"திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்" என்ற கருணாநிதியின் அறிக்கை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மாநிலத்தின் 20% வருமானத்துக்கு வழி செய்யும் டாஸ்மாக்குக்கு மூடுவிழா காண்பது சாத்தியமா என்பது குறித்து பொதுநிதி நிபுணர்கள் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.
மதுவிற்பனையும் வருமானமும்:
கடந்த 2003-04 காலகட்டத்தில் மது விற்பனையால் ஈட்டப்பட்ட வருமானம் ரூ.3,639 கோடி. 2010-11 காலகட்டதில் ரூ.14,965 கோடி, 2011-12 ரூ.18,081 கோடி, 2012-13 ரூ.21,680 கோடி, 2013-14 ரூ.21,641 கோடியாகும். நம்பியார் பாணியில்: சாய்ஸ் இஸ் யூவர்ஸ் !
மது விற்பனையால் ஈட்டப்படும் வருமானம் குறித்து நிதித்துறையில் உள்ள அதிகாரி ஒருவர் கூறும்போது, "ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.25,000 கோடி இழப்பை தமிழக அரசால் எப்படி சமாளிக்க முடியும்? 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடிகளுக்கு மேல் இழப்பு ஏற்பட்டுவிடும். இது ஈடு செய்ய முடியாது இழப்பு" என்றார்.
மற்றொரு அதிகாரி கூறும்போது, "மதுவிலக்கை பகுதியாக அரசு அமல்படுத்துகிறது என வைத்துக் கொள்வோம். எத்தனை கடைகளை அரசு மூடும். அதனால் ஏற்படும் இழப்பு எப்படி சமன் செய்யப்படும் என்பது கேள்விக்குறி. ஏனெனில் அரசு உணவு மானியத்திலோ, மின் மானியத்திலோ அல்லது சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களிலோ யாரும் கை வைக்கமுடியாது. ஆனால், இலவசங்கள் நிறுத்தப்படலாம். அவ்வாறாக இலவசங்களை நிறுத்தினால் கூட ரூ.4,000 கோடி முதல் ரூ.5,000 கோடி வரையே ஈடுகட்ட முடியும்" என்றார்.
தமிழக அரசின் முக்கிய திட்டங்கள்:
மின்சார மானியம் ரூ.5400 கோடி, உணவுப் பாதுகாப்பு மானியம் ரூ.5,300 கோடி, சமூக பாதுகாப்பு மானியம் ரூ.4,200 கோடி, மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளுக்கான மானியம் ரூ.2,000 கோடி, தமிழக உட்கட்டுமான மேம்பாட்டுக்கான நிதி ரூ.2,000 கோடி, சூரிய மின் சக்தி வீடுகளுக்கான நிதி ரூ.1260 கோடி, கூட்டு சாலை மேம்பாட்டு திட்டத்துக்கான நிதி ரூ.2,800 கோடி, சத்துணவு திட்டத்துக்கான நிதி ரூ. 1413 கோடி, ஒருங்கிணைக்கப்பட்ட குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ.1,361 கோடி, மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ.1,100 கோடி. இவ்வாறாக முக்கிய திட்டங்களுக்கு அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
மதுவிலக்கை அமல்படுத்தினால் ஏற்படும் இழப்பை அரசு வழங்கும் மானியங்கள் அல்லது இலவசங்களை குறைத்துவிட்டு ஈடுசெய்யலாம் என்று யோசனைகள் பல வழங்கப்படும் நிலையில் அரசு மேற்கூறியவற்றில் எவற்றை புறந்தள்ள முடியும் என்பதே அதிகாரிகளின் கேள்வி.
அரசு உயரதிகாரிகள் மட்டத்தில் கருணாநிதியின் அறிவிப்புக்கு பின்னால் மறைந்திருக்கும் அரசியலைப் பற்றி பேச யாரும் தயாராக இல்லை. இருப்பினும், "பூரண மதுவிலக்கு என்பது சாதியமில்லை அப்படியே அமல்படுத்தப்பட்டாலும் அது நீடித்திருக்குமா என்பதற்கு உத்தரவாதம் இல்லை" என்பதே அவர்கள் கருத்தாக இருக்கிறது.
7-வது ஊதியக்குழு:
7-வது ஊதியக்குழு பரிதுரை தயார் நிலையில் இருக்கிறது. அதன் அறிக்கை இந்த ஆண்டு இறுதியில் சமர்ப்பிக்கப்படலாம் எனக் கூறும் மாநில நிதித்துறை அதிகாரி ஒருவர், "7-வது ஊதிய குழு பரிந்துரை வரும் 2016 ஜனவரியில் இருந்து அமலுக்கு வரலாம். ஆனால் அதற்குள் மாநிலத்தில் புதிய அரசு பொறுப்பேற்றிருக்கும். புதிய அரசு பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கும். கடந்த முறையே அரசு மூன்று தவணைகளில் அரசு ஊழியர்களுக்கான நிலுவையைத் தொகையை வழங்க நேரிட்டது.
கடந்த முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது மாநில நிதித்துறைச் செயலர் கே.சண்முகம், தொழில் வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதால் மாநில அரசு கடுமையான நிதி சவாலை எதிர்கொண்டுள்ளது என ஒப்புக் கொண்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
14-வது நிதி ஆணைய பரிந்துரையில் தமிழகத்துக்கான மத்திய நிதியுதவிகள் மிகவும் குறைவாக இருக்கிறது என அரசு ஏற்கெனவே கூறி வரும் நிலையில், டாஸ்மாக்கால் இப்போது கிடைத்துவரும் வருவாயை இழப்பது என்பது மிகவும் கடினம்" எனக் கூறினார்.
எனவே மதுவிலக்கை அமல்படுத்துவது என்பது கொள்கை ரீதியாக ஏற்புடையதாக இருந்தாலும் நடைமுறை சாத்தியத்துக்கு அப்பாற்பட்டது என்பதே பல்வேறு நிபுணர்களின் கருத்தாகவும் இருக்கிறது.
திமுகவுக்கு அதிமுக பதில்:
அதிமுகவின் அதிகாரபூர்வ பத்திரிகையான டாக்டர் நமது எம்.ஜி.ஆரில் கூறப்பட்டிருப்பதாவது:
"1971-ல் மதுவிலக்கை ரத்து செய்ததன் மூலம் தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக்கொடுத்ததே திமுகதான். சுதந்திர போராட்ட வீரரும், சுவதந்தரா கட்சித் தலைவருமான ராஜாஜியின் கோரிக்கையை புறந்தள்ளிவிட்டு மதுவிலக்கை திமுக ரத்து செய்தது. ஆனால், இப்போது தேர்தல் ஆதாயத்துக்காக திமுக மதுவிலக்கை ஆயுதமாக எடுத்துள்ளது. கடந்த 1996-ம் ஆண்டும் திமுக இத்தகைய போலி வாக்குறுதியை அளித்தது. ஆனால் ஒரு சிறு கல்லைகூட நகர்த்திவைக்கவில்லை. 2006 தேர்தலின் போதும் அவர் இதே வாக்குறுதியை முன்வைத்தார்.
ஆனால், 1991-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது, தரமற்ற மதுவை விற்பனை செய்யும் கூடங்கள் மூடப்பட்டன. ஒரு கட்டத்தில் மதுவிற்பனையில் தனியார் ஆக்கிரமித்த நிலையில் அவற்றிற்கும் அதிமுக அரசுதான் முற்றுப்புள்ளி வைத்தது. மதுவிற்பனையை மாநில அரசின் மூலம் மேற்கொள்வதால் வருமானம் ஈட்ட வழிவகை செய்யப்பட்டது. கிரிமினல் குற்றங்கள் பெருக மதுக்கடைகள் கூடாரமாக இருந்தபோது, அதிமுக அவற்றை ஒழுங்குபடுத்தியதோடு, கள்ளச்சாராய விற்பனையையும் முடிவுக்கு கொண்டுவந்தது.
இருப்பினும் தமிழகத்தை மதுவற்ற மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதற்காக அதிமுக அரசு அறிவுசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், கருணாநிதியின் அறிக்கை தேர்தலை குறிவைத்தே வெளியிடப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது tamil.thehindu.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக