செவ்வாய், 21 ஜூலை, 2015

மாறன் / Suntv க்கு கிரேக்க வரலாற்று அறிஞர் வைகோவின் வக்காலத்து ! தீதும் நன்றும் பிறர்தர வாரா!

46070கிரேக்க வரலாற்றுப் பேராசிரியர் வைகோ, சன் குழும எப் எம் சேனல்கள் குறித்து இவ்வாறு பேசினார். ஜனநாயகத்தின் ஆணிவேரின் மீதே தாக்குதல் நடத்தும் விதத்தில் ஊடகங்களுக்கும், வானொலிக்கும் விலங்கு மாட்ட முயற்சிக்கும் மோடி அரசின் போக்கை எதிர்த்து, அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளும் குரல் கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார். 4 Rபாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் இதுபோல், பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதார குற்ற வழக்குகள் இருப்பதாலேயே ஓர் ஊடகத்தை முடக்க முடியும் என்றால், அரசுக்கு பிடிக்காத எந்த ஊடகத்தின் மீதும் வழக்கு தொடர்ந்து அந்த ஊடகத்தை முடக்கி விட முடியும் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். இது ஆபத்தான முன்னுதாரணம் என சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ், மத்திய அரசின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தன் பேரனின் சேனல்கள் முடக்கப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி “சன் குழுமம் போன்ற ஊடகங்களுக்கு மத்திய அரசு இது போல் அனுமதி மறுப்பது, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் கொடும் செயலாகும்” என்று கூறியுள்ளார்..

சன் குழும எப் எம் சேனல்களுக்கு அனுமதி மறுக்கப்படடுள்ளது, திமுக தலைவர் கருணாநிதி கூறியது போல ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதா ?
கேடி சகோதரர்களின் ஆக்டோபஸ் வளர்ச்சி ஒரே நாளில் ஏற்பட்டதல்ல.   படிப்படியாக, திமுக தொண்டனின் ரத்தத்தில் ஏற்பட்ட வளர்ச்சி அது.  அதிமுக இரட்டைப் புறா (ஜானகி), சேவல் (ஜெயலலிதா) என்று பிரிந்து கிடந்த நிலையில், மக்கள் தற்போது கருணாநிதிக்கு மாற்றாக ஜெயலலிதாவைத் தேர்ந்தெடுத்தது போலவே 1989ல் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தார்கள்.

அப்போதெல்லாம் கேபிள் டிவி என்பது உருவாகாத காலம்.   வீடு வீடாக வீடியோ, டெக் எனப்படும் வீடியோ கேசட் ப்ளேயர்கள் வலம் வந்து கொண்டிருக்கும்.  தூர்தர்ஷனில், The World This Week என்று முதன் முதலாக ஒரு நிகழ்ச்சியை பிரணாய் ராய் தொகுத்து வழங்குகிறார்.   ஏஷியா நெட்டின் சஷிகுமார் மேனன் அதன் தயாரிப்பாளர் என்று நினைவு. அந்த The World This Week நிகழ்ச்சி, வீடியோ ஜர்னலிசத்தின் மைல்கல் என்று தாராளாக சொல்லாம்.  அப்படி ஒரு தரமான நிகழ்ச்சியாக அது வந்து கொண்டிருந்தது.  அந்நிகழ்ச்சியின் வெற்றியைப் பார்த்து, வீடு வீடாக மாதப்பத்திரிக்கைகள் போடுவது போல, வீடியோ கேசட்டுகளை போடலாம் என்று ஒரு புதிய திட்டம் உருவாகுகிறது.  இந்தியா டுடே குழுமம் என்று நினைவு. ஆங்கிலத்தில் நியூஸ்ட்ராக் என்ற வீடியோ இதழை வெளியிடுகிறது.  அந்த வீடியோ கேசட், பரவலான வரவேற்பை பெறுகிறது. இந்த திட்டத்தை அப்படியே காப்பியடித்த கேடி சகோதரர்கள் பூமாலை என்று தமிழில் ஒரு வீடியோ மேகஸின் தொடங்குகிறார்கள்.  வீடியோ ஷுட் செய்வதற்கெல்லாம் அப்போது விலையுயர்ந்த கேமரா வேண்டும்.  படம் பிடிக்க கேமராமேன்களின் ஊதியம் மிக அதிகம்.   அதற்கு வேறு வழியின்றி செலவு செய்த கேடி சகோதரர்கள் செய்தி சேகரிப்பதற்கென தனியே ஊழியர்களை நியமிக்கவில்லை.  அப்போது கேடி சகோதரர்கள் நடத்திக் கொண்டிருந்த வண்ணத்திரை, முத்தாரம், குங்குமம் போன்ற இதழ்களின் ஊழியர்கள் இந்தப் பணியையும் சேர்த்துச் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்தப் பட்டனர்.   சம்பளம் கொடுக்கும் விஷயத்தில் கேடி சகோதரர்கள் எவ்வளவு கப்பித்தனமானவர்கள் என்பதை உங்கள் நண்பர்கள் சன் டிவியில் பணியாற்றினால் கேட்டுப் பாருங்கள்.
பூமாலை வீடியோ மேகசின் 1990ல் வெளியானதும், யாரும் அதைச் சீண்டவில்லை. விலை கொடுத்து கேசட்டுகள் தயாரித்து அதை யாருமே வாங்கவில்லை என்றால் நஷ்டத்தை எப்படி பொறுத்துக் கொள்வார்கள் கேடி சகோதரர்கள் ? இருக்கவே இருக்கிறது தாத்தாவின் காவல்துறை.   அப்போது தொழிலில் கொடிகட்டிப் பறந்தவை வீடியோ கேசட்டுகளை வாடகைக்கு விடும் கடைகள். அந்தக் கடைகளில் பூமாலை கேசட்டுகளை வாங்கி விற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது.  மறுக்கும் வீடியோ கடைகாரர்களின் கடைகளில் நீலப்படம் வைத்திருந்ததாக காவல்துறையின் திடீர் சோதனைகள் நடைபெற்றன.
1991ல் ராஜீவ் மரணத்தில் ஏற்பட்ட அனுதாப அலையால் பதவிக்கு வந்த ஜெயலலிதா ஆட்சியில், பூமாலை வாடி வதங்கி உதிர்ந்து போனது.  ஜெயலலிதா ஆட்சியில் கேடி சகோதரர்களின் திட்டங்கள் எடுபடவில்லை.
வட இந்தியாவில் சுபாஷ் சந்திரா ஜீ தொலைக்காட்சியைத் தொடங்குகிறார்.  சஷிகுமார் மேனன்,   வெளிநாட்டு வாழ் மலையாளிகளுக்காக நான்கு மணி நேர மலையாள நிகழ்ச்சியை தயாரிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெறுகிறார்.  இதே போல தமிழில் நான்கு மணி நேர நிகழ்ச்சி தயாரித்துத் தருமாறு, ஏற்கனவே பூமாலை நடத்திய அனுபவம் இருந்ததால் கேடி சகோதரர்களை நிகழ்ச்சித் தயாரித்துத் தருமாறு  கேடி சகோதரர்களின் டாடி முரசொலி மாறனிடம் கேட்கிறார்.  முரசொலி மாறனோ… நான் என்ன உனக்கு நிகழ்ச்சி தயாரித்துத் தருவது…. நான் நேரடியாகவே பேசிக் கொள்கிறேன் என்று சம்பந்தப்பட்ட வெளிநாட்டு தயாரிப்பு நிறுவனத்திடம் பேசி, புதிய தொலைக்காட்சிச் சேனலைத் தொடங்குவதற்கே வாய்ப்பு ஏற்படுத்துகிறார்.
DAYANIDHI__amp__KAL_952560f
சன் டிவி ஏப்ரல் 1993ல் உருவாகிறது.   சேனல் உருவானாலும், மாதற்தோறும் கொடுக்க வேண்டிய ட்ரான்ஸ்பாண்டர் வாடகையை சன் நிறுவனத்துக்கு வரும் வருமானத்தால் ஈடுகொடுக்க முடியவில்லை.  விளம்பரங்களும் போதிய அளவில் வரவில்லை.   கடன் வாங்கித்தான் சேனலை நடத்த வேண்டிய நிலை.  இந்தியன் வங்கியை அணுகினால், அவர்கள் அப்போது புதிதாக தொடங்கப்பட்ட சன் டிவிக்கு கடன் தர மறுத்து விட்டார்கள்.
கழகம் ஒரு குடும்பம் போன்றது என்று கருணாநிதி அடிக்கடி சொல்வது கருணாநிதியின் மனசாட்சியான முரசொலி மாறனுக்குத் தெரியாதா ?  திமுக உடன்பிறப்புக்கள் கட்சிக்காக கொடுத்த பல கோடி ரூபாய் நிதியை, மந்தைவெளியில் உள்ள கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கியில் முதலீடு செய்கிறார்கள்.  அந்த முதலீட்டின் பேரில் வாங்கிய கடனில்தான் சன் டிவி நடைபெற்றது.
வி.பி.சிங் அரசில் அமைச்சராக இருந்த முரசொலி மாறனுக்கு பல்வேறு தொழில் அதிபர்களோடு நெருக்கமான நட்பு ஏற்பட்டது. அந்த நட்பை பலமாகப் பயன்படுத்திக் கொண்ட மாறன், ஒரு தொழில் அதிபருக்கு பரிசாகக் கிடைத்த ட்ரான்ஸ்பாண்டரை தனக்குத் தரும்படி கேட்டுப் பெற்றுக் கொள்கிறார்.  அந்த ட்ரான்ஸ்பான்டர் மூலமாகத்தான் சன் ஒளிபரப்பப் பட்டது.  அப்போது இருந்த   ஜெ.ஜெ டிவி இது போன்ற தில்லாலங்கடி வேலைகள் தெரியாததன் காரணமாகத்தான் அந்நியச் செலாவணி மோசடியில் சிக்கினர்.  சன் டிவியின் பங்குதாரர்களாக தயாளு அம்மாள், முரசொலி மாறன், மல்லிகா மாறன், கேடி சகோதரர்கள் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.  சன் டிவியின் அலுவலகம், அறிவாலய அலுவலக வளாகத்திலேயே செயல்பட்டது.
சன் டிவி தொடங்கப்பட்ட பிறகு பெரிய அளவில் பிரகாசிக்க முடியாவிட்டாலும், தமிழில் தொடங்கப்பட்ட முதல் சேனல் என்பதால், அது ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றது.  தூர்தர்ஷனை விட்டால் வேறு சேனலே இல்லை என்பதால், அந்த இடத்தை சன் டிவி ஆக்ரமித்தது.     1991-1996 ஜெயலலிதா ஆட்சி, சன் டிவியின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவியது.  நீதிபதி மருமகன் மீது கஞ்சா வழக்குப் போட்டது, சந்திரலேகா ஐஏஎஸ் முகத்தில் ஆசிட் வீசியது, 100 கோடி ரூபாய் வளர்ப்பு மகன் திருமணம் போன்ற செய்திகளை தூர்தர்ஷன் கவல் செய்யாத காரணத்தால் சன் டிவியின் பக்கம் மக்கள் திரும்பினர்.  வளர்ப்பு மகன் திருமணத்தில் வீடியோ எடுத்தார் என்ற காரணத்தால், சன் டிவியின் கேமராமேன் கண்ணன் என்பவரை, ஜெயலலிதாவின் விசுவாசமான அடிமை விஜயக்குமார் ஐபிஎஸ் கைது செய்தார்.  இந்த விவகாரத்தை சன் டிவி பெரிய அளவில் எடுத்தச் சென்றதும் சன் டிவியின் வளர்ச்சிக்கு உதவியாக அமைந்தது.   தற்போது அதிமுகவின் அடிமைகள் சங்கத்தில் உறுப்பினராகி ராஜ்ய சபை எம்.பியாக இருக்கும் ரபி பெர்நார்ட், அப்போது சன் டிவியின் மிகப் பிரபலமான நிகழ்ச்சி நடத்துபவர்.
மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராக கேடி சகோதரர்களின் டாடி நியமிக்கப்பட்டதும், சன் டிவியின் விளம்பர வருவாய் பல மடங்கு பெருகியது.  தொழில் அதிபர்களை மிரட்டி, சன் டிவிக்கு விளம்பரம் தருமாறு நெருக்கடி தரப்பட்டது.
சன் டிவி தொடங்கிய ஒரு சில  ஆண்டுகளிலேயே பல்வேறு திரைப்படங்களின் உரிமையை வைத்திருந்த ராஜ் வீடியோ விஷன், ராஜ் டிவியை தொடங்கியது.  அப்போதெல்லாம் கேபிள் டிவி ஒளிபரப்புவதென்றால் வடை சுடும் சட்டியைப் போன்ற பெரிய டிஷ்களை வீட்டின் மாடியில் வைத்து, அதிலிருந்து கேபிளில் ஒளிபரப்ப வேண்டும்.   இலவசமாக பல்வேறு சேனல்களைக் கொடுத்துக் கொண்டிருந்த ஸ்டார் குழுமம், தங்கள் சேனல்களைப் பெறுவதற்கு பணம் கட்ட வேண்டும் என்ற பே சேனல் முறையைக் கொண்டு வருகிறது.  இந்த பே சேனல் முறை அமலுக்கு வந்ததும், வெறும் தொலைக்காட்சிச் சேனலை மட்டும் வைத்தால் போணியாகாது என்பது புரிந்த கேடி சகோதரர்கள், 2000 ஆண்டில் சுமங்கலி கேபிள் விஷன் என்ற கேபிள் விநியோக நிறுவனத்தை தொடங்குகிறார்கள். அது வரை தமிழகத்தில் கேபிள் விநியோகம் ஆங்காங்கே இருந்த சிறு சிறு ஆபரேட்டர்களால் தனித்தனியாக நடத்தப்பட்டுக் கொண்டிருந்தது.  இதை ஒருமுகப்படுத்தி சென்னை நகரில் பெரும்பாலான பகுதிகளில் கேபிள் டிவி சேவையை வழங்கிக் கொண்டிருந்தது ஹாத்வே என்ற நிறுவனம்.  ஹாத்வே நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டால், தங்கள் தொழிலுக்கு ஆபத்து என்பதைப் புரிந்த கேடி சகோதரர்கள், தமிழகமெங்கும் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களை அழைத்து,  தனித்தனியே தொழில் நடத்த வேண்டாம் எங்களோடு இணைந்து தொழில் நடத்துங்கள் என்று மிரட்டுகிறார்கள்.   கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு வேறு வழியே இல்லை.  தனித்தனியே அவர்களால் ஸ்டார் குழுமத்துக்கு பணம் கொடுக்க முடியாது.   இணைய மறுத்தால் தொழிலை மூடி விட்டுப் போக வேண்டும்.
ss
இணைய மறுக்கும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் காவல்துறையால் மிரட்டப்பட்டார்கள்.  தாத்தாவின் காவல்துறை கேடி சகோதரர்களின் சேவைக்கில்லாமல் வேறு எதற்கு ? ஹாத்வே நிறுவனத்தினர் உயர் அழுத்தக் கம்பி வட இணைப்பின் மூலம், கேபிள் மற்றும் இன்டெர்னெட் இணைப்பு கொடுக்க உத்தேசித்து அதற்கான வேலைகளில் இறங்கிய போது, அப்போது சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்த தங்கள் மாமா ஸ்டாலினை வைத்து,  அனுமதி மறுத்தனர்.  மீறி கேபிள் இணைப்பு கொடுக்கப்பட்ட இடங்களில் இணைப்புகள் அறுத்தெறியப் பட்டன. ஒரு சில ஆண்டுகளில், ஹாத்வே மொத்த கூடாரத்தையும் காலி செய்து விட்டு, சென்னையை விட்டே ஓடியது.
எஸ்.சி.வி மூலமாக தமிழகத்தின் ஒட்டுமொத்த கேபிள் சாம்ராஜ்யத்தையும் தங்கள் வலைக்குள் கொண்டு வந்தார்கள் கேடி சகோதரர்கள். தமிழில் சேனல் தொடங்க வேண்டுமென்றால் எஸ்.சி.வி நிர்ணயித்ததுதான் விலை.  அவர்கள் வைத்ததுதான் சட்டம்.  அதை மீறினால் சேனலுக்கு பெரிய பூட்டு போட வேண்டியதுதான்.   இவர்களின் அதிகாரத்தின் காரணமாக, தமிழில் தொலைக்காட்சிச் சேனல் தொடங்க முடியாமல் ஓடியவர்களின் பட்டியல் பெரியது.
முரசொலி மாறன் மறைவுக்குப் பிறகு 2004ல் மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதியில் யாரை நிறுத்தலாம் என்ற விவாதம் நடக்கிறது.  கருணாநிதி மத்திய சென்னைத் தொகுதியில் நிறுத்த விரும்பியது, கனிமொழியைத்தான்.   இரண்டாவது குடும்பத்தின் தொடர்ந்த நச்சரிப்புகள் காரணமாகவும், கனிமொழிக்கு அரசியல் ரீதியாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவுமே, கனிமொழியை அந்த இடத்தில் போட்டியிடச் சொன்னார்.   கனிமொழிக்கு அப்போது அரசியலில் ஆர்வம் இல்லை. இலக்கிய உலகில், ஒரு பெரிய இடத்துக்கு வரவேண்டும் என்பதையே தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருந்தார்.   தன் தந்தையைப் போல, தமிழ் பேசியே தமிழ்நாட்டை சூறையாடலாம் என்று திட்டமிட்டிருந்தாரோ என்னவோ தெரியவில்லை.  மத்திய சென்னைத் தொகுதியில் போட்டியிட விருப்பமில்லை என்று தெரிவித்து விட்டார்.  அந்த இடத்தை சின்னக் கேடி தயாநிதிக்குத் தர வேண்டும் என்று, சிஐடி காலனியிலேயே கேடி சகோதரர்கள் தவமாய்த் தவமிருந்தார்கள். அவர்கள் தவத்தின் பலனாக, ராசாத்தி அம்மாள் கேடி சகோதரர்களின் விஷத்தன்மை அறியாமல் அந்தப் பாம்புகளுக்கு பால் வார்த்தார்.
2004 பாராளுமன்றத் தேர்தலும் வந்தது.  ஜெயலலிதா “மிகச் சிறப்பான முறையில்” நடத்திய ஆட்சியால் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியின் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.   குறைவான சீட்டுகளையே பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்திருந்ததால், ஆட்சி அமைப்பதற்கும், தொடர்ந்து பதவியில் நீடிப்பதற்கும் திமுகவின் தயவிலேயே இருந்தது காங்கிரஸ்.   தனது எம்.பிக்கள் எண்ணிக்கையால், மத்திய அரசையே தன் விரலசைவில் வைத்தார் கருணாநிதி. கருணாநிதி சொன்னவர்தான் மந்திரி.  கருணாநிதி வேண்டிய இலாக்கா கொடுக்கப்பட வேண்டும். நினைத்ததை நடத்தினார் கருணாநிதி.
மத்திய மந்திரியாக தன் ரத்த சொந்தம் யாராவது ஆக வேண்டும் என்பதற்காக கருணாநிதி தேர்ந்தெடுத்த நபர்தான் தயாநிதி மாறன்.  கட்சியில் எவ்வளவோ மூத்தவர்கள் இருக்க, இப்போதுதான் கட்சியில் சேர்ந்த தயாநிதி மாறனை கேபினெட் மந்திரியாக்க பரிந்துரைக்கிறீர்களே என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, கருணாநிதி சொன்ன பதில் “விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப தயாநிதியின் திறமையை நான் சிறு வயதிலேயே பார்த்திருக்கிறேன் என்பதுதான்.”
The Minister for Communication & IT Shri Dayanidhi Maran and CMD Sun Network Shri Kalanidhi Maran presenting a cheque of Rs. 5.5 crore to Prime Minister Dr. Manmohan Singh towards PMNRF for Tsunami Victims in New Delhi on February 2, 2005.
The Minister for Communication & IT Shri Dayanidhi Maran and CMD Sun Network Shri Kalanidhi Maran presenting a cheque of Rs. 5.5 crore to Prime Minister Dr. Manmohan Singh towards PMNRF for Tsunami Victims in New Delhi on February 2, 2005.
அமைச்சர் பதவி கிடைத்தது  முதலே தங்கள் கைவரிசையை கேடி சகோதரர்கள் காண்பிக்கத் தொடங்கினர்.   இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாட்டாவையே மிரட்டினர்.  இன்று பிரபலமாக இருக்கும் டாட்டா ஸ்கை நிறுவனத்துக்கு தொழில் நடத்த லைசென்ஸ் வழங்காமல் அலைய விட்டார் தயாநிதி.   டாட்டா ஸ்கைக்கு முன்பாக, சன் டிடிஎச் தொடங்க வேண்டும் என்பதே அதற்கு காரணம்.   இந்த சன் டிடிஎச் நிறுவனத்தில்தான், 2ஜி ஊழல் வழக்கில் தொடர்புடைய மேக்சிஸ் நிறுவனம் ஏராளமான பணத்தை முதலீடு செய்தது.
கேடி சகோதரர்கள் தங்களின் சன் டிடிஎச் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் முதலீட்டை வரவழைப்பதற்காக, ஏர்செல் நிறுவனத்தை நடத்தி வந்த சிவசங்கரனுக்கு லைசென்ஸ் வழங்காமல் எத்தனை ஆண்டுகாலம் இழுத்தடித்தனர் என்பது ஊரறிந்த உண்மை.   இந்த முதலீட்டின் காரணமாகவே, தற்போது 2ஜி வழக்கை எதிர்நோக்கி உள்ளனர்.
இன்று கேடி சகோதரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அனைத்துக் கட்சிகளும், இவர்களின் கடந்த கால செயல்பாடுகளை வசதியாக மறந்துவிடுகின்றனர்.   சுமங்கலி கேபிள்ஸ் என்ற தங்களது கேபிள் தொடர்பு நிறுவனத்தை வைத்து, தமிழகத்தில் சேனல் நடத்த முயன்ற அனைத்து நிறுவனங்களுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கினர்.     மதுரை தினகரன் ஊழியர்கள் எரிப்புக்கு பின்னால், கேடி சகோதரர்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று கருணாநிதி அரசு கேபிள் தொடங்கினார்.    அந்த அரசு கேபிள் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட விலை உயர்ந்த கம்பி வடங்களை ரவுடிகளை விட்டு அறுத்து எரிந்தது யார் ?
ராஜ் டிவியை நடத்த விடாமல் அதற்கு கடுமையான அழுத்தம் கொடுத்தது யார் ?
விஜய் டிவி என்டிடிவி நிறுவனத்தோடு இணைந்து நடத்திய செய்தி ஒளிபரப்பை தடுத்தது யார் ?
சன் பிக்சர்ஸ் என்று ஒரு நிறுவனத்தை தொடங்கிவிட்டு, அனைத்து தமிழ்ப் படங்களையும் அடிமாட்டு விலைக்கு வாங்கி, திரைத் துறையையே நெருக்கடிக்கு உள்ளாக்கியது யார் ?
தினகரன் நாளிதழை ஒரு ரூபாய்க்கு தொடங்கி இதர அச்சு ஊடகங்களை நசுக்க முயன்றது யார் ?
இவை எல்லாவற்றையும் விட, அரசு தொலைபேசி இணைப்புகளை திருடி, கோடிக்கணக்கான பணத்தை பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படுத்தியது யார் ?
2009ம் ஆண்டு இந்த விவகாரம் வெளி வந்ததும், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரிந்த உயர் அதிகாரியை மிரட்டி, தயாநிதி மாறன் திருடவேயில்லை என்று அறிக்கை வெளியிட வைத்தது யார் ?
legal_notice_Page_6
legal_notice_Page_7
கேடி சகோதரர்கள் இந்தியாவிற்கே மிகப்பெரிய தீயசக்திகள். அவர்கள் மண்ணோடு மண்ணாக அழிவது காலத்தின் தேவை.   ஊடக சுதந்திரம் என்று இன்று குரல் கொடுப்போர், இப்படியொரு நெருக்கடி வரவில்லையென்றால் இதே கேடி சகோதரர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.   இவர்களை ஆதரிப்பது என்பது, பாம்புக்கு பால் வார்ப்பது போல.   தீட்டிய மரத்தில் கூர் பார்ப்பவர்கள் இந்த கேடி சகோதரர்கள்.
இவர்களும், இவர்களின் சன் குழுமமும் இன்று சந்திக்கும் நெருக்கடிகள் இவர்களின் செயல்பாடுகளின் காரணமாகவேயன்றி, வேறு காரணமல்ல.

தீதும் நன்றும் பிறர்தர வாரா.savukkuonline.com

கருத்துகள் இல்லை: