சனி, 25 ஜூலை, 2015

குமாரசாமியின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் மீது பூசப்பட்ட கரி! நீதித்துறையை என்கவுண்டர் செய்த ஜெயா + குமாரசாமி +தத்து.....

FL12_kumaraswamy_j_2418095m
M_Id_426903_TN_CM_Jayalalithaஇதோ அதோ என்று இருந்த அந்த மேல்முறையீடு விசாரணைக்கு திங்களன்று வர இருக்கிறது.    பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 27 அன்று வர இருந்தபோது, இருந்த பரபரப்போ, மே 11 அன்று கர்நாடக உயர்நீதிமனறத் தீர்ப்பு வர இருந்தபோது இருந்த பரபரப்போ, உச்சநீதிமன்றத்தில் வர உள்ள மேல் முறையீட்டுக்கு சுத்தமாக இல்லை.

அவ்வழக்கு கர்நாடகத்தில் இருந்த வரை, தினமும் அது குறித்து ஒரு மணிநேரம் விவாதிக்கும் பத்திரிக்கையாளர் கூட, “அதை விடுடா” என்று சலிப்போடு சொல்கிறார்.   ஊடகங்களிலும் இது குறித்த பரபரப்பு முற்றிலும் இல்லாமல் இருக்கிறது.  வாரமிருமுறை இதழ்களில் கூட இது குறித்த செய்திகள் குறைவாகவே இருக்கிறது.

நீதிமன்றங்களின் மீது மக்கள் முழுமையாக நம்பிக்கை இழந்து விட்டதையே இது காட்டுகிறது.   பணமும் செல்வாக்கும் இருந்தால், எத்தனை பெரிய வழக்காக இருந்தாலும் அதிலிருந்து வெளிவர இயலும் என்பதை ஜெயலலிதா ஆணித்தரமாக உணர்த்தி உள்ளார்.   லஞ்ச ஒழிப்புத் துறை ஜெயலலிதா மீது தொடர்ந்திருந்த வழக்கானது  விஞ்ஞானபூர்வமான முறையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு.   ஏறக்குறைய முழுக்க முழுக்க கணிதம் சார்ந்தது.  1991 முதல் 1996 வரை, ஜெயலலிதாவுக்கு 66.5 கோடி வருமானம் இருந்ததா இல்லையா என்பது மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டியது.  இப்படிப்பட்ட வழக்கிலேயே ஒரு நீதிபதி அப்பட்டமாக கண்ணுக்கு தெரியும் வகையில் ஒரு பிழையோடு தீர்ப்பளித்து, ஜெயலலிதாவை விடுதலை செய்திருக்கிறார்.    இதன் பிறகு, மேல்முறையீட்டில் அப்படி என்ன நடந்து விடப்போகிறது என்றே பலரும் கருதுகின்றனர்.
உச்சநீதிமன்றத்தில் இத்தீர்ப்பு சரி செய்யப்படுமா என்று பலரிடம் கேட்டதற்கு, பெரும்பாலானோர் நம்பிக்கை அற்றே பதிலுரைத்தனர்.
உச்சநீதிமன்றமோ, உயர்நீதிமன்றமோ, சம்பந்தப்பட்ட நபருக்குத் தகுந்தார்ப் போலத்தான்  வழக்கின் விசாரணை நடைபெறுகிறது.   அதிலும் பல நேர்வுகளில் ஆஜராகும் வழக்கறிஞரை வைத்தே தீர்ப்புகள் வருகின்றன.   வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளின் தன்மையும் தீர்ப்புகளில் பிரதிபலிக்கின்றன.   உதாரணமாக சென்னை உயர்நீதிமன்றத்தை எடுத்துக் கொண்டால், திமுகவுக்கு எதிரான வழக்கு நீதிபதி சி.டி.செல்வத்திடம் செல்கிறது என்றால், அது நிச்சயம் தள்ளுபடி என்று உறுதியாக கூறலாம்.    ஒரு பெரிய குற்றவாளியின் ஜாமீன் மனு நீதிபதி கர்ணனிடம் சென்றால், 100 சதவிகிதம் அவர் விடுதலை என்று உறுதியாக நம்பலாம்.     வழக்குகளில் உள்ள சட்ட நுணுக்கங்களின் அடிப்படையில் ஆராய்ந்து அலசி தீர்ப்பளிக்கும் நீதிபதிகள் வெகு குறைவே.
சாதாரண மனிதர்களைப் போன்ற அனைத்து விருப்பு வெறுப்புக்களும் இந்த நீதிபதிகளுக்கும் உண்டு.  ஒரு வழக்கறிஞரை பிடிக்காது என்றால், அந்த வழக்கறிஞர் தாக்கல் செய்யும் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்வது.   அவரை பிடிக்கும் என்றால், எல்லா வழக்குகளிலும் உத்தரவு பிறப்பிப்பது என்று இப்படித்தான் நீதிமன்றங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.    வழக்கில் சம்பந்தப்பட்டவர் ஜெயலலிதா என்றால், எழுந்து நின்று வழக்கை விசாரிக்கும் அளவுக்கு பணிவு காட்டும் நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பலர் உண்டு.  தற்போது இரண்டாவது மூத்த நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கும் சதீஷ் அக்னிஹோத்ரி இந்த வகையைச் சேர்ந்தவர்தான்.   அரசு தலைமை வழக்கறிஞர் சோமயாஜி ஆஜரானார் என்றாலே, அந்த வழக்கில் கண்ணை மூடிக்கொண்டு அரசுக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பிப்பது இவரது வழக்கம்.
இந்த வழக்கம் உச்சநீதிமன்றத்திலும் உண்டு.     ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததும், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.  அந்த வழக்கை விசாரித்தவர், தலைமை நீதிபதி தத்து. ஜெயலலிதா எப்படியாவது சிறையில் இருந்து வெளிவர வேண்டும் என்று, வீட்டுச் சிறையில் கூட இருக்கத் தயார் என்றே அவரது வழக்கறிஞர் வாதாடினார்.  அவரது வழக்கறிஞர் சோலி சோரப்ஜி, எப்படியாவது ஜெயலலிதாவை விடுதலை செய்ய வேண்டும் என்று மன்றாடினார்.
ஆனால் வழக்கை விசாரித்த தத்துவோ, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியதோடு, அவரது மேல் முறையீட்டு மனுவையும் நான்கு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.   இப்படியொரு வேண்டுகோளை ஜெயலலிதா தரப்பே வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்.  இப்படி கேட்காத வரத்தையெல்லாம் அளித்த தத்து, செய்திருக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்ன தெரியுமா ?  கூட்டல் பிழையோடு வெளிவந்த அந்த தீர்ப்பை சரிசெய்ய தானாக முன்வந்து வழக்கை எடுத்திருக்க வேண்டும்.   தன்னுடைய உத்தரவினால் இப்படியொரு தவறான தீர்ப்பு வெளியாகி, நீதித்துறைக்கு பெரும் களங்கம் ஏற்பட்டுள்ளதே என்று உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.  ஆனால், அதைப்பற்றி துளியும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் தத்து.
தற்போது செய்யப்பட்டுள்ள இந்த மேல் முறையீட்டையாவது, ஒரு உருப்படியான நீதிபதியிடம் அனுப்பி வைத்துள்ளாரா என்றால் இல்லை.  பினாகி சந்திர கோஷ் பற்றி உச்சநீதிமன்றத்தில் கேட்டால், வரும் தகவல்கள் ஆரோக்கியமானதாக இல்லை.  இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு வழக்கு திங்களன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
ஜெயலலிதா தரப்பிலோ மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.  கடந்த முறை இதே போல ஜெயலலிதா தரப்பு கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பை நம்பிக்கையோடு எதிர்ப்பார்த்தனர் என்று வந்த தகவலை, நமது நீதித்துறையின் மீது இருந்த நம்பிக்கை காரணமாக நம்பவில்லை. ஆனால், குமாரசாமிக்கு பிறகு, இதை நம்பித்தான் ஆக வேண்டும்.  நீதித்துறையின் மீது நம்பிக்கையோடு இருந்த இதயங்களில் ஈட்டி பாய்ச்சிவிட்டார் குமாரசாமி.
இந்திய நீதித்துறையானது மிக மிக அற்புதமாக உலகுக்கே வழிகாட்ட வேண்டிய ஒரு அமைப்பாக இருந்தது.   கேசவானந்த பாரதி வழக்கு அப்படிப்பட்ட ஒரு வழக்கு.  பிரபல வழக்கறிஞர் நைனி பல்கிவாலா வாதாடிய மூன்று முக்கிய வழக்குகளில் இந்திரா அரசுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டது.  கோலக்நாத் என்ற வழக்கு, வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட வழக்கு மற்றும் மன்னர் மான்ய ஒழிப்பு குறித்த வழக்கு ஆகிய வழக்குகளில் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டதால், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் அதிகாரத்தை குறைப்பது என்று இந்திரா முடிவெடுத்தார்.  இதையடுத்து, இந்த மூன்று தீர்ப்புகளையும் ரத்து செய்யும் வண்ணம் ஒரு சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வந்தார்.  இந்தத் தீர்ப்பின் பொருள் என்னவென்றால், பாராளுமன்றம் நினைத்தால், அடிப்படை உரிமைகளைக் கூட நீக்கி விடலாம் என்பதே.   இதை எதிர்த்து கேசவானந்த பாரதி மற்றும் சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.   இந்த வழக்கை விசாரிக்க மொத்தம் 13 நீதிபதிகள் அடங்கிய அமர்வு நியமிக்கப்பட்டது.  அந்த வழக்கில் பாராளுமன்றத்துக்கு எல்லா உரிமைகளும் உண்டு என்று ஆறு நீதிபதிகள் முடிவெடுத்தனர்.   அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை மாற்றுவதற்கு அரசுக்கு உரிமை இல்லை என்று ஏழு நீதிபதிகள் முடிவெடுத்தனர்.   அந்த ஏழாவது நீதிபதிதான் இந்திராவின் மிரட்டல்களுக்கு அடிபணியாத எச்.ஆர்.கண்ணா.
நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட பிறகு உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் எச்.என்.ரே.    தந்திரமாக கேசவானந்த் பாரதி தீர்ப்பை திருத்துவதற்காக மீண்டும் 13 நீதிபதிகள் அடங்கிய அமர்வை கூட்டினார் ரே.   இந்த வழக்கில் மீண்டும் நைனி பல்கிவாலா ஆஜராகி, வாதாடியபோதுதான், இந்த வழக்கை திருத்துவதற்காக யாருமே மனுத்தாக்கல் செய்யவில்லை என்பது தெரிய வந்தது. இந்த விவகாரம் வெளிவந்ததும், அந்த அமர்வு கலைக்கப்பட்டது.
இப்படி அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை ஷரத்துக்கள் அனைத்தையும் பாதுகாப்பதில், இந்திய நீதிமன்றங்கள் பெரும்பணி ஆற்றியுள்ளன.    அப்படிப்பட்ட நீதிமன்றங்களின் வாரிசுகளாகத் தான் இன்று குமாரசாமிகளும் ஏ.என்.ரேக்களும் உருவாகியுள்ளனர். நீதித்துறையின் களங்கங்களாக உள்ள இவர்களின் கையில்தான் இந்திய நீதித்துறையின் முகத்தையே மாற்றி அமைக்கும் வழக்கு உள்ளது என்பது, வேதனையானது.
இது குறித்து பேசிய ஒரு மூத்த பத்திரிக்கையாளர், “கர்நாடக அரசின் மேல் முறையீடு குறித்து தற்போது பரபரப்பு ஏதும் இல்லாமல் இருப்பது, இந்திய மக்கள், நீதித்துறையின் மீது ஒரு துளி கூட நம்பிக்கை வைக்கவில்லை என்பதையே காட்டுகிறது.  இதை சரி செய்ய வேண்டிய பொறுப்பு நீதித்துறையையே சாரும்.  செருப்பு தைப்பவன் முதல், ஐஏஎஸ் அதிகாரிகள் வரை, அனைவருக்குமான கடைசி நம்பிக்கையாக இருப்பது, இந்திய நீதிமன்றங்களே.   இந்த நம்பிக்கைக்கு வெளிப்படையான சவாலாக குமாரசாமியின் தீர்ப்பு அமைந்துள்ளது.  பணமும், வலுவும் உள்ளவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து நிச்சயம் தப்பித்து விடலாம் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது.    இப்படியொரு மோசமான நீதிப்பிறழ்வை இன்னும் எத்தனை நாளைக்கு உச்சநீதிமன்றம் வேடிக்கைப் பார்க்கப் போகிறது என்பது தெரியவில்லை.
SC 1ஜெயலலிதா மற்ற வழக்குகளைப் போல விடுதலை செய்யப்பட்டிருந்தால் இத்தகைய விவாதங்கள் ஏற்படப்போவதில்லை  ஆனால், முழுக்க முழுக்க முட்டாள்த்தனமான ஒரு தீர்ப்பு இது.   மொத்த உலகமும் நம்மைப் பார்த்து கைகொட்டிச் சிரிக்கும் நிலைக்கு நம்மை தள்ளியுள்ளது இந்தத் தீர்ப்பு.
இது ஜெயலலிதாவோ  அல்லது கருணாநிதியோ சம்பந்தப்பட்ட ஒரு தீர்ப்பாக பார்க்க முடியாது.  இந்திய ஜனநாயகத்தின் ஒரு தூணையே உளுத்துப் போகச் செய்த ஒரு தீர்ப்பு.   மேலும், இந்தத் தீர்ப்பைப் பயன்படுத்தி, இந்தியா முழுக்க பல்வேறு ஊழல் குற்றவாளிகள் தப்பிக்க பயன்படும் வகையில் அமைந்துள்ள தீர்ப்பு இது.
ஜெயலலிதாவின் பிடிக்குள் அடங்கி, இதையும் சரி என்று உச்சநீதிமன்றம் சொன்னாலும் வியப்பில்லை” என்றார்.
குமாரசாமியின் தீர்ப்பு நம் மீது பூசப்பட்ட கரி அல்ல.  உச்சநீதிமன்றத்தின் மீது பூசப்பட்ட கரி.  இந்தக் கறையை உச்சநீதிமன்றம் துடைக்குமா, அல்லது கறை நிலைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.savukkuonline.com

கருத்துகள் இல்லை: