் என்று எவ்விதமான தயக்கமும் இன்றி, ஜெயலலிதாவை நேரில் வந்து சந்தித்து சென்றிருக்கிறார் மோடி.   பிரதமர் பதவி எத்தகைய மதிப்பு வாய்ந்தது, ஒரு முன்னாள் கைதியின் வீட்டுக்கு சென்று அவரை பார்க்கலாமா கூடாதா என்பதெல்லாம் மோடிக்கு நன்றாகவே தெரியும்.   ஆனால் இதையெல்லாம் மீறி ஜெயலலிதாவை பார்க்க மோடி சென்றதன் முக்கிய காரணம், அவர் அங்கே பிரதமராக செல்லவில்லை, கார்ப்பரேட்டுகளின் கைக்கூலியாக சென்றிருக்கிறார் என்பதே.
  நில ஆர்ஜித மசோதா, மற்றும் பொது சேவை வரி போன்றவற்றில் ஜெயலலிதாவின் ஆதரவு மிக மிக அவசியம் என்பதை நன்கு உணர்ந்தே அவர் வீட்டுக்கு சென்றிருக்கிறார் மோடி.ஜெயலலிதாவின் எம்.பிக்களை மட்டுமே நம்பி 13 மாதம் ஆட்சி நடத்திய வாஜ்பாய் கூட ஜெயலலிதாவின் வீட்டுக்கு வரும் தவறை செய்தது கிடையாது. ஆனால், கொஞ்சம் கூட சுணக்கமின்றி ஜெயலலிதா வீட்டுக்கு வந்து விருந்துண்டு சென்றிருக்கிறார் மோடி.
ஜெயலலிதாவைப் பொறுத்தவரை, இரண்டு பிரதமர்களை தன் வீட்டுக்கு வரவழைத்த பெருமையுடையவர் என்ற சிறப்பை பெறுகிறார்.  முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் அரசாங்கம், ஜெயலலிதாவின் எம்.பிக்களை நம்பி இருந்தது.  அப்போது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமே என்ற கட்டாயத்தில் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்டத்தில் வந்து பார்த்தார்.    அடுத்த சில நாட்களிலேயே, திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.   ஜெயலலிதாவின் வீடு தேடி வருபவர்களை இப்படி மிரட்டுவதுதான் அவரது வழக்கம்.    இதே போல நாடாளுமன்ற அவையில் ஆதரவு கேட்டு இப்போது வந்திருக்கும் மோடியிடமும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து விவாதித்திருக்க மாட்டார் என்பதை நம்ப முடியவில்லை.  நிச்சயமாக மாறன் சகோதரர்கள் குறித்தும், நிலுவையில் உள்ள வழக்கு குறித்தும் விவாதித்திருப்பார்.   அந்த 12 அம்ச கோரிக்கை மனுவெல்லாம், ஊருக்கான நாடகம்.
அடுத்ததாக அரங்கேறியுள்ள அவலம், தமிழக தகவல் உரிமை ஆணையர்கள் மற்றும் தலைமை ஆணையர்கள் நியமனம்.   ஒரு மனிதனுக்கு அரசியல்வாதியை விட மோசமாக பதவி ஆசை இப்படியா வரும் என்று வியக்க வைத்துள்ளவர் முன்னாள் டிஜிபி ராமானுஜம்.    பல ஐபிஎஸ் அதிகாரிகளின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டு, தனது 60வது வயதில் பணி நீட்டிப்பு பெற்று டிஜிபியானார்.  அது போதாதென்று, ஆலோசகர் பதவி.    தற்போது, 63வது வயதில், தலைமைத் தகவல் ஆணையராகியிருக்கிறார்.
யார் தகவல் ஆணையராக நியமிக்கப்படலாம் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் கூறுகிறது.  Persons of eminence in public life with wide knowledge and experience in law, science and technology, social service, management, journalism, mass media or administration and governance. ஆனால் இப்படி பல்வேறு துறைகளில் இருந்து தேர்ந்தெடுக்கலாம் என்பதை சற்றும் கருத்தில் கொள்ளாமல், இரு அரசுகளுமே, ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கான புகலிடமாக தகவல் ஆணையத்தை கருதி வருகின்றன.
இந்த தவறை தொடங்கி வைத்தவர் திமுக தலைவர் கருணாநிதிதான்.   திமுக ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்த கே.எஸ்.ஸ்ரீபதி ஐஏஎஸ்ஸை, அவருக்காகவே ஒதுக்கி வைத்தது போல, தலைமைத் தகவல் ஆணையராக நியமித்தார் கருணாநிதி.  ஸ்ரீபதிக்கான கோப்பு ஒன்றிரண்டு நாட்களிலேயே வேக வேகமாக பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது.  தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்று ஒரு நாள் கூட வீட்டில் இல்லாமல், இந்தப் பதவியை ஏற்றார் ஸ்ரீபதி.   அதே போலத்தான் தற்போது ராமானுஜத்தின் நியமனமும் நடைபெற்றுள்ளது.  ராமானுஜம் தன் சர்வீஸ் முழுவதும், உளவுத்துறையில் பணியாற்றியவர்.   ரகசியம் காப்பதையே தொழிலாக வைத்திருந்தவர்.  அப்படிப்பட்ட ஒரு நபரை, தலைமைத் தகவல் ஆணையராக நியமித்ததன் மூலம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்க தமிழக அரசு எத்தகைய மரியாதையைத் தருகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
13313PAug-09---F-big
ராமானுஜமும் வெட்கமேயில்லாமல் இந்தப் பதவியை ஏற்றுக் கொண்டுள்ளார்.   ராமானுஜம் போன்ற அதிகாரிகள், கையால் லஞ்சம் வாங்கினால் மட்டும்தான் ஊழல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அடுத்தவருக்கு கிடைக்க வேண்டிய பதவியை அடித்துப் பறித்து, அதில் சொகுசு காண்பதென்பது கையால் லஞ்சம் வாங்குவதை விட கேவலமானது, மோசமானது.    ராமானுஜத்தை விட, லஞ்சப் பெருச்சாளிகள் எவ்வளவோ மேல்.   ராமானுஜத்தோடு பேசும் அதிகாரிகள் அவரை எப்படி வெறுக்கிறார்கள் என்பதை ராமானுஜம் இன்னும் அறிந்திருக்க மாட்டார்.    அவரை எந்த அளவுக்கு வெறுக்கிறார்கள் என்றால், அதிமுக அரசின் ஜாபர் சேட் என்று அவரை கூறும் அளவுக்கு சக அதிகாரிகளால் வெறுக்கப்படுகிறார் ராமானுஜம். ஆனால் ராமானுஜம் இது குறித்து துளியும் கவலைப்படவில்லை.  இந்த பதவிக்காக நீங்கள் விண்ணப்பித்தீர்களா என்றால் ஆம் என்று பதிலளித்துள்ளார் ராமானுஜம் இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்துள்ள பேட்டியில்.    எடுத்த எடுப்பிலேயே, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பலர் தேவையற்ற தகவல்களை கேட்பதாக கூறி, அவர் எப்படிப்பட்ட ஆணையராக இருக்கப் போகிறார் என்பதை வெளிப்படுத்தி விட்டார்.
அடுத்ததாக தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள தட்சிணாமூர்த்தியின் நியமனம் இன்னும் மோசம்.  ஜெயலலிதாவும் சசிகலாவும் வருமான வரி கணக்கு உரிய நேரத்தில் செலுத்தவில்லை என்று வருமானவரித் துறை வழக்கு பதிவு செய்திருந்தது.  அந்த வழக்கில், அபராதம் செலுத்தி விடுகிறோம், ஆகையால் மேற்கொண்டு விசாரணை நடத்தத் தேவையில்லை என்று உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர்.  அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிக்ரி மற்றும் கேஎஸ்.ராதாகிருஷ்ணன், அபராதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது, ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் வழக்கை சந்தித்தே ஆக வேண்டும் என்றும், இந்த வழக்கு நான்கு மாத காலத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.   ஆனால் உச்சநீதிமன்றமே உத்தரவிட்ட பின்னரும், இந்த வழக்கில் எவ்விதமான முன்னேற்றமும் காணப்படாமல், இதிலும் வாய்தா மேல் வாய்தா வாங்கினர் ஊழல் சகோதரிகள்.    இந்த வழக்கில் இருவரையும் ஆஜராக உத்தரவிட வேண்டிய தட்சிணாமூர்த்தி, வாய்தாக்களை வாரி வழங்கிக் கொண்டிருந்தார்.  மத்திய அரசின் வழக்கறிஞர், இந்த வழக்கை நடத்த வேண்டும் என்று கடுமையாக முறையிட்டும் கூட, தொடர்ந்து இந்த வழக்கை தாமதம் செய்தார் தட்சிணாமூர்த்தி.    இறுதியில் மத்திய அரசோடு உடன்படிக்கை ஏற்பட்டு, வருமான வரித்துறை நாங்கள் அபராதத்தை ஏற்றுக் கொள்கிறோம் என்று ஏற்கனவே வெளியான உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு நேர் எதிராக நிலைபாடு எடுத்ததும் இதற்காகவே காத்திருந்தது போல, வழக்கை பைசல் செய்தார் தட்சிணாமூர்த்தி.  இதற்காகத்தான் இவருக்கு இந்த தகவல் ஆணையர் பதவி.  இந்த நியமனம் குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி
“ஜெயலலிதா மற்றும் சசிகலா பங்குதாரர்களாக இருந்த சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் வருமான வரி கணக்குகளை 1991-92 மற்றும் 1992-93ஆம் ஆண்டுகளில் தாக்கல் செய்ய வில்லை.
1993-94ஆம் ஆண்டுக்கு ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் தனிப் பட்ட வருமானங்களுக்கான ஆவணங்களையும் வருமான வரித் துறையிடம் அவர்கள் தாக்கல் செய்யவில்லை. இதற்காக அவர்கள் மீது 1996இல் வருமான வரித் துறையினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு எழும்பூர் நீதி மன்ற வளாகத்தில் உள்ள முதலாவது பொருளாதார குற்றப் பிரிவு நீதி மன்றத்தில் கடந்த 15 ஆண்டுகளாக துhங்கிக் கொண்டிருந்தது. 30-6-2014 அன்று ஜெயலலிதா, சசிகலா மற்றும் சசி எண்டர்பிரைசஸ் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வருமான வரி தாக்கல் செய்யாதது தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு வருமான வரித் துறையிடம் ஒரு மனு தாக்கல் செய்துள்ளதாகவும், எனவே இந்த விசாரணையைத் தள்ளி வைக்க வேண்டுமென்றும் கோரினார்கள். இந்த வழக்கிலே தான் நீதிபதி தெட்சணாமூர்த்தி அவர்கள் – 19 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்குகளில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி ஜெயலலிதா தரப்பினர் தாக்கல் செய்த மனுவினை ஏற்று, வழக்குகளில் இருந்து அவர்களை விடுவித்து உத்தரவிட்டார். இந்தச் செய்தி அப்போதே நாளேடுகளில் எல்லாம் விரிவாக வந்தது.
அவ்வாறு வருமான வரி வழக்கிலிருந்து ஜெயலலிதா தரப்பினரை விடுவித்த நீதிபதி தெட்சணாமூர்த்திக்குத் தான் தற்போது தகவல் ஆணையர் பதவி வழங்கப்பட்டு, அவர் பதவிப் பொறுப்பினை ஏற்றிருக்கிறார். தற்போது பூனை வெளி வந்து விட்டது என்பது புரிகிறதா? இல்லையா? வருமான வரி வழக்கிலிருந்து ஜெயலலிதா எப்படி விடுவிக்கப்பட்டார் என்பதன் பின்னணி நிரூபணமாகி விட்டதா இல்லையா? இதற்கு மேலும் தற்போதைய நியமனம் பற்றிச் சான்றுகள் வேண்டுமா என்ன? ” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தட்சிணாமூர்த்தியின் நியமனம், ஜெயலலிதா மக்களைப் பார்த்து, “என்னடா செய்ய முடியும் உங்களால் ?” என்று வெளிப்படையாக சவால் விடுவதாகவே உள்ளது.   இந்த நியமனங்களை எதிர்த்து பொதுநல வழக்கு தொடர்ந்தால் கூட, அந்த வழக்கு முடிவதற்குள், ராமானுஜம் ஓய்வு பெற்று, அடுத்த அரசுப் பதவிக்கு சென்று விடுவார்.   அந்த அளவு வேகமாக நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.
மூன்றாவது நபரான வழக்கறிஞர் முருகன் இன்னும் மோசம்.  அதிமுக சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்.  அதில் தோல்வியடைந்ததால், தற்போது இந்தப் பதவி. அரசு வழக்கறிஞராக இருந்த ஒரு அதிமுக வழக்கறிஞருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் என்ன புரிதல் இருக்க முடியும் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன்.
இவ்வளவு துணிச்சலோடு விதிகளையும், சட்டத்தையும் காற்றில் பறக்க விட்டு, தான்தோன்றித்தனமாக ஜெயலலிதா சட்டவிரோதமான நியமனங்களை செய்வதன் பின்னணி என்ன ?   ஊரையே முட்டாளாக்கும் ஒரு கணக்குப் பிழையின் அடிப்படையில் விடுதலையாகி, நான் நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறேன், என்னைப் பார்க்க பிரதமர் வருகிறார்….   யார் என்னை என்ன செய்து விட முடியும் என் இறுமாப்பாகத்தானே இருக்க முடியும் ?   இந்த வழக்கு மேல் முறையீட்டு சமயத்தில் உச்சநீதிமன்றத்தி விசாரணைக்கு வருகையிலாவது தடை விதிக்கப்பட்டிருக்க வேண்டும். அதுவும் கிடையாது.  அப்பட்டமாக அனைவரின் கண்ணுக்கும் தெரிந்த ஒரு பிழையின் அடிப்படையில் முதல்வராயிருக்கும் ஜெயலலிதாவுக்கு நீதிமன்றத்தின் மூலம் படிப்பினை கிடைக்காது.   ஜெயலலிதாவுக்கான தண்டனை மக்கள் மன்றதில் வழங்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.
சொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல் இருப்போர்க்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும்.

இங்கே அமைச்சர்கள் அடிமைகளாக இருப்பதால், தமிழகத்தை யாரும் காப்பாற்ற முடியாது.

கருத்துகள் இல்லை: